இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் புகழ்மிக்க 30 வருடங்களை கொண்டாடும் FACETS

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பு தொடர்பான பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 06 முதல் 08 ஆம் திகதி வரை பெருமைக்குரிய கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வானது, இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் விசேடத்துவத்தை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற 30 வருட நிறைவைக் குறிக்கிறது.

இந்நிகழ்வு தொடர்பில் ஆர்வமாக செயற்பட்டு வரும் FACETS Sri Lanka கண்காட்சியின் தலைவர் அல்தாஃப் இக்பால் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “இந்த நிகழ்ச்சி இலங்கைக்கானது என்பதை FACETS எப்போதும் வலியுறுத்துகிறது. இது எமது இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் செழுமை மிக்க பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. உலகம் முழுவதிலுமிருந்து கொள்வனவாளர்களை நாம் இங்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.  அத்துடன் எதிர்வரும் ஆண்டுகளில் FACETS உலகெங்கிலும் இருந்தும் பங்கேற்பாளர்களை அதிகரிப்பதன் மூலம், நேர்த்தியான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களை அவர்களிடையே பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறது.” என்றார்.

FACETS 2024 கண்காட்சியானது, இலங்கையின் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண பாரம்பரியத்தின் சாரத்தை காண்பிக்கும் பல கூடங்களைக் கொண்ட ஒரு கண்கவர் கண்காட்சியாக அமையும் என்பதை உறுதியளிக்கிறது. இந்த மாபெரும் நிகழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளாக Premier Gem Pavilion, Premier Jewellery Pavilion, Sustainable Pavilion, Sapphire Masterpiece Pavilion, Gem Lab Pavilion, NGJA SME Pavilion, SLGJA Gem and Jewellery Pavilion ஆகியன அமைந்திருக்கும்.

FACETS 2024 கண்காட்சியின் சிறப்பம்சமாக, இலங்கையில் முதன்முதலாக இடம்பெறும் Sapphire Masterpiece Pavilion அமையவுள்ளது. கவர்ச்சிகரமான நீலம், அலெக்ஸாண்ட்ரைட், மரகதம் உள்ளிட்ட பல்வேறு இரத்தினக்கற்களை உள்ளடக்கிய பல்வேறு வகைகளில் அமைந்த இலங்கையின் இரத்தினக்கற்களை காட்சிப்படுத்தும் வகையில் இந்த கூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இடம்பெறாத வகையில், இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட வெட்டப்படாத கரடுமுரடான இரத்தினக்கற்கள் மற்றும் வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்ட கற்கள் ஆகியன இந்த காட்சிக் கூடத்திற்கு தனித்துவத்தை ஏற்படுத்துகிறது. இந்த அற்புதமான அணுகுமுறையானது, வரலாற்றில் முதன்முறையாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஒன்றில், இரத்தினக்கற்களை அவற்றின் வெட்டப்படாத, ஆரம்ப வடிவத்திலும் அவற்றை நேர்த்தியாக வெட்டி, தூய்மைப்படுத்தி, பளபளப்பாக்கப்பட்ட வடிவங்களிலும் காட்சிப்படுத்துகிறது.

நிலைபேறான நடைமுறைகளை நோக்கிய பாதையின் அடிப்படையில், FACETS 2024 கண்காட்சியானது இலங்கையில் முதன் முதலாக Sustainability Pavilion கூடத்தை அறிமுகப்படுத்துகின்றது. இந்த அற்புதமான முயற்சியானது, உலகெங்கிலும் உள்ள பங்கேற்பாளர்களை கவர்வதை நோக்கமாக கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது இரத்தினக்கற்கள் தொடர்பான அறிவை வழங்குவது மற்றும் இலங்கை இரத்தினக்கல் தொழில்துறையின் வளமான வரலாறையும், நெறிமுறை ரீதியான நடைமுறைகளை பேணுகின்ற அதன் நவீன அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தனித்துவமான தோற்றத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூடமானது, நெறிமுறை மூலாதாரத்தின் முக்கியமான அம்சத்தை வெளிப்படுத்தும் என்பதோடு, குறைந்த அளவிலான சூழல் தாக்கத்துடன், உள்ளூர் சமூகத்திற்கு உச்சபட்ச நன்மைகளை வழங்கி, இரத்தினக்கற்கள் எவ்வாறு நுணுக்கமாக பெறப்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டும். இது நியாயமான வர்த்தக நடைமுறைகள், உற்பத்தி முறைகள் மற்றும் பொறுப்பான சுரங்க அணுகுமுறைகளை விளக்கும் என்பதோடு, சுரங்கத்தின் சூழல் தாக்கங்கள் மற்றும் சுரங்க நிலங்களை அவற்றின் இயற்கையான நிலைகளுக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு முயற்சிகளை வலியுறுத்துகிறது.

FACETS கண்காட்சி அதன் 30ஆவது வருடத்தில் பிரவேசிக்கும் இவ்வேளையில், இலங்கையின் பெறுமதிமிக்க இரத்தினங்களின் பொக்கிஷங்களின் அழகு, பன்முகத்தன்மை, நிலைபேறான தன்மையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இக்கண்காட்சி தொடர்ச்சியாக திகழ்ந்து வருகிறது.

2024 ஜனவரி 06 முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெறும் FACETS கண்காட்சியை பார்வையிடுவதன் மூலம், இலங்கையின் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களின் உண்மையான அழகை அனுபவியுங்கள்.

Image Caption – FACETS Sri Lanka 2024 கண்காட்சியின் தலைவர், அல்தாஃப் இக்பால்

Share

You may also like...