நாற்று வரிசைகளுக்கு இடையில் 8 அங்குல இடைவெளியை பேணும் இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு நெல் நடுகை இயந்திரம் DIMO ‘பெல பட்டா’ அறிமுகம்

இலங்கையின் முன்னணி நிறுவனமான DIMO, அதன் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses, நாற்று வரிசைகளுக்கு இடையில் 8 அங்குல இடைவெளியைப் பேணும் திறன் கொண்ட, ‘Pela Batta’ எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் முதலாவதும் ஒரேயொரு நெல் நடுகை இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் விவசாயத் துறையில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், உள்ளூர் விவசாய சமூகத்திற்கு புத்தாக்கம் கொண்டதும் மலிவு விலையிலும் விவசாய இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதில் DIMO எப்போதும் முன்னணியில் உள்ளது.

இலங்கை விவசாயத் துறையில் தற்போதுள்ள நெல் நாற்று நடுகை இயந்திரங்கள், நெல் நாற்று வரிசைகளுக்கு இடையில் 11 முதல் 12 அங்குலம் வரை நாற்றுகளை பயிரிடும் திறனைக் கொண்டுள்ளது. ஆயினும், Pela Batta மூலம் இந்த இடைவெளியை 8 அங்குலம் வரை குறைக்க முடியும். அத்துடன் வரிசையில் உள்ள ஒவ்வொரு நாற்றுக்கும் இடையே 5 முதல் 6 அங்குலம் வரை தேவைக்கேற்ப இடைவெளியை மாற்றியமைப்பதற்கும் வழி செய்கிறது. இப்புதிய இயந்திரமானது, நாற்றுகளுக்கு இடையே சீரான இடைவெளியை பேணுவதன் காரணமாக விவசாய விளைச்சல் 20%-30% இனால் அதிகரிக்குமென ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. அது மாத்திரமன்றி, நடுகை செய்யப்படும் நாற்றுகளின் எண்ணிக்கையையும் இதன் மூலம் அதிகரிக்கலாம். பாரம்பரிய நெல் நாற்று நடுகை செயன்முறையானது அதிக வேலைப்பளு மிகுந்தது என்பதுடன், ஒரு சில முறைகளில் நிலையான இடைவெளிகள் பேணப்படுவதில்லை. இந்த இரண்டு பிரச்சினைகளையும் Pela Batta நிவர்த்தி செய்து, அதன் மூலம் பொருளாதார நன்மைகளை வழங்குகிறது. இது ஒரு நாளில் 3 – 3.5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நெற் செய்கையின் போதான நடுகை செயன்முறையில் இது செயல்திறனை உச்ச அளவில் அதிகரிக்கின்றது. அத்துடன், நெற்பயிர்களுக்கு இடையில் சீரான இடைவெளி பேணப்படுவதன் மூலம், களை மற்றும் பீடை கட்டுப்பாட்டு செயன்முறைகளை ஒப்பீட்டளவில் வசதியானதாக பேண முடியும். இந்த இயந்திரத்தின் மூலம் இவ்வருட சிறுபோகத்தில் வெற்றிகரமாக 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் நடுகை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4-stroke எஞ்சின், எளிமையான வடிவமைப்பு, குறைந்த எடை கொண்ட Pela Batta இயந்திரத்தை எவராலும் எளிதாக இயக்க முடியும். அதன் வலிமை, பராமரிப்பு எளிமை மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு ஆகிய விடயங்கள் என்பன உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள விடயங்களாகும்.

பத்தலகொடை நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் நெற் செய்கை தொடர்பான பிரதான விவசாய நிபுணர் ரோஹண திலகசிறி இது தொடர்பில் தெரிவிக்கையில், “தற்போதுள்ள நெல் நாற்று நடுகை இயந்திரங்கள் குறிப்பாக சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு நெல் வகைகள் நீண்ட கால செய்கையை கொண்டதாகவும் உயரமாகவும் வளரக் கூடியன என்பதுடன், அவற்றின் நாற்று வரிசைகளுக்கிடையே 12 அங்குலம் வரையான இடைவெளி பேணப்பட வேண்டும். ஆயினும், இலங்கையில் குறுகிய கால செய்கைக்கான நெல் வகைகள் பயன்படுத்துகின்றன. பொதுவாக அவை 3 – 3.5 மாதங்களுக்குள் அறுவடை செய்யப்படுவதோடு, உயரம் குறைவாகவும் காணப்படுகின்றன. இதன் விளைவாக, ஏனைய நாடுகளுக்கு பொருத்தமான, இத்தகைய இயந்திரங்களை இலங்கை விவசாயிகள் பயன்படுத்துவது சாத்தியமில்லை. நெல் நடுகை வரிசைகளுக்கு இடையேயான இடைவெளியை 12 அங்குலமாக பேணும் போது, ​​இவ்வாறு பேணப்படும் பெரிய இடைவெளி காரணமாக, களைகளின் வளர்ச்சியை நிர்வகிப்பது சிரமங்களை ஏற்படுத்துகிறது. எனவே, 8 அங்குல நாற்று வரிசை இடைவெளியானது, எமது விவசாய சமூகங்களுக்கு ஏற்றது என்பதுடன், குறிப்பாக நாம் தற்போது பயிரிடும் நெல் வகைகளின் அடிப்படையில் அவை சிறந்த விளைச்சலை வழங்கும் என்றும் நாம் நம்புகிறோம்.” என்றார்.

DIMO நிறுவன பணிப்பாளரும் DIMO குழுமத்தின் விவசாய இயந்திர வணிகத்தை மேற்பார்வையிடுபவருமான ரஜீவ் பண்டிதகே தனது கருத்துகளை தெரிவிக்கும்போது, “நாட்டின் விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்து, விவசாய இயந்திரமயமாக்கலை DIMO தொடர்ச்சியாக ஊக்குவிக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Pela Batta, அந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவும் என்பதுடன், 8 தசாப்தங்களுக்கும் மேலாக DIMO கொண்டுள்ள நம்பிக்கை, பொறியியல் சிறப்பம்சங்கள், அசைக்க முடியாத DIMO உத்தரவாதம் மற்றும் நாடு முழுவதும் உள்ள கிளை வலையமைப்பின் மூலமான விலைமதிப்பற்ற விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றுடன், இந்த இயந்திரம் இலங்கை விவசாயிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று பாரிய கேள்வியை கொண்டதாக, மாறுமென நாம் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

DIMO Agribusinesss மூலம், இலங்கையின் அடுத்த தலைமுறை விவசாயத்தின் நிலைத்தலுக்கும் அதன் மேம்பாட்டிற்கும், DIMO கணிசமான ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

END

Share

You may also like...