ஒப்பிடமுடியாத சாதனைகள், புத்தாக்கம், நிலைபேறான தன்மையுடன் கால் நூற்றாண்டை பூர்த்தி செய்த Variosystems Sri Lanka

இலங்கையில் 25 ஆண்டுகால ஒப்பிட முடியாத சிறப்பான சேவையுடன் சிறந்து விளங்கும் Variosystems, அதன் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், படல்கமவில் அமைந்துள்ள அதன் 3ஆவது அதிநவீன உற்பத்தி நிலையத்தின் திறப்பை பெருமிதத்துடன் அறிவிக்கிறது. இந்த மைல்கல்லானது, புத்தாக்கம், நிலைபேறானதன்மை மற்றும் செயற்பாட்டுச் சிறப்பு ஆகியன தொடர்பான நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த திறப்பு விழாவில் கருத்து வெளியிட்ட, Variosystems நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Stephan Sonderegger, “படல்கம உற்பத்தி நிலையமானது எமது தூரநோக்கின் மையப் பகுதியாகும். உள்ளூர் விநியோகச் சங்கிலிகள், போட்டி விலைகள் மற்றும் உலகளாவிய தரங்களுடன், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு நாம் ஆதரவளிக்க விரும்புகிறோம். ‘முன்னணி புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை இணைந்து உருவாக்குதல்’ எனும் எமது குறிக்கோளுக்கு அமைவான இந்த வசதி விரிவாக்கத்தின் மூலம், வளர்ந்து வரும் ஆசிய சந்தையிலும் உலகளாவிய இலத்திரனியல் விநியோக சங்கிலியிலும் எமது இருப்பை வலுப்படுத்துகிறோம்.” என்றார்.

Variosystems Sri Lanka வின் புதிய அதி நவீன கட்டடமானது, உற்பத்தி திறன்களில் ஒரு முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. படல்கமவில் அமைந்துள்ள இந்த அதிநவீன தொழிற்சாலையானது, 30,000 சதுர மீற்றர் பரப்பளவில், நிறுவனத்தின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக மாற்றுகிறது. இந்த விரிவாக்கமானது, சுவிட்சர்லாந்தில் உள்ள Steinach தலைமையகத்துடனான உலகளாவிய இலத்திரனியல் சேவை பங்குதாரராக Variosystems இன் நிலையை உறுதிப்படுத்துகிறது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த தொகுதியானது, முற்றாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் இயக்கப்படுவதன் மூலம் புதிய தொழில்துறை அளவுகோல்களை ஏற்படுத்தியுள்ளது. மேம்பட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பானது, அதிகரித்த திறன் மற்றும் குறைந்த உற்பத்தி நேரத்தை உறுதி செய்கிறது. குறைந்த கழிவு வெளியேற்றத்துடன் அதிகரித்த உற்பத்திக் கொள்கைகளுக்கு இணங்கும் இதன் கட்டட வடிவமைப்பானது, செயன்முறைகளை நெறிப்படுத்துவதோடு, தொழிற்பாட்டு செயற்றிறனை அதிகரிக்கிறது. 23,000 கன மீற்றர் சேமிப்பு இடத்தைக் கொண்ட மையப்படுத்தப்பட்ட கிடங்கை இது கொண்டுள்ளது. அது மூன்று கட்டடங்களின் உற்பத்திக்கான இடத்தை வழங்குகிறது. மூலோபாய ரீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கிடையிலான இணைப்புப் பாலங்கள் மூலம் பொருட்கள் மற்றும் மக்களின்  சிறப்பான நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Variosystems Sri Lanka தனது செயற்பாட்டு நெறிமுறைகளின் மையத்தில் நிலைபேறான தன்மையை பேணுகின்றது. இந்த மூன்றாவது கட்டடமானது, வளங்களை மேம்படுத்துதல் மற்றும் சூழலைப் பாதுகாப்பதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. சூரிய மின்கலத் தொகுதிகள், சிறந்த மின்சக்தி திறன் கொண்ட மின்விளக்குகள், நீர் பாதுகாப்பு அம்சங்கள், அதிநவீன கழிவு முகாமைத்துவ தொகுதிகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த தொழிற்சாலையானது, எதிர்கால சந்ததியினருக்காக பூகோளத்தைப் பாதுகாப்பதில் Variosystems நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

Variosystems Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் (நாட்டுக்கான முகாமையாளர்) தேவன் சதீஸ்வரன் இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது புதிய 3ஆவது அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் எதிர்வரும் மூன்று வருடங்களில் உள்ளூர் சமூகத்திலிருந்து 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். எமது எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளதோடு, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்திலான தயாரிப்புகள் மற்றும் சேவைத் தரத்தை வழங்குவதற்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைபேறான நடைமுறைகளை நிலைநிறுத்துவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

Variosystems, இலங்கையில் தனது 25 வருட பயணத்தை கொண்டாடும் வகையில், கடந்த நவம்பர் 24ஆம் திகதி ஒரு விழாவை நடத்தியிருந்தது. இந்நிகழ்வில் ஏழு நிறைவேற்று தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1,300 பணியாளர்கள் மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் Siri Walt, முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, நிதி அமைச்சு, படல்கம தொழில்துறை சங்கம், பொலிஸ் திணைக்களம், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், சேவை பங்காளிகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

சுவிட்சர்லாந்து தூதுவர் Siri Walt இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் தனது 25 வருட அனுபவம் மற்றும் நிலையான வளர்ச்சியுடன், சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவத்திற்கு Variosystems ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பிராந்தியத்திற்கும் அதன் மக்களுக்கும் அதன் சமூக ரீதியான மற்றும் நிலைபேறான அர்ப்பணிப்பின் மூலம், இலங்கையின் பொருளாதாரத்தில் நிறுவனம் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.” என்றார்.

கடந்த நவம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் (PEA) Variosystems Sri Lanka இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்றமையானது, இந்த கொண்டாட்டத்துடன் இணைந்த ஒரு உச்சக்கட்ட நிகழ்வாக அமைந்தது. இங்கு நிறுவனம் 2022/2023 ஆம் ஆண்டிற்கான Best Value-Added Exporter ஆக கௌரவிக்கப்பட்டதோடு, சிறந்த ஏற்றுமதியாளர் பிரிவில் 2019 முதல் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக இம்முறையும் இலத்திரனியல் மற்றும் மின்னியல் தயாரிப்புகளில் துறைசார் வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டமை கூறுப்பிடத்தக்கது.

இந்த பாராட்டுக்களுக்கு அப்பால், இலங்கை முதலீட்டு சபையினால் (BOI) Variosystems Sri Lanka நிறுவனத்திற்கு Green Channel அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட 126 விண்ணப்பங்களில், 35 நிறுவனங்கள் மாத்திரமே இந்த விசேட அந்தஸ்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இது செயற்பாட்டு செயன்முறைகளை ஒழுங்குபடுத்துவதோடு, விரைவான கப்பல் போக்குவரத்து செயன்முறையை எளிதாக்குகிறது. இந்த அங்கீகாரமானது, Variosystems Sri Lanka நிறுவனத்தின் சிறந்த செயற்றிறன் மற்றும் தொழில்துறையில் அதன் மதிப்புமிக்க நிலைப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். நிறுவனம் தொடர்ச்சியாக புதிய உயரங்களை அடைந்து வரும் வேளையில், உலகளாவிய இலத்திரனியல் துறையில் புத்தாக்கம், நிலைபேறானதன்மை மற்றும் சிறந்து விளங்குவதற்கான ஒரு கலங்கரை விளக்கமாக அதன் நிலையை இந்த சாதனைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

Variosystems பற்றி

சுவிட்சர்லாந்தின் ஸ்டெயினச்சில் அமைந்துள்ள Variosystems AG ஆனது, இலத்திரனியல் தீர்வுகளுக்கான உலகளாவிய சேவைப் பங்காளியாகும். 1993 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், 300 மில்லியன் சுவிஸ் பிராங் அளவான விற்பனையை மேற்கொள்கிறது (2022). Variosystems ஆனது, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இலங்கை, சீனா, குரோஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2,500 இற்கும் அதிக ஊழியர்கலுடன் இயங்கி வருகின்றது. விமானப் போக்குவரத்து, மருத்துவத் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் தொழில்துறைகள், உயர்ந்த நிலையிலான நுகர்வோர் இலத்திரனியல் தயாரிப்புகள் போன்றவற்றில், இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் தீர்வுகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...