பிரதமரிடம் நிவாரண நடவடிக்கைகளுக்கு வலியுறுத்திய இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்

இறுதி சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையின் (ORS), உயர் அமைப்பான இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), நாட்டில் கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தினால் தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஜூன் மாதம் 30 ஆம் திகதி சந்தித்தது.

இலங்கை ஆடை வர்த்தகநாமங்களின் சங்கத்தின் (SLABA) பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், அனைத்து இலங்கை தொழிலதிபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யாமல், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

வங்கிக் கடன்களைப் பெறுதல், கடன் கடிதம், ஆடை மற்றும் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி தொடர்பில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு SLRA மற்றும் SLABA பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது. FMCG விற்பனையாளர்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், ஆடை, பெஷன், நகைகள், காலணி மற்றும் ஆபரண விற்பனை நிலையங்கள், வீட்டு மற்றும் நுகர்வோர் பொருட்களின் விற்பனையகங்கள், இலத்திரனியல் வணிக விற்பனையாளர்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம், பொழுதுபோக்கு, உணவு, உணவகங்கள், துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் தங்குமிட வழங்குநர்கள் ஆகியவற்றை கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் மீண்டும் திறக்க SLRA உறுப்பினர்கள் அனுமதி கோரினர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட்-19 உலகளாவிய தொற்று நிலைமை காரணமாக இதுவரை சுமார் 24 மாதக் காலங்களாக தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நிதி அமைச்சின் ஊடாக அவசர நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கலந்துரையாடலில், கௌரவ பிரதமர் கௌரவ கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, கௌரவ தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்த குலரத்ன, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.சுஜீவா பள்ளியகுரு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“நாங்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பை நடாத்தினோம். இந்த விடயங்களைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். எங்கள் குறைகளை கேட்பதில் அவர் திறந்த மனதுடன் இருந்தமையை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் ஓர் அங்கமாக இருக்கும் வணிக சமூகத்திற்கு வங்கிக் கடன்களுக்கான நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் எங்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதற்கு எமது உயரிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பொதுப் பயன்பாட்டுச் சேவைகளுக்கான கட்டணங்களை குறைக்க அல்லது ஒத்திவைக்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். அவை எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க செலவென்பதனால், அவை எங்கள் செலவுச் சுமைகளைக் குறைக்கும். இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை துறை என்பது இலங்கை வாடிக்கையாளர்கள், குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் நல்வாழ்வில் ஒரு முக்கியமான கட்டமைப்பாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், நாட்டில் 15% க்கும் அதிகமான வேலைவாய்ப்பையும் கொண்டுள்ளது. இந்த FMCG மற்றும் பெஷன் துணைத் துறைகள் நாட்டின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின் முக்கிய வழிகளாகும் நவீன வர்த்தகத்தில் அவர்களுக்கு நுழைவு  புள்ளியாகவும் மாறிவிட்டன. நுகர்வோர் நெருக்கடி ஏற்படாதவாறு நிவாரணம் கிடைக்கப்பெறுவது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்,” என திரு ஹூசைன் சித்திக் தெரிவித்தார்.

FMCG விற்பனையாளர்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், ஆடை, பெஷன், நகைகள், காலணி மற்றும் ஆபரண விற்பனை நிலையங்கள், வீட்டு மற்றும் நுகர்வோர் பொருட்களின் விற்பனையகங்கள், இலத்திரனியல் வணிக விற்பனையாளர்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம், பொழுதுபோக்கு, உணவகங்கள் மற்றும் துரித உணவு விற்பனையாளர்கள் மற்றும் தங்குமிட வழங்குநர்கள் போன்றோர் SLRA உறுப்பினர்களில் அடங்குகின்றனர்.

இலங்கை சந்தை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கல் ஆகியவற்றில் ஒருமித்த குரலாக ORS குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், நாட்டில் 15% இற்கும் அதிகமான வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது. சில்லறை வணிகத் துறையின் பெறுமதிச் சங்கிலிகளின் சொட்டுப் பயன் விளைவுகள் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் சிறிய நடுத்தர வணிக விநியோகஸ்தர்கள் போன்ற விநியோகச் சங்கிலிகளின் அடிமட்டத்திற்கும் விரிவடைவதால், இலங்கை பொருளாதாரத்தின் வலுவான தன்மைக்கு துடிப்பான சில்லறை வணிகம் ஒரு முக்கிய அங்கமாகும்.

Share

You may also like...