பேலியகொடையில் அதிவேக 60kW Dual-Gun EV சார்ஜிங் வசதியை இணைந்து அறிமுகம் செய்யும் Evolution Auto மற்றும் EVO Charge
இலங்கையில் மின்சார வாகனப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், Evolution Auto நிறுவனம் EVO Charge நிறுவனத்துடன் இணைந்து, பேலியகொடையில் உள்ள தனது விற்பனைக்குப் பின்னரான சேவை வளாகத்தில் (After Sales Complex) 60kW dual-gun DC அதிவேக சார்ஜிங் நிலையத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது.
இதற்கு முன்னர் இத்தகைய வசதிகள் இல்லாத ஒரு பகுதியில் அதிக திறன் கொண்ட அதிவேக சார்ஜிங் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்த முயற்சியானது நாட்டின் EV உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகின்றது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த சார்ஜர் வசதி மூலம் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களை சார்ஜ் செய்ய முடியும். இது EV பயனர்களின் வசதியை அதிகம் மேம்படுத்துவதுடன் சார்ஜ் செய்வதற்கு எடுக்கும் நேரத்தையும் குறைக்கிறது. இந்த வசதியானது தனிப்பட்ட பாவனையாளர்கள் மற்றும் வாடகை வாகன சாரதிகள், நிறுவனங்களின் வாகனங்கள் போன்ற வர்த்தக ரீதியான பயனர்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பாகவும், தொழில்முறை ரீதியாகவும் நிர்வகிக்கப்படும் சூழலில் 24 மணிநேரமும் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிமுகத்தைக் கொண்டாடும் வகையில், Evolution Auto ஒரு விசேட அறிமுகச் சலுகையையும் வழங்குகிறது. Evolution Auto வாடிக்கையாளர்கள் மே 20 ஆம் திகதி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரை தங்களது முதல் சார்ஜிங்கை முற்றிலும் இலவசமாகப் பெற்று மகிழலாம். அதே நேரத்தில் ஏனைய அனைத்து EV வாகன உரிமையாளர்களும் இதே ஊக்குவிப்புக் காலப்பகுதியில் சார்ஜிங் செய்வதற்கு 50% தள்ளுபடியைப் பெறுவார்கள்.
இலங்கை முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான மற்றும் எளிதாக அணுகக்கூடிய சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதியை பெறுவது தொடர்ச்சியாக ஒரு முக்கிய பிரச்சினையாக அமைகின்றது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், Evolution Auto நிறுவனத்தின் சமீபத்திய நிறுவலானது, குறிப்பாக பேலியகொடை போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் நகர்ப்புற பயணங்களை மேற்கொள்ளும் EV பயனர்களுக்கு ஒரு பயனுள்ள தீர்வாக அமைகிறது.
இந்த அறிமுகம் குறித்து Evolution Auto நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவைப் பிரிவின் தலைவர் நுரான் சில்வா தெரிவிக்கையில், “இந்த 60kW dual-gun அதிவேக சார்ஜிங் நிலையத்தின் ஆரம்பமானது, மின்சார வாகனப் போக்குவரத்திற்கு இலங்கை மாறுவதற்கு ஆதரவளிப்பதில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நம்பகமான, வேகமான மற்றும் எளிதாக அணுகக்கூடிய சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதிகள் அவசியமாகும். பேலியகொடை பிரதேசமானது இவ்வாறான தேவை கொண்ட ஒரு முக்கிய மூலோபாய ரீதியான இடமாகும். இந்த முயற்சியின் மூலம், நாட்டின் EV கட்டமைப்பு வளர்ச்சியடைய உதவுவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாகன உரிமைக்கான அனுபவத்தில் அதிக வசதியையும் நம்பிக்கையையும் வழங்க நாம் விரும்புகிறோம்.” என்றார்.
பேலியகொடை சார்ஜிங் நிலையமானது Evolution Auto நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவை வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இது போதிய இடவசதி, அணுகல் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுள்ளதுடன் பயனர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் (24/7) செயற்பாட்டில் இருப்பதால், வாகன சாரதிகள் நாளின் எந்தவொரு நேரத்திலும் நம்பகமான சார்ஜிங் ஆதரவை பெறலாம்.
பேலியகொடை பகுதியில் இத்தகைய முதலாவது அதிவேக சார்ஜிங் தீர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம், Evolution Auto மற்றும் EVO Charge ஆகிய நிறுவனங்கள், இலங்கையில் மின்சார வாகனங்களின் நடைமுறைத்தன்மை குறித்த பார்வையை மாற்றியமைப்பதுடன், சார்ஜ் செய்வது என்பது வினைத்திறன் மற்றும் எளிதில் அணுகக்கூடியது என்பதை நிரூபிக்கின்றது.
இந்த உட்கட்டமைப்பு வசதி திறந்து வைக்கப்பட்டதன் மூலம், நாட்டின் பசுமைப் போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை எளிதாக்குவதில் Evolution Auto நிறுவனம் முன்னணியில் நிலைநிறுத்தப்படுவதுடன், நிலைபேறான போக்குவரத்து மற்றும் காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான அது கொண்டுள்ள பாரிய முயற்சிகளுடன் ஒத்திசைகின்றது.
மேலதிக தகவல்களுக்கு: www.evolutionauto.lk எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.
END

Recent Comments