இலங்கை பால் பண்ணையாளர்களை மேம்படுத்துவதற்காக உலகளாவிய பண்ணை பயிற்சி வழங்குனருடன் கூட்டு முயற்சியில் பெல்வத்தை
பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு பெறுமதிமிக்க அந்நியச் செலாவணியை மீதப்படுத்தி வரும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, உள்ளூர் பால் பண்ணையாளர்களின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் முன்னோடியாக இருந்து செயற்பட்டு வருகிறது. பால் வளம் தொடர்பான துறைக்கு தலைமைத்துவம் வழங்கி வரும் பெல்வத்தை, தன்னுடன் இணைந்து பணிபுரியும் விவசாய சமூகத்திற்கு பயிற்சி, மேம்பாடு, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டம் மூலம் இதனை அடைய திட்டமிட்டுள்ளது.
இப் புதிய திட்டமானது, சர்வதேச பால் பயிற்சி வழங்குநர்களின் ஒத்துழைப்புடன், சிறப்பாக நிறுவப்பட்ட பால் பயிற்சி மையத்தை உருவாக்குவதையும் நவீன இனப்பெருக்க நுட்பங்களுடன் கால்நடைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) அறிமுகப்படுத்தியுள்ள, சிறந்த பால் பண்ணை நடைமுறைகளுக்கு இணங்க, பால் பண்ணையாளர்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
பண்ணை முகாமையாளர், சமில ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், பெல்வத்தை பால் பயிற்சித் திட்டமானது, சர்வதேச பாலுற்பத்தி பயிற்சி சேவை வழங்குநர்களுடன் இணைந்து முழுமையாக நிறுவப்பட்ட பால் பயிற்சி நிலையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பால் பண்ணையாளர்களுக்கு உயர்தர இனப்பெருக்க பொருட்களை வழங்கும் பொருட்டு, தற்போதுள்ள பண்ணைகள் கால்நடை வளர்ப்பு பண்ணையாக மேம்படுத்தப்படும். அதிக விளைச்சலை தரும் பால் வளர்ப்பு மற்றும் கால்நடை முகாமைத்துவம் போன்ற அம்சங்களில் தரமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்குதல் ஆகியன விவசாயிகளின் அறிவை ஏனைய தொழில்துறைகளுடனும் உலகளாவிய போக்குகளுக்கு இணையாகவும் மேம்படுத்த இன்றியமையாத அம்சங்களாகும் என்பதில் சந்தேகமில்லை. இனப்பெருக்க நுட்பங்கள் மாத்திரமல்லாமல், பாலின் தரப் பராமரிப்பு மற்றும் பாதுகாத்து வைத்தல், உணவளித்தல், கால்நடைகளின் சுகவாழ்வு ஆகியன தொடர்பிலான வழக்கமான அறிவுடன் புதிய அறிவுகளும் அவசியமாகும். கொவிட் தொற்றுநோயின் போது, பண்ணை விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தன. இருந்த போதிலும், நாடு முடக்கப்பட்ட வேளையில் பெல்வத்தை பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததோடு, எமது விவசாயிகளின் பணிகள் அதிகரித்ததோடு, அவர்களது வருமானம், புதிய பால் பண்ணை நடவடிக்கை தொடர்பான அறிவிற்கான தேவையும் அதிகரித்தன. இந்நிலையில், சோயா பால் மற்றும் பாதாம் பால் போன்ற புதிய பால் மாற்றீடுகள் உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள சந்தைகளில் நுழைந்துள்ளன. அந்த வகையில் பெல்வத்தை போன்ற பால் உற்பத்தியாளர்களும் அத்தகைய மாற்றீடுகளுடன் ஒப்பிடுகையில், பால் பொருட்களின் உயர்ந்த தரம் மற்றும் போசணை ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவது முக்கியமாகும். மிக முக்கியமாக, உலகம் பாரியளவில் நிலைபேறான தன்மையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எமது அர்ப்பணிப்பான விவசாயிகள் இந்த விடயத்தில் சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். பெல்வத்தை பால் பண்ணை பயிற்சித் திட்டம் அத்தகைய அறிவை அடைவதிலான இடைவெளிகளையும் நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.
இது தொடர்பில் சமில ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், “பால் உற்பத்திகள் நுகர்வோரின் சமிபாட்டு ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பொதுச் சுகவாழ்வு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புள்ளவையாகும். எனவே, பெல்வத்தை தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நுகர்வோரின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாம் நம்புகிறோம். பால் உற்பத்தியாளர் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சிறந்த விடயங்களில், தாம் வழங்கும் பால் பொருட்களின் தரம் தொடர்பான பண்ணை உத்தரவாதமும் ஒன்றாகும். இதையே வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.
பால் கறக்கும் போதான சுகாதாரம், விலங்குகளின் ஆரோக்கியம், போசணை (தீவனம் மற்றும் நீர்), உணர்திறனுடனான கால்நடை வளர்ப்பு நடைமுறைகள், சூழல் தொடர்பான அக்கறை, சமூக-பொருளாதார முகாமைத்துவத்தின் நிலைபேறான தன்மையை உறுதி செய்தல் போன்ற விவசாய அம்சங்களை, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) சிறந்த பால் பண்ணை நடைமுறைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில், முதலில் பால் கறத்தல், சூழல் கரிசனை, பயிற்சி ஆகியவற்றில் பெல்வத்தை நிறுவனம் முன்னேற்றம் கண்டு வருகிறது.
பால் பண்ணை பயிற்சிகளை ஆரம்பிக்க முன்னர், உலகின் முன்னணி பால் பண்ணை பயிற்சி வழங்குனருடன் கூட்டு முயற்சியை நிறுவ பெல்வத்தை திட்டமிட்டுள்ளது.
சமில ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், “எமது பண்ணையை, சிறப்பாக நிறுப்பட்ட கல்வி மற்றும் பால் பண்ணை பயிற்சி மையமாக மாற்றுவதே எமது புதிய வணிக உத்தியின் முக்கிய அம்சமாகும். விரிவுரை மண்டபம், ஆய்வுகூடங்கள், உணவருந்தும் பகுதிகள், தங்குமிட வசதிகளுடன் கூடிய பயிற்சி வளாகத்தை நிறுவ நாம் திட்டமிட்டுள்ளோம். நாம் அதை ஒரு தொழிற்பயிற்சி நிலையமாக பதிவு செய்ய ஆவலுடன் உள்ளதோடு, அதனைத் தொடர்ந்து அதில் பங்கேற்பவர்களுக்கு உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சான்றிதழையும் வழங்கவுள்ளோம். இவ்வாறு வழங்கப்படும் பயிற்சி மூலம் உள்ளூர் விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் சென்றடைவதை உறுதிப்படுத்தப்படும். இங்கு பகிரப்படும் அறிவு, நவீன பால் பண்ணை தொழில்நுட்பங்கள் பற்றியதாக இருக்க வேண்டும். இங்கு பயிற்சி பெறுநர்கள், இலங்கை பால் பண்ணையாளர்கள் மற்றும் பால் சார்ந்த தொழில்களில் ஈடுபடத் தயாராக இருக்கும் இளம் தொழில்முனைவோர்களாக இருப்பார்கள்.” என்றார்.
ஒரு பால் பண்ணையில் பால் கறத்தல் மிக முக்கியமான நடைமுறையாகும் என்பதுடன், சிறந்த பால் கறக்கும் வசதியானது கறவை மாடுகளிடமிருந்து சிறந்த பாலை பெறுவதை உறுதி செய்கிறது. பெல்வத்தையில் 4 அலகுகள் கொண்ட லைன் பால் கறக்கும் நிலையமொன்று உள்ளது. இதன் மூலம் 3 மணி நேரத்திற்குள் பால் கறக்கப்பட்டு நிறைவடைவதால், மாடுகளை திருப்திகரமானதாக பராமரிக்க போதியதாக உள்ளது. பெல்வத்தையின் திட்டமிட்ட கால்நடை மேம்பாடு காரணமாக, பண்ணைக்கு குறைந்தபட்சம் 6 x 2 HerringBone வடிவிலான பால் கறவை அமைப்பு அவசியமாகிறது.
சூழல் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது பெல்வத்தைக்கு புதிய விடயமொன்று அல்ல என்பதுடன், அது ஏற்கனவே கழிவு முகாமைத்துவத்தின் அடிப்படையில், உரம் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. “எமது தொழிற்சாலை மாதாந்தம் குறைந்தபட்சம் 60 தொன் உரத்தை உற்பத்தி செய்வதோடு, இதன் மூலம் பண்ணைக்கு இலாபம் ஈட்டும் வழிவகைகளையும் அதிகரித்துள்ளது” என்கிறார் சமில ராஜபக்ஷ
பெல்வத்தை நிறுவனம் தற்போது இத்திட்டத்தை தன்னியக்கமாக்க விரும்புவதுடன், ஒரு பெட்டி, புரட்டும் அமைப்பு மற்றும் அகழும் அமைப்பு (trailer, pile tuner, excavator) ஆகியவற்றைக் கொண்ட உழவு இயந்திரத்தை கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
Pelwatte Dairy பற்றி:
பால் பதப்படுத்தல், கால்நடை தீவனம், பால் பொருட்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பெல்வத்தை நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது வெளிநாடுகளில் இருந்து பால் பொருட்கள் இறக்குமதிக்குச் செலவிடும் வெளிநாட்டு செலாவணியை வெற்றிகரமாக சேமிக்கின்ற, இலங்கையின் வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். பால் உற்பத்தித் தொழிலுக்கு தரமான மூலப்பொருட்களின் தொடர்ச்சியான மற்றும் நம்பகமான சுழற்சியை நிறுவும் நோக்கில், இலங்கையில் கறவை மாடு வளர்ப்பை மேம்படுத்துவதற்கான இலட்சியத்தையும் நிறுவனம் கொண்டுள்ளது. ISO 22000:2018 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனமான Pelwatte Dairy, தற்போது இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் செயற்படும், ஜேர்மனிய தொழில்நுட்பத்தை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள, அதி நவீன பால் தொழிற்சாலைகளில் ஒன்றை நிறுவனம் சொந்தமாகக் கொண்டுள்ளது.
Recent Comments