‘இரத்த அழுத்த மாநாடு 2026’ இனை அறிவித்த இலங்கை இரத்த அழுத்த சங்கம்

“உங்கள் அளவை அறிந்திடுங்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்”

இலங்கையில் அதிகரித்து வரும் இரத்த அழுத்தப் பாதிப்பு, அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், ‘Hypertension Society of Sri Lanka’ (இலங்கை இரத்த அழுத்த சங்கம்), Sri Lanka College of Internal Medicine (இலங்கை உள்ளக மருத்துவக் கல்லூரி) உடன் இணைந்து ‘Hypertension Summit 2026’ (இரத்த அழுத்த மாநாடு 2026) இனை அறிவித்துள்ளது. இலங்கையில் இரத்த அழுத்த பராமரிப்பை மேம்படுத்துவதற்காக, ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார நிபுணர்கள், ஏனைய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளின் நவீன விடயங்கள் குறித்து இந்த மாநாடானது விவாதிக்கவுள்ளது.

இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், இளவயது மரணம் ஆகியன ஏற்படுவதற்கான மிக முக்கிய ஆபத்தான காரணிகளில் ஒன்றாக இரத்த அழுத்தம் விளங்கி வருகிறது. தீவிரமான ஆரோக்கிய பாதிப்புகளைக் கொண்டிருந்த போதிலும், பலர் எந்தவித அறிகுறியும் இன்றி இந்த நோயுடன் வாழ்ந்து வருவதால், அது கண்டறியப்படாமலேயே போய்விடுகிறது.

“உங்கள் அளவை அறிந்திடுங்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்” (Know Your Numbers, Control Your Pressure, Protect Your Future) எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இந்த மாநாடானது, தடுப்பு முறைகளை வலுப்படுத்துதல், நோய் கண்டறிதல், சிகிச்சையை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறைக்குள் கூட்டு முயற்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.

இந்நிகழ்வு, இரத்த அழுத்த முகாமைத்துவம் தொடர்பான நவீன விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான ஒரு தளத்தை வழங்குவதோடு, சுகாதார நிபுணர்கள், நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வழங்குனர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தவுள்ளது.

இது குறித்து இலங்கை இரத்த அழுத்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரங்க மானில்கம கருத்துத் தெரிவிக்கையில், “இதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் ஒன்றாக உள்ள, இலகுவாக தடுக்கக்கூடிய இரத்த அழுத்தமானது, தங்களுக்கு இருப்பதை பலர் இன்னும் அறியாமலேயே இருக்கிறார்கள். இரத்த அழுத்த மாநாடு 2026 இன் குறிக்கோளானது, நோயாளிகளின் சிகிச்சை பெறுபேறுகளை மேம்படுத்துவதும், தடுப்பு முறைகளை வலுப்படுத்துவதும், சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே இலங்கையர்கள் தங்களது இரத்த அழுத்த அளவு குறித்து விழிப்புடன் இருப்பதை ஊக்குவிப்பதுமாகும்.” என்றார்.

ஆரோக்கியமான நபர்களுக்கு இரத்த அழுத்தப் பரிசோதனை தேவையில்லை, இரத்த அழுத்தம் முக்கியமாக முதியவர்களை மாத்திரமே பாதிக்கும், உயர் இரத்த அழுத்தம் ஒரு தீவிரமான நோய் அல்ல போன்ற, ஆரம்பகட்ட நோய் கண்டறிதலைத் தள்ளிப் போடுகின்ற பல தவறான கருத்துகள் தொடர்பிலும் இந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இரத்த அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், இதய ஆரோக்கிய பெறுபேறுகளை மேம்படுத்துவதற்குமான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘இரத்த அழுத்த மாநாடு 2026’ இல் நிபுணர்களின் கலந்துரையாடல்கள், விஞ்ஞான விளக்கக்காட்சிகள், கூட்டு உரையாடல்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

நீண்டகால ஆபத்தைக் குறைக்க உதவுவதற்காக, பொதுமக்கள் தங்களது இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதிக்குமாறும், அதன் அளவு அதிகமாக காணப்படுமாயின் மருத்துவ உதவியை நாடுமாறும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை தெரிவுகளைப் பின்பற்றுமாறும் இலங்கை இரத்த அழுத்த சங்கம் கேட்டுக்கொள்கிறது.

நீங்கள் அறியாத மிக முக்கியமான இலக்கம் உங்கள் இரத்த அழுத்த அளவாகும். அதனை மாற்றுவதை ‘இரத்த அழுத்த மாநாடு 2026’ நோக்கமாகக் கொண்டுள்ளது. 

END

Share

You may also like...