2026 அனுசரணையாளர் கௌரவிப்பு மற்றும் ஊடக சந்திப்பில் பாரம்பரியத்தையும் எதிர்காலத்தையும் கொண்டாடும் இசிபத்தான கல்லூரி ரக்பி

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பாடசாலை ரக்பி அமைப்புகளில் ஒன்றான இசிபத்தான கல்லூரி ரக்பி அணியானது, அதன் அனுசரணையாளர் கௌரவிப்பு விழா மற்றும் ஊடக சந்திப்பை 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி கொழும்பு கிரான்பெல் (Granbell) ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வு 2026 ரக்பி நாட்காட்டியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அணியின் பாரம்பரியம் மற்றும் எதிர்கால அபிலாஷைகளைக் கொண்டாடும் வகையில் அனுசரணையாளர்கள், பங்குதாரர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊடகங்களை ஒன்றிணைத்தது.

இசிபத்தான கல்லூரியில் ரக்பி என்பது விளையாட்டிற்கும் அப்பாற்பட்டதாகும். இது 1950களின் பிற்பகுதியிலிருந்து ஆரம்பமான ஒரு பெருமைமிக்க பாரம்பரியமாகும். 1960களின் முற்பகுதியில் முறையாக நிறுவப்பட்டது முதல், இக்கல்லூரி இலங்கை பாடசாலை ரக்பியில் ஒரு ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. 1963 இல் அதன் முதலாவது பாடசாலைகளுக்கிடையிலான வெற்றியைத் தொடர்ந்து, இசிபத்தான விரைவாக தேசிய அங்கீகாரத்தை பெற்றதுடன், சிறந்து விளங்குவதிலும் நிலையான தன்மையிலும் பெயர்பெற்று விளங்குகின்றது.

இலங்கையின் ‘Kings of Schools Rugby’ (பாடசாலை ரக்பி மன்னர்கள்) என பரவலாகக் கருதப்படும் இசிபத்தான கல்லூரி, சாதனை ரீதியாக 14 முறை ஜனாதிபதி கிண்ண (President’s Trophy) சம்பியன் பட்டங்களை வென்று ஈடு இணையற்ற பாரம்பரியத்தை நிலைநாட்டியுள்ளது. ‘Green Machine’ (கிரீன் மெஷின்) என அழைக்கப்படும் இந்த அணியின் தொடர்ச்சியான வெற்றியானது, ஒழுக்கம், மன உறுதி, வலுவான வெற்றிக் கலாசாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்து வந்த ஆண்டுகளில், இசிபத்தான 6 முறை முப்பெரும் சம்பியன் பட்டங்களையும் (Triple Championships), 18 பாடசாலை ரக்பி செவன்ஸ் பட்டங்களையும், 14 லீக் சம்பியன் பட்டங்களையும், 15 நொக்-அவுட் சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளதுடன், 12 இற்கும் மேற்பட்ட பருவகாலங்களில் தோல்வியை அடையாத சாதனையையும் பதிவு செய்துள்ளது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இக்கல்லூரி 70 இற்கும் மேற்பட்ட தேசிய வீரர்களை உருவாக்கியுள்ளது, இலங்கை ரக்பிக்கு ஒரு முன்னணி பங்களிப்பாளராக அதன் நிலையை இது உறுதிப்படுத்துகிறது. இதன் செல்வாக்கானது வீரர்களுக்கு அப்பால் விரிவடைந்து, டில்ரோய் பெனாண்டோ, நிசாம் ஜமால்தீன் போன்ற சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நடுவர்களையும், அனா சரணபால, எம்.டி. இப்திகார், சனத் மார்டிஸ் போன்ற நாட்டின் முன்னணி பயிற்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது.

2026 பருவகாலத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சம் யாதெனில், சனத் மார்டிஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமையாகும், இது ஒரு முக்கிய மீள்வருகையாக கருதப்படுகிறது. முன்னாள் தேசிய வீரரும், பாடசாலை ரக்பி விளையாட்டில் மிகவும் வெற்றிகரமான ஆளுமைகளில் ஒருவருமான மார்டிஸ், அணியின் செயல்திறனை உயர்த்துவதற்கான விரிவான அனுபவம், தலைமைத்துவம் மற்றும் தெளிவான தொலைநோக்குப் பார்வையை ஏற்படுத்தி வருகிறார். பயிற்சியாளர் குழுவை மேலும் வலுப்படுத்தும் வகையில், முன்னாள் பிஜி (Fiji) சர்வதேச வீரர் சைமோனி ரோகினி (Saimoni Rokini) ஆலோசகராக இணைந்துள்ளார்.

2026 அணியை தலைவர் ஷகிப் சும்ரி வழிநடத்துவார், அவருடன் உப தலைவர்களாக நிமத சந்தீப மற்றும் அப்துல் அஸீஸ் ஆகியோர் ஆதரவு வழங்குவார்கள்.

இந்த அனுசரணையாளர் கௌரவிப்பு விழாவில், பிரதான அனுசரணையாளரான Fortune Soy நிறுவனத்துடன் இணைந்து, இணை அனுசரணையாளர்களான KFC மற்றும் Sense.lk ஆகியோரின் ஆதரவிற்கு கௌரவமளிக்கப்பட்டது. வெண்கல அனுசரணையாளர்களாக Macson Mesh Industries, TVS, MAS ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. அத்துடன் UDDS விசேட அனுசரணையாளராக இணைந்துள்ளது. 14 வயதிற்குட்பட்ட அணியின் அபிவிருத்திப் பாதைக்கு Group 89 ஆதரவளிக்கிறது.

மேலதிக கூட்டாண்மையாளர்களாக விருந்தோம்பல் கூட்டாளராக Pearl Beach; புகைப்படக்கருவி கூட்டாளர்களாக Camera.lk மற்றும் SONY; சுகாதார கூட்டாளராக லிங்க் நேச்சுரல் சமஹன்; போசாக்கு கூட்டாளராக Appeton; மற்றும் அழகு பராமரிப்பு கூட்டாளராக Gold ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. விளையாட்டுத் தொடர் அனுசரணையாளராக தொடர்ந்தும் Dialog திகழ்கிறது, அத்துடன் ஹொட் அன்ட் ஸ்பைசி கூட்டாளராக Kottu Mee மற்றும் தளபாட கூட்டாளராக Koko Kiddies Land ஆகியனயும் ஆதரவளிக்கின்றன.

ஊடக ஆதரவை உத்தியோகபூர்வ ஊடகப் பங்காளர்களான ஹிரு டிவி மற்றும் சன் எஃப்.எம் ஆகியன முன்னெடுக்கின்றன. உள்ளடக்கங்களின் கையாளுகை கூட்டாளராக Content Wizards, வெளியக ஊடக பங்காளராக Emerging Media ஆகியன செயற்படுகின்றன. மக்கள் தொடர்பாடல் பணிகளை PR Wire நிர்வகிக்கிறது.

இந்த நிகழ்வானது, இவ்வருடத்தின் ஆரம்பத்தில் Hilton Colombo ஹோட்டலில் வெற்றிகரமாக இடம்பெற்ற பருவ அறிமுகத்தைத் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த ரக்பி முகாமைத்துவ மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைவர் கெலும் ரொட்ரிகோ, இசிபத்தான ரக்பி அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், அனுசரணையாளர்கள் மற்றும் அதன் விசுவாசமான ஆதரவாளர்களின் அர்ப்பணிப்பே காரணம் என குறிப்பிட்டார்.

இன்று, இசிபத்தான கல்லூரி ரக்பி என்பது தொடர்ச்சியான விசேடத்துவம், தலைமைத்துவம் மற்றும் விளையாட்டுத் திறனின் அடையாளமாகத் திகழ்கிறது. ஒரு பெருமைமிக்க பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வையுடன், ‘Green Machine’ என அறியப்படும் இசிபதான அணி, இளம் வீரர்களை களத்திலும் களத்திற்கு அப்பாலும் சிறந்து விளங்க தொடர்ச்சியாக தூண்டி வருகிறது.

Share

You may also like...