மின்வெட்டின் போதும் மின்சாரத்தை வழங்க DIMO விடமிருந்து DI-Solar
– இலங்கையில் முதன்முறையாக மின்கலம் அற்ற சூரிய மின்கல தீர்வு
இலங்கையில் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொறியியல் சிறப்புடன் திகழ்ந்து வரும் DIMO, ஒரு புரட்சிகர தீர்வாக, சமீபத்தில் DI-Solar தொகுதியை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சூரிய மின்கல (Solar PV) தொகுதிகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, பகல்நேர மின் தடைகளின் போது பயன்படுத்துவதற்கு உதவுகிறது. இதன் மூலம் சக்தி விரயம் தடுக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கும் தொழில்துறைகளுக்கு ஏற்ற வகையில், எந்த வித மின்கல சேமிப்பு முறையும் இன்றி சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் இதன் மூலம் நேரடியாக பயன்படுத்தலாம். இது சந்தையில் பெறக்கூடிய இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு அதிநவீன தீர்வாகும். இது தங்கு தடையற்ற வணிகச் செயற்பாடுகளை எளிதாக்குவதுடன் மின் உற்பத்திக்கான எரிபொருளுக்கான செலவினத்தை 50% முதல் 70% வரை குறைக்கிறது.
இங்கு, தொழில்துறை பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படுவதுடன், DI-Solar ஆனது நுகர்வோர் தீர்வுக்கான அமைப்புகளுடன் வருகிறது. இது விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், நாட்டின் பசுமை பயணத்தை மேலும் துரிதப்படுத்த உதவும்.
இலங்கையில் உள்ள கைத்தொழில் துறைகளானது, தற்போது நடைமுறையில் உள்ள மின்வெட்டுகள் காரணமாக, உற்பத்தி இழப்பின்றியும், பணிகள் ஸ்தம்பிதமடையாமலும் தடையின்றி தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடர்வதில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. பல வணிக நிறுவனங்கள் ஏற்கனவே நிறுவப்பட்ட கூரையில் அமைந்த சூரிய மின்கல தொகுதிகளைக் கொண்டிருந்தாலும், பகல் நேரத்தில் மின் தடையின் போது உரிய வலுவை பெற முடியாமை காரணமாக, சூரிய மின்கல தொகுதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாமல் உள்ளன. எரிபொருட்கள் அதிக விலையை எட்டியிருக்கும் இந்நேரத்தில், மின்பிறப்பாக்கிகளை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
நாட்டின் மின்சாரத் துறை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புத்தாக்கமான தீர்வுகளை தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலம், மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையில் DIMO அதன் பரந்த நிபுணத்துவத்திற்கு சான்று பகர்கின்றது.
DI-Solar ஆனது, புதிய அல்லது ஏற்கனவே உள்ள சூரிய மின்கல தொகுதிகளில் நிறுவப்படுகின்ற, ஐரோப்பாவில் உள்ள முன்னணி உற்பத்தி நிறுவனத்தின் உயர் தொழில்நுட்பக் கட்டுப்படுத்தியாகும். இது மின்சாரத்தை பெறவேண்டிய வளாகத்தை தனியான விநியோகத் தொகுதியாகச் செயற்பட வைப்பதுடன், சூரிய மின்கல தொகுதியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை வீணடையச் செய்யாமல், உள்ளக தேவையைப் பூர்த்தி செய்ய வழிவகுக்கிறது.
பகல் நேரத்தில் மின்சாரம் தடைப்படும் போது, உரிய வளாகத்தில் உள்ள மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மின்பிறப்பாக்கிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். அதற்கு அடுத்த கட்டமாக, சூரிய மின்கல இன்வேட்டர்களை இயக்குவதனை தூண்டுவதற்காக, மின்பிறப்பாக்கியால் உருவாக்கப்பட்ட மின்சாரத்தில் உள்ள அளவுகாட்டிகளைப் பயன்படுத்தி குறித்த கட்டுப்படுத்தியானது செயற்பாட்டுக்கு வருகிறது. அதன் பின்னர் சூரிய மின்கல இன்வேட்டர்கள் மின்சாரம் உற்பத்தி செய்யும் செயன்முறையை ஆரம்பித்து, மின்சார கேள்வியை தாங்குகின்ற முதன்மை சக்தி மூலமாக மாறுகின்ற அதே வேளையில், மின்பிறப்பாக்ககள் மூலமான மின் உற்பத்தியை குறைக்கிறது. இதன் விளைவாக எரிபொருள் நுகர்வு குறைக்கப்படுகிறது. அத்துடன், மின்கலங்களை இணைப்பதன் மூலம் இரவு நேர மின் தடைகளின் போதும் இந்த தீர்வை மேலும் மேம்படுத்தலாம். DI-Solar அமைப்பை, தற்போதுள்ள எந்தவொரு சூரிய மின்கல தொகுதிக்கு ஏற்றவாறும் தனிப்பயனாக்க முடியும். இதேவேளை, நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு, ஏற்கனவே சூரிய மின்கல தொகுதிகளை கொண்டிருக்காத தொழிற்துறைளுக்கு இந்த தீர்வுடன் சூரிய மின்கல தொகுதிகளையும் DIMO நிறுவனம் வழங்குகிறது.
DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது பற்றி கருத்து வெளியிடுகையில், “இந்தத் திட்டம் DIMO வின் மற்றுமொரு சரியான தருணத்தில் வெளியிடப்படும் தீர்வு என்பதுடன், நாம் சேவைகளை வழங்கும் சமூகங்கள், அவர்களது கனவுகள் மற்றும் அபிலாஷைகளை அடைவதற்காக நாம் தொடர்ந்தும் அவர்களை ஊக்குவிக்கிறோம். தற்போதைய சூழலில் இக்கருத்தானது மிகவும் முக்கியமாகின்றது.” என்றார்.
சுமார் 650kW திறன் கொண்ட ஒரு சூரிய மின்கல தொகுதி நிறுவப்பட்டு, சராசரியாக 3-4 மணிநேர பகல்நேர மின் தடையை எதிர்நோக்க நேரிடும்போது, அதற்கான தேவையைப் பூர்த்தி செய்ய மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தினால், DI-Solar தொகுதியானது அதற்கு செலவாகும் எரிபொருளை மிகப் பாரிய அளவில் குறைப்பதற்கான திறனைக் கொண்டுள்ளது. இங்கு மின்பிறப்பாக்கியின் குறைந்தபட்ச மின் விநியோக சுமைக்கான எரிபொருள் (மின்பிறப்பாக்கியின் திறனில் சுமார் 30%) மட்டுமே தேவைப்படுகிறது. மின்பிறப்பாக்கிகளின் மீதமுள்ள சக்தி தேவையானது (மீதமுள்ள 70%) சூரிய மின்கல தொகுதியின் மூலம் உருவாக்கப்படும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் அடையப்படும். அதற்கமைய, நிறுவனங்கள் எரிபொருளுக்கான தமது செலவைக் குறைக்க முடியும். அத்துடன், சுமார் 1-2 வருடங்களுக்குள் இதற்கான மூலதன செலவை மீளப் பெறவும் முடியும்.
தொழில்துறைகள் தங்களது மின் தேவைகளுக்காக, தேசிய கட்டமைப்பைச் சார்ந்திருக்காமல் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்த DI-Solar உதவுகிறது. அத்துடன், நாட்டின் மின்சாரத் துறையில் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு முன்முயற்சி நடவடிக்கை இதுவாகும் என்பதுடன், உற்பத்திகளை தங்குதடையின்றி தொடர்ச்சியாக பேணுவதன் மூலம் தேசிய ரீதியிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கவும், எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு செலாவணியை குறைக்கவும் இது உதவுகின்றது.
END
Recent Comments