Celeste Daily மற்றும் Uber Eats உடன் இணைந்து நுகர்வோரின் வசதியை மேம்படுத்தும் யூனிலீவரின் uStore.lk
யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் (Unilever Sri Lanka) உத்தியோகபூர்வ இலத்திரனியல் வர்த்தகத் தளமான uStore.lk, தனது வாடிக்கையாளர்களுக்கு பலசரக்கு பொருட்களின் கொள்வனவை மிகவும் வசதியாகவும் நம்பகமானதாகவும் சிறப்பாகவும் மாற்றும் முயற்சியில் Uber Eats மற்றும் Celeste Daily ஆகியவற்றுடன் சமீபத்தில் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மையானது, தற்போது uStore.lk தளத்தை சிரமமின்றி அணுகுவதற்கு Uber Eats மூலம் வசதியை ஏற்படுத்துகிறது.
வாடிக்கையாளர்கள் Uber Eats இல் உள்ள uStore.lk விற்பனை நிலையத்தை பார்வையிட்டு, பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம், uStore.lk இலுள்ள உயர்தர தயாரிப்புகளை தங்களது வீட்டுக்கே நேரடியாக வரவழைத்து பெற்றுக் கொள்ளலாம்.
நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் மட்டத்தை மேம்படுத்துவதற்கான யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் அர்ப்பணிப்பின் ஒரு அங்கம் எனும் வகையில், uStore.lk ஆனது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்னோக்கிய சிந்தனையுடன் இலத்திரனியல் வணிகத்தில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளது. 2019 இல் இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் மூலமான கொள்வனவை மிகவும் வசதியாக மாற்றும் வகையில், தொடர்ச்சியான பல மேம்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த சமீபத்திய திட்டமானது, விரைவு வர்த்தக சந்தையில் uStore.lk நுழைவதை அடையாளப்படுத்துகிறது. இந்த அடைவானது, அதன் பயணத்தில் ஒரு குறிப்பிடும்படியான மைல்கல்லாகும்.
இந்த மூலோபாய பங்காளித்துவம் தொடர்பில், யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் வாடிக்கையாளர் மேம்பாட்டு பணிப்பாளர் பாத்திய தயாரத்ன தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்கான அணுகல் மற்றும் நாட்டில் எமது பொருட்களுக்கான விநியோகத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட, uStore.lk இன் வளர்ச்சி தொடர்பான எமது இலக்கை ஆதரிக்கின்ற, Uber Eats மற்றும் Celeste Daily போன்ற விரைவு வர்த்தகத் துறையில் நம்பகமான பங்காளிகளுடன் இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். பெரும்பாலான நுகர்வோர் தமது வேலைப்பளு மிக்க வாழ்க்கையில், பலசரக்குப் பொருட்களை தங்கள் வீட்டுக்கே வரவழைத்துக் கொள்வதையே எதிர்பார்ப்பதால், ustore.lk கொண்டுள்ள அம்சங்களை மேம்படுத்தவும், கொள்வனவு அனுபவம் மற்றும் வசதியை அடிப்படையாகக் கொண்டு, பௌதிக தொடர்பற்ற எமது இணைய வர்த்தகத்தின் (“Pureplay”) இருப்பை வலுப்படுத்துவதற்காகவும், இதில் மேலும் முதலீடு செய்வதன் மூலம் இந்த போக்கை ஆதரிக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். இந்த கூட்டாண்மையானது தொடர்ச்சியாக பலமடைந்து வளர்வதைக் காண நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
Jaysons Group of Companies இன் அங்கமாக உள்ள Celeste Daily ஆனது, Uber Eats உடன் இணைந்து கடந்த 3 வருடங்களில் 50,000 வாடிக்கையாளர்களுக்கு, அதன் இயங்குதளத்தின் மூலம், தேவைக்கேற்ப பலசரக்குப் பொருட்களை வழங்கும் சில்லறை விற்பனை சந்தையில் முன்னோடியாக இருந்து வருகின்றது. Uber Eats இல் uStore.lk இன் தேவையைப் பூர்த்தி செய்யும் பங்குதாரராக உள்ள Celeste Daily ஆனது, இங்கு அத்தியாவசிய செயற்பாட்டு ஆதரவை வழங்குகிறது. இது அனைத்து கொள்வனவு கோரிக்கைகளும் சிக்கலின்றி திறனாக செயற்படுவதை உறுதி செய்கிறது.
அனுபவம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குவதில் Celeste Daily பெருமை கொள்கிறது, தயாரிப்புகளை தொடர்ச்சியாக சாதனை மிக்க நேரத்தில் வழங்குவதன் மூலம் பல வருடங்களாக அது இவ்வாறு வளர்ந்துள்ளது. Celeste Daily உடனான இந்த மூலோபாய கூட்டாண்மை மூலம், uStore.lk தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், அது அமைந்துள்ள அமைவிடத்திலிருந்தான சுற்றுவட்டத்திற்குள் 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வதை உறுதி செய்கின்றது. இது Celeste Daily குழுவின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். பகிரப்பட்ட உற்சாகத்துடன், Celeste Daily மற்றும் Unilever ஆகிய இரண்டும் விரைவான வர்த்தகத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான தங்கள் நோக்கத்தில் உறுதியுடன் உள்ளன, இந்த கூட்டாண்மையை வளர்ப்பதற்கும், தடுக்க முடியாத சக்தியாக வெளிப்படுவதற்குமான உறுதியான அர்ப்பணிப்பால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Jaysons Retail Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் Celeste Daily இன் ஸ்தாபகருமான ஜனிக் ஜயசூரிய தெரிவிக்கையில், “யூனிலீவர் ஸ்ரீ லங்கா மற்றும் Uber Eats உடன் இணைந்து, அதன் தயாரிப்புகளின் விரைவான விநியோகத்தையும் வாடிக்கையாளர் திருப்தியையும் உயர் மட்டத்தில் பேணுவதனை உறுதிப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நேரத்தை கடைபிடிப்பது மற்றும் துல்லியம் ஆகியன, Celeste Daily இன் வணிக நடைமுறைகளின் முக்கிய அம்சங்களாக இருப்பதாலும், தடையற்ற பொருட்கள் மற்றும் விநியோக முகாமைத்துவத்திற்கான ஒரு விரிவான தளத்தில் நாம் முதலீடு செய்துள்ளதாலும், uStore.lk இன் முயற்சிகளுக்கு இந்த அம்சங்கள் பெரும் பயனை வழங்கும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
இலங்கையின் Uber Eats பொது முகாமையாளர் வருண் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “Uber Eats ஆனது, நுகர்வோரின் வசதி தொடர்பில் ஒரு படி முன்னேற்றமான மாற்றத்தை வழங்கியுள்ளது. மேலும் இந்த கூட்டாண்மையானது இலங்கையில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு விருப்பமான தெரிவுப் பங்காளி எனும் எமது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எமது தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆதரவு தொகுதிகளை மேம்படுத்துவதன் மூலம், எமது கூட்டாளர்களுடன் நாம் தொடர்ச்சியாக மூலோபாய வாய்ப்புகளில் முதலீடு செய்து வருகிறோம். இந்த கருத்தாக்கத்திற்கு அமைய, யூனிலீவருடன் இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் Celeste Daily உடன் இணைந்து, யூனிலீவர் தயாரிப்புகளை தேவைக்கேற்ப கொள்வனவு செய்யும் திறனை நாம் நுகர்வோருக்கு வழங்குகிறோம்.” என்றார்.
உலகளாவிய போக்கிற்கு அமைய, வாடிக்கையாளர்கள் வணிகங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதன் மூலம், ஒன்லைன் கொள்வனவானது வேகமாகவும், அதன் அடிப்படையிலிருந்தும் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்த டிஜிட்டல் புரட்சியின் தலைவன் எனும் வகையில், தேவைக்கேற்ப உணவு மற்றும் பலசரக்குப் பொருட்கள் விநியோக சேவைகளுக்கான தரநிலையை Uber Eats நிறுவியுள்ளது. எனவே, இலத்திரனியல் வணிக தொழில்துறையானது, நுகர்வோர் வசதிக்கேற்ற வகையில் அதன் அம்சத்தை மாற்றியுள்ளது. வாடிக்கையாளர்கள் பரந்த அளவிலான பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதாக அணுக இது வசதியளிக்கிறது. இந்த மாற்றம் இலங்கை நுகர்வோரின் விருப்பங்களை பிரதிபலிப்பதோடு, டிஜிட்டல் உட்கட்டமைப்பின் முன்னேற்றம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட மக்கள்தொகை ஆகியவற்றுடன் ஒன்லைன் மூலமான கொள்வனவில் குறிப்பிடும்படியான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recent Comments