டிஜிட்டல் திறமையாளர்களை வலுவூட்டவும், கூட்டு புத்தாக்க ஆய்வகத்தை அமைப்பதற்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள Huawei

திறமையாளர்கள் தொகுதியொன்றை கட்டியெழுப்பவும் இலங்கையின் ICT தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பங்களிப்பை வழங்கவும் தேசிய பல்கலைக்கழகத்துடன் 2ஆவது ஒப்பந்தம்

தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT) உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை வழங்கும் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, உள்ளூர் ICT திறமையாளர்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் சான்றிதழ்கள், பயிற்சிகள், களப் பயிற்சிகள், பல்கலைக்கழக வளாகத்தில் Huawei ICT Academy இனை நிறுவுதல் மற்றும் கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவுதல் ஆகிய விடயங்கள் இதில் உள்ளடங்குகின்றன. திறமையாளர்களைக் கொண்ட சூழல் தொகுதியொன்றை உருவாக்குவதற்கும், இலங்கையில் ICT துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் பங்களிப்புச் செய்யும்.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Tao Guangyao மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி திலகசிறி பண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அநுருத்த வெலிவிட்ட, பொறியியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி அகில சுபசிங்க, மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பிரிவின் தலைவர் கலாநிதி நிஷான் தர்மவீர, மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பிரிவின் முன்னாள் தலைவர் கலாநிதி சமித டி அல்விஸ், கணனி பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரந்திம தினலங்கார, கணனி பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உதய விஜேநாயக்க, மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் விரிவுரையாளர் சந்துன் விஜயரத்ன உள்ளிட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் Huawei நிறுவன பிரதி பிரதான நிறைவேற்று அதிகாரி Liam Nixiaopeng, தொழில்துறை தீர்வுகள் பணிப்பாளர் நதுன் குணவர்தன, பொறியியலாளர் சுபுன் இந்துவர உள்ளிட்ட Huawei நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்மொழியப்பட்டுள்ள கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகமானது, இளங்கலை மற்றும் பட்டதாரி ஆராய்ச்சியை மேலும் எளிதாக்கும் என்பதுடன், தொழில்துறை தேவைகளுக்கான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், மேம்பட்ட ICT தொழில்நுட்பங்கள் தொடர்பான சான்றிதழ் கற்கைகளை ஒழுங்கமைப்பதற்குமான ஒரு தளத்தை வழங்கும். அது மாத்திரமன்றி, இது தொழில்துறை பயிற்சி போன்ற மாணவர்களுக்கு தற்போது தேவையான விடயங்களை மேலும் வலுப்படுத்த உதவும்.

Huawei ICT Academy மற்றும் கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகம் அமைக்கப்பட்டவுடன், தொழில்முறை ரீதியான தொழில்நுட்ப சான்றிதழை அமுல்படுத்துவதற்கு உதவியாக, Huawei நிபுணர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுவார்கள். ICT தொழில்துறை தொடர்பான சந்தை தேவைகள் மற்றும் சவால்களை எதிர்நோக்கக் கூடிய வகையில் இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கு உயர்தர ICT திறமையாளர்களை வழங்குவதை இந்த பயிற்சித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில், Huawei 20 வருடங்களாக இயங்கி வருவதுடன், பிரதானஉள்ளூர் தொலைத்தொடர்பு வலையமைப்புகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுடன் விரிவாகவும் ஆழமாகவும் ஒத்துழைப்பை பேணி வருகிறது. Huawei நிறுவனத்தால் 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட Huawei Seeds for the Future போன்ற திட்டங்கள் மூலம், இலங்கையில் ICT திறமையாளர்களின் சூழல் தொகுதியின் மேம்பாட்டை நிறுவனம் தொடர்ச்சியாக ஊக்குவித்து வருவதுடன், திறமையான இளைஞர்களுக்கு தொழில் முன்னோட்ட பயிற்சி மற்றும் ICT திறன் தொழில்துறை பயிற்சிகளை வழங்குகிறது. அத்துடன், ICT Academy மற்றும் கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகம் ஆகியவற்றினை நிறுவுவதற்கு 2020 இல் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான Huawei இன் ஒத்துழைப்பைத் தொடர்ந்து குறித்த ஆய்வகம் 2021 இல் திறக்கப்பட்டது. அதே போன்று, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) உடனான ஒத்துழைப்புடன், களத்தில் பணியாற்றும் தொலைத்தொடர்பு பொறியியலாளர்கள் கொண்டுள்ள அறிவு மற்றும் நடைமுறை அறிவுடன் கூடிய, வருடாந்தம் 300 இற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களின் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தொழில் பயிற்சிக்கான NAITA – Huawei ICT Academy ஆகியனவும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

END

Share

You may also like...