ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி 2025/26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 2.15 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு

Dilshan Wirasekara – முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி, ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னணி முழு-அளவிலான முதலீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமுமான ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2025 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிதிப் பெறுபேறுகளை அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், முதல் காலாண்டில் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2.15 பில்லியனை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 582 மில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உறுதியான வினைத்திறனினூடாக, இலங்கையின் முன்னணி முதலீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் நிறுவனத்தின் நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூலோபாய சந்தை ஒத்திசைவு மற்றும் துறை பல்வகைப்படுத்தல் போன்றன இந்த வளர்ச்சியில் முக்கிய பங்களிப்புச் செய்திருந்தன.

நிறுவனத்தின் தொழிற்பாட்டு செலவுகளுக்கு முன்னரான தேறிய வியாபார வருமானம் ரூ. 3.40 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னயை ஆண்டின் முதல் காலாண்டில் இந்தப் பெறுமதி ரூ. 1.12 பில்லியனாக காணப்பட்டது. நாணயக் கொள்கை வீதங்களில் வீழ்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் எழுந்த சாதகமான சந்தை சூழலில் வினைத்திறனான நிறைவேற்றத்தை பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் பிரதான வர்த்தக (Primary Dealer) பிரிவு பிரதான பங்காளராக பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 1.55 பில்லியனை எய்தியிருந்தது. (2024/25 காலப்பகுதியில் ரூ. 464 மில்.). இதில் ரூ. 2.06 பில்லியன் அரசாங்க கடன்பத்திரங்களிலிருந்து கிடைத்த வர்த்தக வருமானம் மற்றும் தேறிய வட்டி வருமானம் ரூ. 503 மில். போன்றன அடங்கியுள்ளன. கடந்த ஆண்டில் இந்தப் பெறுமதி முறையே ரூ. 462 மில். மற்றும் ரூ. 387 மில். ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டாண்மை நிதியியல் ஆலோசனை மற்றும் கூட்டாண்மை கடன் பத்திர கொடுக்கல் வாங்கல் பிரிவுகளும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. இணைந்த வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 587 மில்லியனை (2024/25 காலப்பகுதியில் ரூ. 73 மில்.) பதிவு செய்திருந்ததனூடாக, புதுப்பிக்கப்பட்ட மூலதன சந்தை செயற்பாடு மற்றும் மூதலீட்டாளர் ஆர்வத்தை பிரதிபலித்திருந்தது.

இதேவேளை, நிதி மேலாண்மை பிரிவு (Wealth Management Division) வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 27 மில்லியனை பதிவு செய்திருந்தது (2024/25 காலப்பகுதியில் ரூ. 29மில்.). நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள் (Assets under Management)  2025 ஜுன் 30 அன்று ரூ. 108 பில்லியனாக காணப்பட்டது (2025 மார்ச் 31 இல் ரூ. 112 பில். ஆக பதிவாகியிருந்தது). இதில் தொடர்ச்சியான வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் நிலையான முதலீட்டு திட்ட உத்திகள் ஆதரவளித்திருந்தன.

பங்கு முகவர் பிரிவு தொடர்ந்தும் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 32 மில்லியனை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 15 மில்லியனுடன் ஒப்பிடுகையில் சுமார் இரட்டிப்புத் தொகையை எய்தியுள்ளது.

இந்த நேர்த்தியான பெறுபேறுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் லங்கா கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் (LRA), நிறுவனத்தின் கடன் தரப்படுத்தலை “A” இலிருந்து “A+” ஆக உயர்த்தியிருந்தது. positive என்பதிலிருந்து stable எனும் நிலைக்கு இந்த தரப்படுத்தலை வழங்கியிருந்தது. அதனூடாக உறுதியான நிதி மீட்சி மற்றும் சந்தை உறுதித் தன்மை போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் தலைவர் ராஜேந்திர தியாகராஜா, இந்தப் பெறுபேறுகள் தொடர்பில் தெரிவிக்கையில், “நிறுவனத்தின் மூலோபாய தெளிவுத்தன்மை, உரிய நேரத்தில் தீர்மானமெடுத்தல் மற்றும் பிரிவுசார் ஆழமான நிபுணத்துவம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பெறுபேறுகள் அமைந்துள்ளன. மாற்றமடையும் சந்தை போக்குகளுக்கு மத்தியில், பிரதான பிரிவுகளில் நிலைபேறான பெறுமதிகளை உருவாக்கும் ஆற்றலை ஃபஸ்ட் கெப்பிட்டல் வெளிப்படுத்தியிருந்தது. மேம்படுத்தப்பட்ட கடன் தரப்படுத்தலினூடாக, எமது நீண்ட கால செயற்பாடுகள் மற்றும் கடுமையான இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் போன்றவற்றில் சந்தையின் நம்பகத்தன்மை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

ராஜேந்திர தியாகராஜா – தலைவர், ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி

ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “கடன் மற்றும் பங்குச் சந்தைகளில் எழும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் நாம் எம்மை மூலோபாய ரீதியில் நிலைநிறுத்தியுள்ளோம். மேம்பட்ட சந்தை சூழல்களை எமது பிரதான விற்பனையாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிதியியல் அணிகள் பயன்படுத்திக் கொண்டதுடன், எமது வெல்த் மனேஜ்மன்ட் மற்றும் பங்கு முகவர் பிரிவுகள் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளன. புத்தாக்கத்தை கட்டியெழுப்புவது, வாடிக்கையாளர் உறவுகளை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டு வங்கியியல் பிரிவில் எமது தலைமைத்துவத்தை பேணுவது போன்றவற்றில் நாம் தொடர்ந்தம் கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.

குறைந்த வட்டி வீதங்களினால் சந்தை செயற்பாடுகளில் ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பங்காளர்களுக்கு உயர் வருமதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மற்றும் வினைத்திறன் அடிப்படையிலான வழிமுறையை ஒன்றிணைத்து வழங்கும் நிறுவனம், இலங்கையின் மூலதன சந்தை மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.

###.

First Capital Holdings PLC பற்றி

இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகளை லங்கா கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் (LRA), “A” யிலிருந்து “A+” ஆக மேம்படுத்தி, கண்ணோட்டம் Positive இல் இருந்து Stable ஆக மாற்றப்பட்டுள்ளது.

Share

You may also like...