இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை மேம்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் வரவேற்கிறது
இலங்கை அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிற்துறையின் உயர் அமைப்பான இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஆனது, தேசிய பொருளாதாரத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் துறையின் முக்கிய பங்கு தொடர்பில், அண்மையில் அதற்கு அங்கீகாரம் அளித்தமைக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கமானது, இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி மற்றும் மீள்ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பான, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையின் முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளமையானது, இச்சங்கத்தின் குரலுடன் இணைந்து வலுவாக எதிரொலிக்கிறது. இத் தொழிற்துறையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உகந்த சூழலை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றமையை சங்கம் மிகவும் வரவேற்கிறது.
ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கான தனது ஆர்வத்தை இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் உறுதிப்படுத்துகிறது. இத் தொழிற்துறையின் செழிப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட தேவைகளைப் புரிந்துகொண்டு அதனை நிறைவேற்றுவதில் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆர்வமாக உள்ளனர். இது தொடர்பில் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் அஜ்வார்ட் டீன் கருத்து வெளியிடுகையில், “இத் தொழிற்துறையின் உச்ச அமைப்பு எனும் வகையில், எமது தொழிற்துறையின் வளர்ச்சி, புத்தாக்கம், அதன் உலகளாவிய அங்கீகாரத்தை அடைவதற்காக, அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து மும்முரமாக ஒத்துழைக்க நாம் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் ஒன்றிணைந்து, எமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கான சூழலை எம்மால் உருவாக்க முடியும்.” என்றார்.
எதிர்வரும் 10 முதல் 15 வருடங்களில் இத்தொழிற்துறையின் வளர்ச்சிக்கான திட்டத்தை பட்டியலிட்டு வடிவமைக்கப்பட்ட தொழிற்துறையின் மூலோபாயத் திட்டமே, வளர்ச்சியுறும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் தூரநோக்கிற்கு அடித்தளமாக காணப்படுகின்றது. எதிர்வரும் வருடங்களுக்கான தனது பாதையை வடிவமைக்கும் ஒரு மைய மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக, இத் தொழிற்துறையால் மேற்கொள்ளப்படும் குறிப்பிடும்படியான முயற்சிகளை இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் வரவேற்கிறது. தற்போதுள்ள ஒழுங்குபடுத்தல் முறைகள் காரணமாக, ஏனைய வர்த்தகங்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயருகின்ற தற்போதைய போக்கு தொடர்பில் சங்கம் கூர்ந்து கவனித்து வருவதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையும் அதனைப் பின்பற்றுவதைத் தடுப்பது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முனைப்பான அணுகுமுறையை சங்கம் பாராட்டுகிறது.
குறைந்தபட்சம் 2 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயை அடையும் ஜனாதிபதியின் இலட்சிய இலக்கை அடைவதற்காக, சரியான கொள்கைகள் மூலம், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையின் உண்மையான திறனை வெளிக்கொணர முடியுமென சங்கம் உறுதியாக நம்புகிறது. இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் இந்த இலக்கை அடையக்கூடியதாக இருக்கும் என்றும், புத்துணர்ச்சி பெற்றுள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையானது சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் சங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
Recent Comments