AI, 5G, பயனர் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் Huawei

– புத்தாக்கம், புலமைச் சொத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் ஆராய்வு

Huawei சீனாவின் ஷென்சென் நகரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற “Broadening the Innovation Landscape 2022” (புத்தாக்க வெளியிடையை விரிவாக்குதல் 2022) கூட்டத் தொடரில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் “Top Ten Inventions” (சிறந்த பத்து கண்டுபிடிப்புகள்) விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, முக்கிய கண்டுபிடிப்புகளின் தொகுப்பை அறிவித்திருந்தது.

புதிய தயாரிப்புகளின் தொடரை உருவாக்கக்கூடிய, தற்போதுள்ள தயாரிப்புகளிலிருந்து முக்கியமான வணிக அம்சங்களாக மாறக்கூடிய கண்டுபிடிப்புகளுக்கு அல்லது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு கணிசமான பெறுமதியை உருவாக்கும் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க இந்த விருது நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கப்பட்ட கண்டுபிடிப்புகளானவை, மின் நுகர்வு மற்றும் மின்சுற்றின் பகுதியை கணிசமாகக் குறைக்கும் adder neural network முதல் ஒளியியல் நார்களுக்கு தனித்துவமான உணரியாக விளங்குகின்ற, பாரிய மாற்றத்தை உருவாக்கும் “optical iris” வரை  உள்ளடங்குகிறது. இது வலையமைப்பு சேவை வழங்குனர்கள் தங்கள் வலையமைப்பு ஆதாரங்களை நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், புரோட்பேண்ட் வரிசைப்படுத்தலுடன் தொடர்புடைய நேரத்தையும் செலவுகளையும் இது குறைக்கிறது.

புலமைச் சொத்துரிமைகள், பாதுகாப்பு மற்றும் பகிர்தல் ஆகியன, தொழில்நுட்ப சூழலுக்கு மிக முக்கியமானவை என Huawei நம்புகிறது.

2021ஆம் ஆண்டின் இறுதியில், 45,000 இற்கும் மேற்பட்ட காப்புரிமை குடும்பங்களில் 110,000 இற்கும் மேற்பட்ட செயற்பாட்டில் உள்ள காப்புரிமைகளை Huawei பெற்றுள்ளது. Huawei ஏனைய சீன நிறுவனங்களை விட அதிகளவான காப்புரிமைகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றிய காப்புரிமை அலுவலகத்தில் அதிக காப்புரிமை விண்ணப்பங்களையும் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. அத்துடன் அமெரிக்காவில் வழங்கப்பட்ட புதிய காப்புரிமைகளின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தை நிறுவனம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் Huawei உலகளாவிய ரீதியில் 1ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

காப்புரிமை அனுமதிப்பத்திர நிர்வாக நிறுவனங்களுடன் இணைந்து அனுமதிப்பத்திரங்களை “one-stop” (ஒரே-இடத்தில்) பிரதான தர நிலைகளுக்கு அமைவாக வழங்கும் செயற்பாடு தொடர்பில் Huawei ஆர்வமாக செயற்பட்டு வருகிறது.

இது தொடர்பில் Fan தெரிவிக்கையில், “260 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், patent pool மூலம் ஒரு பில்லியன் சாதனங்களுக்கு மேல், Huawei யின் HEVC காப்புரிமைக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளன” என்றார். உலகெங்கிலும் உள்ள Wi-Fi சாதனங்களுக்கான Huawei யின் காப்புரிமைகளை, “விரைவான அணுகல்” முறை மூலம் தொழில்துறையினருக்கு வழங்குவதற்கு, ஒரு புதிய காப்புரிமைக் குழுவை நிறுவுவதற்கான கலந்துரையாடலில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

5G காப்புரிமைக்கான கூட்டு அனுமதிப்பத்திர திட்டங்கள் தொடர்பில், அனுமதிப்பத்திர நிபுணர்கள் உள்ளிட்ட ஏனைய முன்னணி தொழில்துறை காப்புரிமையாளர்களுடன் Huawei கலந்துரையாடி வருகிறது.

இது, Huawei தனது புத்தாக்க நடைமுறைகள் தொடர்பில் நடாத்தும், மூன்றாவது புத்தாக்க மற்றும் புலமைச் சொத்து தொடர்பான நிகழ்வாகும். ஒவ்வொரு வருடமும், Huawei அதன் விற்பனை வருமானத்தில் 10% இற்கும் அதிகமான நிதியை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் (R&D) முதலீடு செய்கிறது.

R&D செலவினங்களின் அடிப்படையில், 2021 EU Industrial R&D முதலீட்டு பட்டியலில், Huawei இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2021 இல், நிறுவனம் அதன் R&D முதலீட்டை 142.7 பில்லியன் சீன யுவானாக அதிகரித்தது. இது அதன் மொத்த வருமானத்தில் 22.4% ஆகும். கடந்த 10 வருடங்களில், Huawei யின் மொத்த R&D முதலீடு 845 பில்லியன் யுவானைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...