கொழும்பில் இருந்து கிராமம் வரை உலகத் தரம் வாய்ந்த AI கல்வியை கொண்டு சேர்க்கும் ESOFT

ஐக்கிய இராச்சியத்தின் The AI Board உடனான கூட்டாண்மை, நாடளாவிய ரீதியிலுள்ள 40 கல்வி நிலையங்கள் மற்றும் இணையவழி ஊடாக, 14 வயது முதல் முதுமாணி மட்டம் வரையிலான AI தகைமைப் பாதையைத் திறக்கிறது
ESOFT நிறுவனத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் The Artificial Intelligence Board (The AI Board) அமைப்பிற்கும் இடையிலான புதிய கூட்டாண்மையைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான நகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரையுள்ள கற்போர், 14 வயது முதல் முதுமாணி மட்டம் வரை ஐக்கிய இராச்சியத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தகைமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்தகைமைகளை நாடு முழுவதுமுள்ள ESOFT இன் 40 கல்வி நிலையங்கள் ஊடாகவும், ESOFT Online மூலமான கலப்பு (hybrid) மற்றும் இணையவழிக் கற்றல் ஊடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

14 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்குமான இந்த ஆறு கட்டங்களைக் கொண்ட கற்றல் பாதை, ‘Level 2 Award in Understanding AI’ சான்றிதழுடன் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் Level 3, Level 4, Level 5 தகைமைகள் ஊடாக முன்னேறி, Kingston University London வழங்கும் பட்டப்படிப்பு நிறைவு (Top-up) பட்டங்களுக்கும், ESOFT UNI ஊடாக வழங்கப்படும் M.Sc முதுமாணிக் கற்கைநெறிகளுக்கும் வழிவகுக்கிறது.

இது குறித்து ESOFT குழும நிறுவனங்களின் ஸ்தாபகரும், தலைவரும், குழும முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி தயான் ராஜபக்ஷ தெரிவிக்கையில், “AI ஆனது ஏறக்குறைய அனைத்துத் தொழில்களினதும் ஓர் அங்கமாக மாறி வருவதால், மேலும் அதிகமானோர் அதனைப் புரிந்துகொள்ளவும், பிரயோகிக்கவும், பொறுப்புடன் பயன்படுத்தவுமான ஆற்றலைப் பெற்றிருப்பது முக்கியமாகும். பாடசாலையிலேயே ஆரம்பித்தாலும், உயர் கல்விக்குச் சென்றாலும், அல்லது தமது தொழில் வாழ்க்கையில் AI ஐப் பிரயோகிக்க விரும்பினாலும், இத்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான கட்டமைக்கப்பட்ட, ஐக்கிய இராச்சியத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாதையொன்றை எமது கூட்டாண்மை இலங்கைக் கற்போருக்கு வழங்குகிறது. இந்த வாய்ப்பை இணையவழியாகவும், எமது நிலையங்கள் ஊடாகவும், கல்வியாளர்களுக்கான இலவச AI பயிற்சியின் மூலமாகவும் அனைவரும் அணுகக்கூடியதாக்குவது எமது அர்ப்பணிப்பின் முக்கிய அங்கமாகும்” என்றார்.

கற்போர் இரண்டு கற்கைப் பாதைகளில் ஒன்றைத் தெரிவுசெய்யலாம்: Applied AI & Engineering, மற்றும் சந்தைப்படுத்தல், செயற்பாடுகள், நிதி, மனிதவளம், இணக்கப்பாடு, AI ஆளுகை, மூலோபாயம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய AI Business. இவ்விரு பாதைகளும் இணைந்து, பல்வேறு கல்வி மற்றும் தொழில்சார் துறைகளுக்குப் பொருத்தமான AI திறன்களைக் கற்போர் வளர்த்துக்கொள்ள உதவுவதுடன், AI என்பது நிரலாக்கம் (programming) மற்றும் பொறியியல் பணிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.
இத்தகைமைகள், இங்கிலாந்தின் தகைமைகள் மற்றும் பரீட்சைகளுக்கான ஒழுங்குபடுத்தல் அமைப்பான Ofqual இனால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இதன் மூலம் கற்போர் தெளிவான முன்னேற்றப் பாதையுடன் கூடிய, வரையறுக்கப்பட்ட, கல்வி வரவுப் புள்ளிகளைக் (credits) கொண்ட தகைமைகளைப் பெறுகின்றனர். The AI Board ஆனது AI மற்றும் தரவுத் தகைமைகளுக்காக மாத்திரம் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட, ஐக்கிய இராச்சியத்தின் ஒரேயொரு தகைமை வழங்கும் அமைப்பாகும். அதன் தரநிலைகள், தொழில் வழங்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படுகின்றன.

இது குறித்து ஐக்கிய இராச்சியத்தின் The AI Board அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் இணை ஸ்தாபகருமான திரு. ஜோசப் ஜோன்ஸ் தெரிவிக்கையில், “AI கல்வியானது, தொழில் வழங்குநர்கள் எதிர்பார்க்கும் திறன்களைப் பிரதிபலிப்பதுடன், பொறுப்பான நடைமுறைகளில் கற்போருக்கு உறுதியான அடித்தளத்தையும் வழங்க வேண்டும். AI இன் நடைமுறைப் பயன்பாடுகளுக்குப் பொருத்தமானவையாக இருக்கும் வகையில், எமது தகைமைகள் துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றன. ESOFT உடனான எமது கூட்டாண்மையின் மூலம், இத்தரநிலைகள் தற்போது இலங்கை முழுவதுமுள்ள கற்போருக்கும் கல்வியாளர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக மாறியுள்ளன” என்றார்.
பொறுப்பான AI பயன்பாடு இக்கற்றல் பாதையில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன், நெறிமுறைகள், பக்கச்சார்பு, தனியுரிமை, பொறுப்பான பயன்பாடு போன்ற விடயப்பரப்புகள் கற்றலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு ‘Level 3 Award in AI for Teaching Professionals’ சான்றிதழை இலவசமாக வழங்குவதன் மூலம், ESOFT இத்திட்டத்தைக் கல்வியாளர்களுக்கும் விரிவுபடுத்துவதுடன், பரந்த கல்வி முறைமைக்குள் AI பற்றிய புரிதல் வளர்வதற்கும் ஆதரவளிக்கிறது.
இக்கூட்டாண்மை, 2026 செப்டம்பர் 28ஆம் திகதி பத்தரமுல்லை ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ இல், தொழில்துறை, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ‘AI மூலம் வலுவூட்டப்படும் ஆளுகையும் பொருளாதார அபிவிருத்தியும்’ (AI-Powered Governance and Economic Development) எனும் தலைப்பிலான குழுக் கலந்துரையாடலுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. SRH Berlin பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீ கணேஷ் தோட்டெம்புடி, ஐக்கிய இராச்சியத்தின் The AI Board அமைப்பின் திரு. ஜோசப் ஜோன்ஸ், Huawei Technologies Lanka, இலங்கைக் கணினிச் சங்கம் (Computer Society of Sri Lanka) மற்றும் LK Domain Registry ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. இந்திக டி சொய்சா ஆகியோர் இக்குழுக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
2000ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ESOFT, கல்வித் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், அதன் தொலைதூரக் கல்விப் பிரிவுடன் இணைந்து இலங்கை முழுவதும் 40 கல்வி நிலையங்களை நடாத்தி வருகிறது. பணிபுரியும் தொழில்வல்லுநர்கள் நெகிழ்வான கற்றல் தெரிவுகள் மூலம் தமது கல்வியைத் தொடர முடிவதுடன், கொழும்புக்கு வெளியேயுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள கற்போர் இணையவழியாகவோ அல்லது தமது வீட்டுக்கு அருகிலுள்ள நிலையத்திலோ இக்கற்றல் பாதையை அணுக முடியும்.
AI தகைமைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கும், கிடைக்கக்கூடிய கற்கைநெறிகளை அறிந்துகொள்வதற்கும் www.esoft.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
END

Recent Comments