நவலோக உயர் கல்வி நிறுவனம் மற்றும் Swinburne பல்கலைக்கழகம் இணைந்து கொழும்பில் 10 ஆவது பட்டமளிப்பு விழாவை கொண்டாடியது

நவலோக உயர் கல்வி நிறுவனம் (NCHS) மற்றும் அவுஸ்திரேலியாவின் Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Swinburne University of Technology) ஆகியன இணைந்து தங்களது 10ஆவது பட்டமளிப்பு மற்றும் பாடநெறி பூர்த்தி விழாவை 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி கொழும்பு, கலதாரி ஹோட்டலின் ரடீசன் புளூ மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடின. கொழும்பு மற்றும் கண்டி வளாகங்களைச் சேர்ந்த வணிகவியல், பொறியியல், சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் அடிப்படைக் கற்கைகள் மற்றும் டிப்ளோமா பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இதன்போது பட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விரு நிறுவனங்களும் பதிவு செய்த 600 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்விச்சேவை வழங்கி வருவதுடன், அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான பாதையையும் வழங்குகின்றது. இவற்றுக்கு இடையிலான 12 வருட கால பங்காண்மையில், இந்த விழாவானது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நிறைவேற்று பீடாதிபதி பேராசிரியர் எமாத் காட் (Prof. Emad Gad) இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். அத்தோடு, பட்டதாரிகளுக்கு உத்தியோகபூர்வமாகப் பட்டங்களை வழங்கிய அவர், பட்டதாரிகள் மத்தியில் விசேட உரையையும் நிகழ்த்தினார். “நீங்கள் தற்போது பெற்றுள்ள Swinburne தகுதியானது வெறும் ஒரு காகிதமல்ல; அது ஒப்பிட முடியாத ஒரு சொத்தாகும்.” என மாணவர்கள் பெற்ற தகுதியின் மதிப்பை விளக்கிய அவர், பட்டதாரிகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக் கொள்ளுமாறும், தங்களது தகுதிகளை புதிய வாய்ப்புகளுக்கான கடவுச்சீட்டாகக் கருத வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பிரதம விருந்தினரான Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய ஈடுபாடுகளுக்கான சார்புத் துணைவேந்தர் கலாநிதி ஜேசன் மெக்கோவர்ன் (Dr. Jason McGovern), வகுப்பறைக்கு வெளியே தமது அறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி சிந்திக்குமாறு பட்டதாரிகளை ஊக்குவித்தார். “உங்களது எதிர்காலப் பங்களிப்பானது நீங்கள் எதை அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதன் மூலம் மட்டும் வரையறுக்கப்படாது; மாறாக, நீங்கள் அறிந்திருப்பதை வைத்து எதைச் செய்யத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதன் மூலமே வரையறுக்கப்படும்.” என குறிப்பிட்ட அவர், தமது அடுத்தடுத்த படிகளில் முன்னேற ஆர்வமும், துணிவும், நோக்கமும் கொண்டவர்களாக மாறுமாறு கேட்டுக்கொண்டார்.

கௌரவ விருந்தினரான இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான முதல் செயலாளர் சின் ஷி (Xin Shi), இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை வலுப்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தினார். அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் எதிர்வரவுள்ள 80ஆவது ஆண்டு நிறைவையும், 2026 ஆம் ஆண்டில் கொழும்புத் திட்டத்தின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவையும் அவர் இங்கு சுட்டிக் காட்டினார். பட்டதாரிகள் பெறுகின்ற உறவுகள், அறிவு மற்றும் திறன்கள் இலங்கைக்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவுமென அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களை, NCHS கல்வியகத்தின் கற்கைகளுக்கான பீடாதிபதி கலாநிதி அலன் ரொபர்ட்சன் (Dr. Alan Robertson) வரவேற்றதுடன், இலங்கை மாணவர்களுக்கு இந்தக் கூட்டணி வழங்குகின்ற நன்மைகளை எடுத்துக் கூறினார். உள்ளூரில் NCHS இன் இருப்பும், புத்தாக்கமான கல்வியில் Swinburne கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வியைத் ஆரம்பிப்பதற்கான சிறந்த அடித்தளத்தை வழங்குகின்றன எனவும், தற்போதைய மற்றும் முன்னாள் பட்டதாரிகளின் சாதனைகள் இந்தப் பாதையின் மதிப்பை நிரூபிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாடநெறிகள் முழுவதும் சிறப்பான கல்விச் செயற்பாடுகளை வெளிப்படுத்தியோரை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் NCHS இன் பிரதித் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விக்டர் ரமணன் மற்றும் கலாநிதி ரொபர்ட்சன் ஆகியோரால் ‘உயர் சாதனையாளர் விருதுகள்’ (High Achiever Awards) வழங்கப்பட்டன. வணிகவியலுக்கான யுனிலிங்க் டிப்ளோமாவில் (UniLink Diploma of Business) சனிதி விதுனிமா சுவாரிஸ் அபேசேகர விருதை வென்றார். பொறியியலுக்கான யுனிலிங்க் டிப்ளோமாவிற்காக சனுக மெண்டிலு பெரேரா மாயாதுன்ன மற்றும் இசுரு உதார யாபா ஹெட்டிகே ஆகியோரும், சுகாதார விஞ்ஞான பாடநெறிக்கான யுனிலிங்க் டிப்ளோமா விருதை சஞ்சலி ஆகாஷா ஜயதிலக பண்டாரநாயக்க முதியான்சேலாகே மற்றும் ஹந்துவெலகெதர இனுரி தினாரா பெனாண்டோ ஆகியோரும் பெற்றனர். தகவல் தொழில்நுட்பத்திற்கான யுனிலிங்க் டிப்ளோமாவிற்காக சனுக தம்கெத் அபேரத்ன மொஹொட்டலாகே மற்றும் Swinburne அடிப்படைத் திட்டத்திற்காக (Swinburne Foundation Program) இசுரி சத்சரணி சமரநாயக்க கங்கானம்கே ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பொறியியலுக்கான யுனிலிங்க் டிப்ளோமா பட்டதாரியான செல்வி அமத்ரி பெரேரா, பட்டமளிக்கும் மாணவர் குழுவின் சார்பில் உரையாற்றியதுடன், தமது கற்கையின் போது ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள் குறித்தும் பேசினார். “எமது தகுதிகள் எமக்கான கதவுகளைத் திறக்கலாம், ஆனால் நாம் அந்த கதவைக் கடந்து சென்ற பின்னர் என்ன செய்கிறோம் என்பதை எமது குணநலன்களே வடிவமைக்கும்” என குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தங்களது கல்விப் பயணங்களைக் கடந்து செல்ல உதவிய ஆதரவு மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட அனுபவங்களின் முக்கியத்துவத்தை இங்கு முன்னிலைப்படுத்தினார்.
பட்டதாரிகள் தங்களது கல்வியின் கட்டத்தைப் பூர்த்தி செய்த நிறைவைக் குறிக்கும் வகையில், இலங்கையின் கலைப் பாரம்பரியங்களைக் கொண்டாடும் ‘ரன்வல பலகாய’ குழுவினரின் கலாசார மேளவாத்தியங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் இடம்பெற்றன.
பட்டதாரிகள் தங்களது கல்வி சார்ந்த மற்றும் தொழில் சார்ந்த பயணங்களின் அடுத்த கட்டத்திற்கு நகரும் இவ்வேளையில், இந்த விழாவானது அவர்களது தனிப்பட்ட சாதனையை மட்டுமன்றி, இலங்கை மாணவர்களை சர்வதேச மட்டத்திலான உயர் கல்விக்கான தெரிவுகளுடன் இணைப்பதில் NCHS – Swinburne உறவின் தொடர்ச்சியான பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
END
Image Caption: நவலோக உயர் கல்வி நிறுவன கல்விப் பீடாதிபதி கலாநிதி அலன் ரொபர்ட்சன், நவலோக உயர் கல்வி நிறுவன பணிப்பாளர் உமேஷ் ரமணன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான முதல் செயலாளர் சின் ஷி, Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழக உலகளாவிய ஈடுபாட்டுக்கான சார்புத் துணைவேந்தர் கலாநிதி ஜேசன் மெக்கோவர்ன், Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிறைவேற்று பீடாதிபதி பொறியியல் பீட பேராசிரியர் எமாத் காட், நவலோக உயர் கல்வி நிறுவன பிரதித் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விக்டர் ரமணன், நவலோக உயர் கல்வி நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் லால் சந்திரசேன, நவலோக உயர் கல்வி நிறுவன இணைப் பீடாதிபதி கலாநிதி பூர்ணிமா வீரசிங்க, கல்வி நிர்வாக சிரேஷ்ட முகாமையாளர் தரிந்து மதுசங்க.

Recent Comments