கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களுக்கு எதிராக AMW நடவடிக்கை

இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Limited (AMW) ஆனது, Yamaha மோட்டார் சைக்கிள்களுக்கான போலி உதிரிப்பாகங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை குறிவைத்து AMW சோதனைகள் முன்னெடுத்திருந்தது. இதன்போது சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அசல் Yamaha உதிரிப்பாகங்களைப் போன்று போலி உதிரிப்பாகங்கள் தோற்றமளித்தாலும், அதே தரநிலைகளில் அவை தயாரிக்கப்படுவதில்லை. அவை விரைவில் சேதமடைவதுடன் வாகனத்தின் செயல்திறனையும் பாதிப்படையச் செய்கின்றன. இதன் மூலம் மோட்டார்சைக்கிள் சாரதிகளும் பயணிகளும் உயிரிழப்பு போன்ற ஆபத்தில் சிக்கக்கூடும். பிரேக் பேட்கள், ஸ்பார்க் பிளக், பில்டர்கள், கேபிள்கள் போன்ற எதுவாக இருந்தாலும், மிகச் சிறியதொரு போலி உதிரிப்பாகமும் வீதியில் பெரும் விபத்துக்கு வழிவகுக்கலாம்.
Yamaha ஜெனுயின் உதிரிப்பாகங்கள் மற்றும் இதர சாதனங்களுக்கான இலச்சினையை (லோகோ) பொதியில் சரிபார்க்குமாறு வாடிக்கையாளர்களுக்கு AMW ஆலோசனை வழங்குகிறது. AMW வழங்கும் அசல் Yamaha உற்பத்திகளில் அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் AMW ஹோலோகிராம் ஸ்டிக்கர் இணைக்கப்பட்டிருக்கும். நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட AMW–Yamaha முகவர்களிடமிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், அவற்றின் தரம் மற்றும் தோற்றத்தை கவனிக்குமாறும் நிறுவனம் அறிவுறுத்துகின்றது. ஜெனுயின் உதிரிப்பாகங்கள் துல்லியமான பொறியியல் அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு, நிறம், மூலப்பொருள், நிறை ஆகியவற்றில் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். அது குறித்து சந்தேகம் இருப்பின், கொள்வனவு செய்வதற்கு முன்னர் முகவரிடம் அது குறித்து கேட்டு உறுதிப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போலி மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை விற்பனை செய்வது முறைகேடான நடவடிக்கை மட்டுமல்லாது, இலங்கை சட்டத்தின்படி அது குற்றமாகும். இத்தகைய சட்டங்கள் கேடு விளைவிக்கும் பொருட்களிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கவும், Yamaha போன்ற நம்பகமான உலகளாவிய வர்த்தகநாமங்களின் நற்பெயரை காக்கவும் அமைக்கப்பட்டுள்ளன. சந்தை கண்காணிப்பு மற்றும் இரகசிய வாடிக்கையாளர் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளின் மூலம் போலி உற்பத்திகளின் விற்பனையில் ஈடுபடும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக AMW நிறுவனம் சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. அனைத்து Yamaha மோட்டார் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பிற்காக, போலி உதிரிப்பாகங்கள் தொடர்பான அபாயங்களைப் பற்றி AMW பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் மேம்படுத்தி வருகிறது. போலி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளது
Recent Comments