2023 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் கருப்பொருள்: ‘அவளே தேசத்தின் பெருமை’
சர்வதேச மகளிர் தினம் வருடாந்தம் மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களது நல்வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில், 1978 ஆம் ஆண்டு முதல் மகளிர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்று வருவதோடு, அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு கருப்பொருளை மையப்படுத்தி கொண்டாட்டம் இடம்பெற்று வருகிறது.
இலங்கை தற்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நாட்டிலுள்ள பெண்கள் தொடர்ச்சியாக வலிமை மற்றும் மீளெழுச்சித்தன்மையை வெளிப்படுத்தி முன்னோக்கி பயணிப்பதன் மூலம், மரியாதையையும் பாராட்டையும் பெறுகின்றனர். அந்த வகையில், இவ்வருட மகளிர் தின கொண்டாட்டம், இலங்கைப் பெண்களின் குறிப்பிடும் படியான சாதனைகளை கௌரவிக்கும் பொருட்டு ‘அவளே தேசத்தின் பெருமை’ எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகின்றது.
இது தொடர்பான நிகழ்வு 2023 மார்ச் 08 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெறவுள்ளது. இலங்கையில் உள்ள பெண்களை வலுவூட்டுவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கைப் பெண்களின் கருணையையும், நேர்த்தியையும் உலக அளவிலும் உள்ளூரிலும் வெளிப்படுத்திய மூன்று ஒப்பற்ற பெண்களுக்கு விருது வழங்கப்படுவது இந்நிகழ்வின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக இடம்பெறவுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு பெண்கள் வழங்கும் மகத்தான பங்களிப்பை நாம் அங்கீகரித்து பாராட்டுவதோடு, அவர்களுக்கு அங்கீகாரமளிப்பது நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் உத்வேகமாக அமையும் என நம்புகின்றோம். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ரீதியாக சிறந்து விளங்கும் 25 பெண் தொழில்முனைவோருக்கு அங்கீகாரமளித்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் இலங்கைப் பெண்கள் கணிசமான முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், சில பெண்களின் உரிமைகள் இன்னும் மறுக்கப்படுவதையும், அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுவதையும் நாம் அவதானிக்கிறோம். எனவே, இலங்கையில் பெண்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கான நீண்ட கால மூலோபாயத்தை தயாரிப்பது தொடர்பான பணிப்புரையை உரிய அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்துள்ளார். இந்நிகழ்வில் அது வெளியிடப்படவுள்ளது.
இந்த கொண்டாட்டமானது, இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் என்பதோடு, இது இந்நிகழ்விற்கு மேலும் மெருகூட்டும். இந்த நிகழ்விற்கு அரசாங்க நிதி எதுவும் பயன்படுத்தப்படாது என்பதோடு, UNFPA உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இதற்காக நாம் தாராளமான நன்கொடைகளைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னோக்கிச் செல்வதன் மூலம், இலங்கையில் உள்ள பெண்களை வலுவூட்டுவதில் நாம் உறுதியாக இருக்கிறோம். மேலும் இந்த ஒரு நாள் நிகழ்விற்கு அப்பால் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக மேலும் பல மூலோபாயங்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் செயற்படுத்தவுள்ளோம். இலங்கைப் பெண்கள் தேசத்தின் பெருமை என நாம் உறுதியாக நம்புகிறோம்.
-ENDS-
Recent Comments