Amrak – Deakin இணைந்து இலங்கை தாதியர்கள் அவுஸ்திரேலியாவில் பயிற்சி பெறுவதற்கான பாதையை அமைக்கின்றன

Amrak Institute of Medical Sciences நிறுவகம், அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கை தாதியர் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட தாதியர்களாக மாறுவதற்கான நேரடிப் பாதையை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டாண்மையின் மூலம், Amrak மூன்றாம் வருட தாதிய மாணவர்கள், இறுதி வருட கற்கையைத் தொடர Deakin பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பட்டம் பெற்றவுடன் அவர்கள் Deakin பட்டச் சான்றிதழைப் பெறுவதுடன், அவுஸ்திரேலியாவில் பதிவு செய்து தாதியர்களாக பணியாற்றவும் தகுதி பெறுவார்கள்.
2030 இற்குள் உலகளாவிய ரீதியில் 11 மில்லியன் சுகாதாரத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கணித்துள்ள நிலையில், இந்த முயற்சியானது மிகவும் முக்கியமான காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவுஸ்திரேலியாவில் மாத்திரம் 2035 இற்குள் 70,000 இற்கும் மேற்பட்ட தாதியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதன் காரணமாக, சர்வதேச ரீதியில் இந்த நெருக்கடியை சமாளிப்பதில் இத்துறையில் பயிற்சி பெற்ற நிபுணத்தும் பெற்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.
தாதியர் மற்றும் சுகாதார உடற்கல்வி பாடத்திட்டங்களுக்காக உலகளாவிய ரீதியில் சிறந்த தரவரிசையில் அமைந்துள்ள Deakin பல்கலைக்கழகம், கல்விசார் விசேடத்துவத்தையும் புத்தாக்கத்தையும் இந்த கூட்டாண்மைக்கு பங்களிக்கிறது. அதேசமயம், JCI அங்கீகாரம் பெற்ற Durdans Hospital இன் சிறந்த கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளை வழங்கும் Amrak நிறுவகம் அதன் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. அத்துடன், Amrak நிறுவனம் Tertiary and Vocational Education Commission (TVEC) இன் முழுமையான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எனவே இதில் கற்கும் பட்டதாரிகள் Private Health Services Regulatory Council (PHSRC) இல் பதிவு செய்யத் தகுதி பெறுகின்றனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட Deakin பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜோன் மொலோனி (John Molony), “இலங்கை மாணவர்களுக்கு இவ்வாறான பாதையை உருவாக்குவதற்காக Amrak நிறுவகத்துடன் இணைந்தமை தொடர்பில் Deakin பெருமை கொள்கிறது. உலக தரநிலைகளுக்கு ஏற்ப, தாம் சேவை செய்யும் சமூகங்களுக்கு கருணையுடனும் பண்பாட்டு புரிதலுடனும் பணியாற்றக் கூடிய சுகாதார நிபுணர்களை உருவாக்குவதில் எமது இரு நிறுவகங்களும் இணைந்து பணியாற்றுகின்றன.” என்றார்.
இது பற்றி Amrak நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரங்க விமலசூரிய தெரிவிக்கையில், “இந்த கூட்டாண்மை எமது மாணவர்களுக்கு ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான பாதையாகும். இது இலங்கையில் தாதிய கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு, எமது பட்டதாரிகள் உலகளாவிய சுகாதார கட்டமைப்புகளுக்கு பங்களிப்பதற்கான கதவுகளைத் திறக்கிறது.” என்றார்.
இந்த கூட்டணியானது, திறமையான தாதியர்களை உலகளாவிய ரீதியில் காணப்படும் கேள்வியுடன் இணைப்பதோடு, இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச சுகாதாரத் துறையில் தெளிவான, கட்டமைக்கப்பட்ட மற்றும் விரைவான பாதையை ஏற்படுத்துகிறது.
Recent Comments