ICC தரநிலைகளுக்கு ஏற்ற இலங்கையின் முதலாவது LED மைதான மின்விளக்குகளை நிறுவிய DIMO

விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டில் தமது முன்னணித்துவ தலைமைத்துவத்தை வலியுறுத்தும் வகையில் DIMO நிறுவனம் இலங்கையின் முதலாவது மற்றும் இரண்டாவது LED மைதான மின்விளக்கு கட்டமைப்புகளை நாட்டின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் வெற்றிகரமாக நிறுவியுள்ளதை அறிவித்துள்ளது. இதன் முதலாவது நிறுவல் 2023 ஆம் ஆண்டு ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RDICS) நிறுவப்பட்டதுடன், இரண்டாவது நிறுவல் 2025 இல் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RPICS) நிறுவப்பட்டுள்ளது.
1980 களில் ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கையின் முதலாவது மற்றும் உலகின் இரண்டாவது மின்விளக்கு கட்டமைப்பை நிறுவி, உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்த DIMO நிறுவனத்தின் வரலாற்றுச் சாதனையை இது மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், விளையாட்டு மைதான மின்விளக்கு தொழில்நுட்பத்தில் முன்னோடி எனும் அதன் பாரம்பரியத்தை நிறுவனம் மீள நிலைநிறுத்தியுள்ளது.
உலகளாவிய ரீதியில், மைதானங்கள் மேம்பட்ட LED விளக்கு தொழில்நுட்பத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் தனது சர்வதேச மைதானங்களை LED மைதான விளக்கு கட்டமைப்புகளுடன் மேம்படுத்தத் ஆரம்பித்துள்ளது. பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் இந்த முயற்சியானது, இலங்கையின் விளையாட்டு உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
புதிய LED கட்டமைப்புகள், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பகலிரவு போட்டிகள் மற்றும் உயர்தர HD தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கான உரிய ஒளி வெளியீடுகளை உறுதிப்படுத்துவதோடு, 4K மற்றும் 8K ஒளிபரப்புகளையும் ஆதரிக்கின்றன. சமச்சீரான ஒளியை வழங்கி, நிலையான நிற வெப்பநிலையை பேணுவதோடு கண்கள் கூசுவதை தடுக்கும் வசதிகளைக் கொண்டுள்ளதால், மைதானத்தில் உள்ள பார்வையாளர்களுக்கும் உலகளாவிய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கும் தெளிவான காட்சிகளை வழங்க உதவுகிறது. இவை தவிர, பளபளப்புகளை நீக்கும் (flicker-free) தொழில்நுட்பமானது, மெதுவான சலனப்பட வீடியோக்கள் மற்றும் DRS போன்ற முக்கிய அம்சங்களுக்கான தரத்தை மேம்படுத்துகிறது. இது விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பையும் இரவுநேர ஆட்டங்களில் தெளிவான காட்சியையும் உறுதிப்படுத்துகிறது.
செயல்திறனைக் கடந்து, இக்கட்டமைப்புகள் பல்வேறு சூழல் மற்றும் செயற்பாட்டு நன்மைகளை வழங்குகின்றன. பாரம்பரிய மைதான மின்விளக்குகளுடன் (metal-halide) ஒப்பிடுகையில், இந்த LED தொழில்நுட்பமானது நீண்ட ஆயுள், குறைந்த மின்சக்தி நுகர்வு, குறைந்த வெப்ப வெளியேற்றம் மற்றும் குறைந்த பராமரிப்புத் தேவைகளைக் கொண்டுள்ளது. அத்துடன், வெள்ளி (mercury) உலோகம் போன்ற அபாயகரமான பொருட்கள் இதில் காணப்படுவதில்லை என்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் பாதுகாப்பானதுமாகும்.
விளையாட்டுப் பயிற்சி மற்றும் மைதான பராமரிப்பு வேளைகளில் பகுதியளவில் ஒளியை வழங்கும் கட்டுப்பாட்டு வசதிகள் இதில் காணப்படுவதோடு, நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற, இலத்திரனியல் மங்கலாக்கல் (digital dimming) கட்டமைப்பு மற்றும் மாறுபட்ட ஒளி விளைவுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
அந்த வகையில், ஆர். பிரேமதாச மைதானத்தில், பிரதான மைதான பகுதியில் 660 உயர் செயல்திறன் கொண்ட LED மின்விளக்குகள் மற்றும் வலைப்பயிற்சி பகுதிக்காக 72 மின்விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த பழைய தூண்களை பாதுகாப்பாக அகற்றும் பணி, 58 மீற்றர் உயரமுள்ள புதிய பாரிய உருக்குத் தூண்களை நிறுவும் பணி உள்ளிட்ட சிவில், இயந்திரவியல், மின்சார பணிகள் இதில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை பின்பற்றி, எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வகையில் இப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆர். பிரேமதாச மைதான பணிகளுக்காக, மைதானம் முழுவதும் சுமார் 1,100 மீற்றர் நீளம் கொண்ட கேபிள்களும், மின்விளக்கு கோபுரங்களுக்குள் 52,800 மீற்றர் நீள கேபிள்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மைதானத்தில், தரை மட்டத்தில் 1,780 மீற்றர் நீள கேபிள்களும், கோபுரங்களுக்குள் 56,100 மீற்றர் நீள கேபிள்களும் நிறுவப்பட்டு, தடையற்ற செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல தெரிவிக்கையில், “இரவு நேர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக, சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஒளியமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், DIMO நிறுவனம் முன்னேற்றகரமான LED மைதான மின்விளக்குத் தொகுதிகளை முழுமையான (turnkey) முறையில் வழங்குவதன் மூலம் பூர்த்தி செய்துள்ளது. இது, உலகளாவிய தொழில்நுட்பங்களை உள்ளூர் உட்கட்டமைப்புகளுக்கு கொண்டு வருவது தொடர்பான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ஒளியமைப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் தேசிய அளவிலான பல திட்டங்களை நிறைவேற்றிய அனுபவம் கொண்ட DIMO நிறுவனத்தின் Lighting Solutions குழுவின் திறமை மூலம், வடிவமைப்பு, நிறுவல் மற்றும் செயல்திறன் ஆகிய துறைகளில் உரிய தொழில் தரத்தை அதிகரித்தவாறு எமது பயணம் தொடர்கிறது.” என்றார்.
சர்வதேச தரங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஒளியமைப்புத் தீர்வுகளை வழங்கும் சிறப்பான சாதனை மிக்க வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டுள்ளமை காரணமாகவே இத்தகைய பெருமைக்குரிய திட்டங்களுக்காக DIMO நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பு முதல் விநியோகம், பரிசோதனை, செயற்பாட்டுக்கு கொண்டுவருதல் மற்றும் நிறுவலுக்கு பின்னரான சேவைக்கான ஆதரவு வரை, எதிர்காலத்திற்கு தயார் நிலை கொண்ட உட்கட்டமைப்புத் தீர்வுகளை வழங்கும் தனது முழுமையான திறனை DIMO நிறுவனம் இத்திட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளது. முன்னேற்றகரமான புகைப்பட அளவீட்டு (photometric) ஒத்திகைகள் மற்றும் ICC தரநிலைகள் குறித்த ஆழமான அறிவைப் பயன்படுத்தி, ஒவ்வொரு விளையாட்டு அரங்கிற்குமான தனித்துவமான தேவைகளை நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது.
தங்களது உள்ளக தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் விற்பனைக்குப் பின்னரான வலுவான சேவை உட்கட்டமைப்பின் ஆதரவுடன், பரந்துபட்ட திட்ட நிறைவேற்றலையும் நீண்டகால நம்பகத்தன்மையையும் DIMO உறுதி செய்துள்ளது. நுண்ணறிவுடனான கட்டுப்பாட்டு அமைப்புகளையும் உலகத் தரம் வாய்ந்த LED அமைப்புகளையும் ஒருங்கிணைக்க, உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கொண்டுள்ள அதன் கூட்டாண்மைகள் காரணமாக அமைந்துள்ளது.
இவ்விளையாட்டு அரங்குகளுக்கான LED மைதான மின்விளக்குத் தொகுதிகளின் நிறுவல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதன் மூலம், இலங்கையின் விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதில் DIMO நிறுவனத்தின் முக்கிய பங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
END
Recent Comments