தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள யூனிலீவர் ஸ்ரீலங்கா

     பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களை வலுவூட்டுவதற்குமான அர்ப்பணிப்புடன், நாடளாவிய ரீதியில் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்காக, யூனிலீவர் ஸ்ரீலங்கா ஆனது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த முன்முயற்சியானது தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் இளைஞர்களுக்கான எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறுதியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை மேற்கொள்வதையும் இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இலங்கை இளைஞர்களை, ஒரு நோக்கத்தைக் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழிலைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, யூனிலீவர் ஸ்ரீலங்கா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து முதலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 350 இற்கும் அதிக பங்கேற்பாளர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்தவுள்ளது. இத்திட்டம் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படும். தொழில் வல்லுநர்களைச் சந்திப்பதற்கும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் ஒரு தொழிலைத் தொடர்வதற்கான அறிவுடன் தெளிவான தொழில் நோக்கங்களை நிறுவுவதற்கான வழிகாட்டல்களை பெறுவதற்கான வாய்ப்பை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். இப்பட்டறைகளைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் (SLIM) 6 மாத விற்பனை தொடர்பான பாடநெறியில் இணைவதற்கு தெரிவு செய்யப்படுவார்கள். சிறந்த ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கும் கற்றல் அனுபவத்தை ஊக்குவிப்பதற்குமாக, பாடநெறிக் கட்டணத்தில் ஒரு பகுதியானது யூனிலீவர் ஸ்ரீலங்காவினால் பங்களிப்புச் செய்யப்படுவதோடு, 3 மாத விரிவுரை பங்கேற்பை நிறைவு செய்த பின்னர், பங்கேற்பாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.

இப்புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வில் கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறைவேற்றுப் பணிப்பாளர் அநுராதா ரஸ்தான் கருத்து வெளியிடுகையில், “நிலைபேறான வாழ்க்கையை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றுவதற்கான எமது வர்த்தகநாம நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, யூனிலீவரின் சமூக அர்ப்பணிப்பானது, ஒரு நியாயமான மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய உலகை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள 10 மில்லியன் இளைஞர்களின் திறமையை மேம்படுத்துவதும், அத்தியாவசிய திறன்களுடன் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதும் அத்தகைய ஒரு உறுதிப்பாடாகும். அரசாங்கமோ அல்லது தனியார் துறையோ தனியாக இதைச் செய்ய முடியாது. எனவே எமது இளைஞர்களுக்கு இந்த வாய்ப்புகளை வலுப்படுத்த பல்வேறு குழுக்களிடையேயான ஒத்துழைப்பும் முக்கியமானதாகும்.” என்றார்.

யூனிலீவர் ஸ்ரீலங்காவின் மனிதவளப் பணிப்பாளர் அனன்யா சபர்வால் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட போது, “யூனிலீவர் ஸ்ரீலங்கா ஆகிய நாம் 2025 ஆம் ஆண்டளவில் 100,000 இளைஞர்களின் வாழ்க்கையுடன் இணைய நாம் உறுதி பூண்டுள்ளோம். இது நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, மாணவர்களின் ஈடுபாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இங்கு தொழில்துறை வெளிப்பாட்டிற்கான ULearn போன்ற தனித்துவமான வேலைவாய்ப்பு திட்டமாதிரிகளை நாம் வழங்குகிறோம். இந்த வேளையில் இந்த ஒத்துழைப்பை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். யூனிலீவர் ஸ்ரீலங்காவுக்கும் இளைஞர் விவகார அமைச்சுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பங்காளித்துவமானது, பாடசாலை கல்வியை முடித்தவர்களைச் சென்றடைவதுடன், ‘யூனிலீவருக்கு வெற்றி, இலங்கைக்கு வெற்றி’ எனும் எமது தாரகமந்திரத்தை வாழச் செய்வதற்கான சிறந்த வழியாகும்.” என்றார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி, “நாம் 85 வருடங்களாக இலங்கையில் வேரூன்றி உள்ளோம். எமது வர்த்தக நாமங்களின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பதை நாம் அறிவோம். யூனிலீவர் ஸ்ரீலங்கா ஆகிய நாம், நெருக்கடியான வேளையில், தேசத்திற்கு சேவை செய்வதும், தேசத்திற்காக முன்னிற்பதும் எமது கடமை என்பதை அறிவோம். எனவே நாம் தொழிற்சாலைகளில் முதலீடுகளைச் செய்துள்ளோம், மேலும் இந்த கூட்டாண்மை மூலம் எமது இளைஞர் தலைமுறையை மேம்படுத்துவதிலும் முதலீடு செய்துள்ளோம்.” என்றார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது தேசத்தின் இளைஞர்களை மேம்ப்படுத்தும் பணியில் கூட்டாக இணைந்து செயற்படும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் யூனிலீவர் ஸ்ரீலங்கா ஆகிய நிறுவனங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வெற்றி மற்றும் வளர்ச்சியைக் காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமாகும். பல நாடுகளில் யூனிலீவர் தனது வணிகத்தை மேம்படுத்துவது தொடர்பில் பல்வேறு சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டுள்ளது என நான் நம்புகிறேன். இதன் மூலம் எமது இளைஞர்களுக்கு அறிவாற்றல் வளம் கிடைக்கும். அரசாங்கம் இந்த முயற்சியை முழுமையாக ஆதரிப்பதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான கூட்டாண்மைகளையும் எதிர்பார்க்கிறது.” என்றார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் அதன் பணிப்பாளர் நாயகமுமான பசிந்து குணரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “யூனிலீவர் ஸ்ரீலங்காவுடன் இணைந்து, இளைஞர்களை வலுவூட்டும் ‘தாருண்யட்ட அருத்தக்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவதை அறிவிப்பதில் நாம் பெருமிதமடைகிறோம். இத்திட்டமானது, வணிகத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் வாய்ந்த சந்தைப்படுத்துபவர்களின் புதிய தலைமுறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்தைப்படுத்தலில் விலைமதிப்பற்ற பயிற்சி மற்றும் நடைமுறை அனுபவத்தின் மூலம், இளைஞர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தவும், தங்களுக்கும் ஏனையோருக்கும் வாய்ப்புகளை உருவாக்கவும் நாம் இதன் மூலம் அதிகாரமளிக்கிறோம். யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தளராத ஆதரவிற்கும் எமது இளைஞர்களின் ஆற்றல் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

Ends

Photo Caption

யூனிலீவர் ஸ்ரீ லங்கா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இடமிருந்து வலமாக: தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பயிற்சி பணிப்பாளர் ரஷித்த தெலபொல, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நிர்வாக பணிப்பாளர் மனுல பெரேரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறைவேற்று பணிப்பாளர் அநுராதா ரஸ்தான், யூனிலீவர் ஸ்ரீலங்கா வாடிக்கையாளர் மேம்பாட்டுப் பணிப்பாளர் பாத்திய தயாரத்ன, யூனிலீவர் ஸ்ரீலங்காவின் மனித வளப் பணிப்பாளர் அனன்யா சபர்வால், யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி

Share

You may also like...