குளியலறை உபரகண கைத்தொழில் துறையின் நிலை பற்றி கலந்தாலோசனை செய்த Sri Lanka Ceramics & Glass Council
– தரம், கட்டுப்படியான விலை, தன்னிறைவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குழு நிலை விவாதம்
செரமிக் தொழிற்துறையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான உயர் அமைப்பான Sri Lanka Ceramic & Glass Council (SLCGC) (இலங்கை செரமிக் மற்றும் கண்ணாடி சபை), இலங்கை குளியலறை உபரகண துறையின் தரம், கட்டுப்படியான விலை, அதன் தன்னிறைவு பற்றிய குழுநிலை விவாதத்தை அண்மையில் நடாத்தியிருந்தது. கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், குளியலறை உபகரண உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டதோடு, இத்துறையில் புகழ்பெற்ற குழுவொன்றுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
குறித்த கலந்துரையாடல் குழுவில் பிரதம விருந்தினராக கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண கலந்து கொண்டதோடு, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம். திலகா ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ரோஹண விஜேசேகர, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, Lanka Minerals & Chemicals (Pvt) Ltd முகாமைத்துவப் பணிப்பாளர் மானவச்சந்திர போபிட்டிய, Royal Ceramics Lanka PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அரவிந்த பெரேரா, RSL குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நிஷாந்த நாணயக்கார ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலின் போது, SLCGC அமைப்பானது, உள்ளூர் குளியலறை உபகரண தொழில்துறை தொடர்பில் நிலவும் தவறான கருத்தொன்று தொடர்பில் எடுத்துரைத்தது. இத்துறையில், நாட்டில் 1 அல்லது 2 உற்பத்தியாளர்கள் மட்டுமே இருப்பதாக இலங்கையிலுள்ள பலர் இன்னும் நம்புகின்றனர். இருப்பினும், இன்று தொழில்துறையில் 8 இற்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு மட்டத்திலான விலைகள் மற்றும் மாறுபட்ட தரநிலைகளில் உற்பத்திகளை வழங்கக்கூடிய திறன் கொண்டவர்களாக உள்ளனர் என்பதை அது சுட்டிக்காட்டியது.
இவ்வாறான உற்பத்தியாளர்கள் வரிசையில், Royal Ceramics Lanka PLC, RSL Ceramics (Pvt) Ltd., Mulatiyaana Ceramics (Pvt) Ltd., Nilwala Ceramics Village (Pvt) Ltd., Otto Bath ware, Hega Tile (Pvt) Ltd., Embilipitya Ceramics (Pvt) Ltd., Novel Ceramics (Pvt) Ltd., and Dilax Chemical (Pvt) Ltd ஆகியன உள்ளது. இந்நிகழ்வில், மேற்குறிப்பிட்ட சில உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தரத்திலும், விலைகளிலும் அமைந்த தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
கொவிட்-19 தொற்றுநோயின் காரணமான தாக்கங்கள் மற்றும் உள்ளூர் குளியலறை உற்பத்தி தொழில் துறையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்தும் இக்குழு கலந்துரையாடியது. 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில், நாட்டில் குளியலறை உபகரணங்களின் தேவையை பூர்த்தி செய்யும் திறன் இலங்கைக்கு இருக்கவில்லை. தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் இத்தொழில்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, பல்வேறு புதிய தொழிற்சாலைகளின் வருகை மற்றும் ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள் காரணமாக, இத்தொழில்துறையை விரிவுபடுத்தவும், அதற்கு புத்துயிர் அளிக்கவும் முடிந்தது. ஏராளமான புதிய தொழிற்சாலைகள் மற்றும் கணிசமான அளவிலான உற்பத்தியின் அதிகரிப்பு ஆகியன காரணமாக, 2 வருடங்களுக்குள் இத்தொழில்துறையானது அது அடைய விரும்பிய இலக்கை அடைய முடிந்தது. இத்தொழில்துறைக்குத் அவசியமான 80% மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே பெற முடியும் எனும் உண்மையை SLCGC அமைப்பானது நிரூபித்துக் காட்டியுள்ளது. இதன் காரணமாக, இதற்கான மூலப்பொருட்களின் இறக்குமதியை கணிசமாகக் குறைக்க முடியும்.
Recent Comments