GoviLab AgriTech Accelerator திட்டத்தின் 2ஆவது அங்கத்தை Hatch நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தளமான Hatch, சர்வோதய சிரமதான இயக்கத்துடன் இணைந்து முன்னெடுத்த தனது ‘GoviLab AgriTech Accelerator’ திட்டத்தின் இரண்டாவது அங்கம் (Cohort) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையில் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய உயர் ஆற்றல் கொண்ட தீர்வுகளை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ‘அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் விவசாய உருமாற்றம்’ (Inclusive Digital Agriculture Transformation – IDAT) முயற்சியின் கீழ், 2023 ஓகஸ்ட் மாதம் ‘GoviLab’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது வருமானம் ஈட்ட ஆரம்பித்த விவசாய மற்றும் விவசாய தொழில்நுட்பம் (Agri-tech) சார்ந்த வணிகங்களுக்கான ஒரு தேசிய விரைவூட்டல் திட்டமாக செயற்படுகின்றது. இத்திட்டத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவம், வணிக ஆலோசனை, சந்தைக்கான அணுகல் மற்றும் திறன் மேம்பாடு போன்ற கட்டமைப்பு ரீதியான ஆதரவுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த இரண்டு வருடங்களில் (2024-2026), இத்திட்டமானது இரண்டு அங்கங்களின் ஊடாக, மொத்தமாக 20 புத்தாக்க வணிக ஆரம்ப நிறுவனங்களுக்கு (Startups) ஆதரவளித்துள்ளது. இந்த முயற்சிகள் விவசாய உற்பத்தித்திறன், நிலைபேறான தன்மை, டிஜிட்டல் தழுவல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி போன்ற தேசிய முன்னுரிமைகளுடன் நெருக்கமாக இணைந்துள்ளன.
இத்திட்டத்தின் தாக்கம் குறித்து Hatch Innovation இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மெவான் பீரிஸ் தெரிவிக்கையில், “இலங்கையில் 30% ஆன மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதன் பங்களிப்பு 8% இற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இத்துறைக்கு தொழில்நுட்ப மாற்றங்களை பின்பற்றுதல் மற்றும் வினைத்திறன் மிக்கதாக மாறுதல் என்பன மிகவும் அவசியமானதாகும். GoviLab ஊடாக, விவசாயத் துறையை எதிர்காலத்திற்கு ஏற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கான தேசிய தளத்தை நாம் வழங்குகிறோம். இத்திட்டத்தின் முதல் இரண்டு குழுவினரும், தேசிய அளவில் தங்கள் தீர்வுகளை விரிவாக்க ஆதரவு தேவைப்படும் விவசாய தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களின் மகத்தான ஆற்றலை தெளிவாக நிரூபித்துள்ளனர்.” என்றார்.
இத்திட்டத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு வகையான புத்தாக்க தீர்வுகளில் பின்வருவன உள்ளடங்குகின்றன:
- நெற் பயிர்ச்செய்கையில் உரமிடல் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முகாமைத்துவத்திற்கு ட்ரோன் தொழில்நுட்பம்.
- பசுமை இல்லம் மற்றும் திறந்தவெளி பயிர்ச்செய்கைக்கான துல்லியமான நவீன விவசாயத்தீர்வுகள்.
- வனவிலங்கு மனித மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள்.
- உள்ளூரில் உற்பத்தி செ ய்யப்பட்ட விவசாய இயந்திரங்கள்.
- தொழிலாளர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதற்கும், நிதி வசதிகளைப்பெறுவதற்கும் மற்றும் விளைச்சலை மேம்படுத்துவதற்குமான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்.
இந்த இரண்டாவது அங்கத்தின் பயணமானது, மார்ச் 10ஆம் திகதி இடம்பெற்ற ‘Demo Day’ நிகழ்வுடன் நிறைவடைந்தது இதில் பங்கேற்ற நிறுவனங்கள் தங்களது மேம்படுத்தப்பட்ட தீர்வுகளை தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு காட்சிப்படுத்தியதன் மூலம் பரந்துபட்ட தொடர்பு வலையமைப்புடனும் வளவாளர்களுடனும் இணைப்பை ஏற்படுத்தி உயர்ந்த பலனை பெற வாய்ப்பை பெற்றனர்.
இது குறித்து சர்வோதய சிரமதான இயக்கத்தின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “தொழில்நுட்ப புத்தாக்கத்தையும் அடிமட்டத்தில் இருந்தான வளர்ச்சியையும் இணைப்பதற்கான வலிமைக்கு GoviLab ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த விவசாய தொழில்நுட்ப தீர்வுகள் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கும், இலங்கையின் விவசாயத்திற்கு வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்குமான திறவுகோலாக அமையும்.” என்றார்.
Hatch
Hatch ஆனது இலங்கையின் முன்னணி புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பாகும். இது பல்வேறுதுறைகளில் வளர்ச்சியடைந்து வரும் நிறுவனங்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் மற்றும் அவற்றை விரைவூட்டுவதற்கான திட்டங்களை வழங்கி வருவதன் மூலம் இலங்கையில் பல்வேறு துறைகளில் அளவிடக்கூடிய முயற்சிகளை உருவாக்குவதில் நிறுவனர்களை ஆதரிக்கிறது.
Sarvodaya
சர்வோதய சிரமதான இயக்கம் என்பது என்பது இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக விரிவாகப் பணியாற்றிய ஒரு அடிமட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகும்.

Recent Comments