‘தீவா கரங்களுக்கு வலு’: தங்கொட்டுவ நிகழ்வின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு

பெருமைக்குரிய இலங்கை வர்த்தக நாமமான தீவா (DIVA), Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கும், பெண்கள் தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கிய ‘தீவா கரங்களுக்கு வலு’ நிகழ்ச்சித் தொடரில், தங்கொட்டுவவில் இடம்பெற்ற நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வருடம் தங்கொட்டுவ பிரதேசத்தில் இதன் முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது நாடு முழுவதையும் உள்ளடக்கிய  தேசிய வேலைத்திட்டமாக இது இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் பொருளாதார நெருக்கடியின் அழுத்தத்தை அனைவரும் உணரும் இத்தருணத்தில், தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களில் ஈடுபடுவோர், வீட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சக்தியாக மாறி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் குறிப்பிடும்படியான போக்கை தற்போது காணக் கூடியதாக உள்ளது. இங்கு இல்லத்தரசிகள் தமது குடும்பங்களை வலுப்படுத்தி, தொழில்முனைவோர்களாக மாறியதையும் காணக்கூடியதாக உள்ளது. வழக்கமான இல்லத்தரசி எனும் நிலையிலிருந்து மாறுபட்டு, தையல், சமையல், கைவினைப் பொருட்கள் உற்பத்தி போன்ற தனது சொந்தத் திறமைகளின் மூலம் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக உழைப்பதன் மூலம், தொழிலாளர் சக்தியின் ஒரு பகுதியாக இடம்பிடித்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு பலத்தை வழங்கும் பெண் தொழில்முனைவோராக அவர்கள் ஒரு படி முன்னேறிச் சென்றுள்ளமையானது, மிகவும் பெறுமதி மிக்க மாற்றமாகும். பெண் தொழில்முனைவோரின் இந்த அசாத்திய தைரியத்தைப் நன்றாக புரிந்துகொண்ட தீவா, வணிகத்தில் ஈடுபடுவதற்கான அவர்கள் கொண்டுள்ள அறிவு, திறன்கள், திறமைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், தொழில்முறை வழிகாட்டலை வழங்கும் நோக்கத்துடன் ‘தீவா கரங்களுக்கு வலு’ திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

தீவா கரங்களுக்கு வலு திட்டத்தின் மூலம், பெண் தொழில் முனைவோருக்கு, தொழில் ஆரம்பித்தல், அதனை முறையாக பேணுதல், அதன் விற்பனை போன்றவற்றுக்கு அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம், தன்னம்பிக்கையுடன் தங்கள் தொழில்களை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

சில பெண்களுக்கு அவர்களின் கனவுகளை நனவாக்க போதிய நேரமோ, அறிவோ அல்லது ஆதரவோ இல்லை எனும் உண்மையை உணர்ந்து, ‘தீவா கரங்களுக்கு வலு’ திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள திறமையான பெண் தொழில்முனைவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதை தீவா நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்களின் வீட்டுத் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் தீவா கரங்களுக்கு வலு திட்டத்தில் பங்குபெறும் பெண்களின் திறமை மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணித்து, நிகழ்ச்சியின் முடிவில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் பெண் தொழில்முனைவோரை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் வளர்ச்சி மற்றும் மூலதனத்தை வலுப்படுத்துவதற்காக, நிதி உதவிகளை வழங்குவதையும் தீவா நோக்கமாகக் கொண்டுள்ளது.

தீவா கரங்களுக்கு வலு, தங்கொட்டுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில், சிறந்த தொழில் முனைவு ஆற்றல் மற்றும் திறன்களின் முன்னேற்றத்தை அவதானித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், எச்.கே. ஷானிகா பிரபாஷினி தேங்காய்ப் பாணி வியாபாரத்திலும், ஆர்.எஸ். நிலக்ஷிகா தொதல் தயாரிப்பு வியாபாரத்திலும், ஆர்.எம்.எஸ். லக்மாலி ஊறுகாய் வியாபாரத்திலும், பெண் தொழில்முனைவோராக முறையே முதல் 3 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற எச்.கே. ஷானிகா பிரபாஷினி கூறுகையில், “இந்த வெற்றி தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது தொழில் முயற்சிக்கு கிடைத்த மிகவும் மதிப்புமிக்க பரிசாகும். என்னை பாராட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தமைக்காக ஹேமாஸ் நிறுவனத்திற்கும், எனது குடும்பத்தினருக்கும், இந்த இடத்திற்கு என்னை வழிநடத்தி என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுடையவளாக இருக்கிறேன். எனது தொழிலை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது. இந்த பரிசுத் தொகையை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன். இந்த நேரத்தில் தீவா கரங்களுக்கு வலு நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

“தொட்டிலை ஆட்டும் கைகளே உலகையும் ஆளுகின்றன” எனும் புகழ்பெற்ற பழமொழி கூறுவது போல், எதிர்கால சந்ததியை வளர்த்தெடுக்கும் பெண்ணும் நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பைச் செய்கிறாள். அவள் எப்போதும் உரிய பாராட்டையும், அன்பையும், கவனிப்பையும் பெற வேண்டும் என்பதை நாம் எப்போதும் உணர வேண்டும். தீவா கரங்களுக்கு வலு திட்டமானது, பெண்களின் பலம் மற்றும் அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து, வணிக வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தை வெற்றிகொள்ள தொடர்ச்சியாக ஊக்கமளிக்கும்.

Hemas Consumer பற்றி

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands ஆனது, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட வர்த்தக நாமங்கள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம் நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது, உலகத் தரம் வாய்ந்த அதன் தயாரிப்பு வகைகளின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்புத் தீர்வுகளை வழங்கி வருகின்றது. வளர்ச்சியின் மூலம் ஈர்க்கப்பட்ட அதன் புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து, அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருது பெற்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்காக நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்குவதன் மூலமும், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும்  சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலமும் அது நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.

Share

You may also like...