FACETS Sri Lanka 2026: Cinnamon Life இல் புதிய யுகத்தின் தொடக்கம்

இலங்கையின் மிகப் பிரபலமான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, மாற்றத்தின் அடையாளத்துடன் அதன் 32ஆவது பதிப்பை பெருமையுடன் அறிவித்துள்ளது. உலகளாவிய கவனத்தை பெற்றுள்ள இந்நிகழ்வானது, 2026 ஜனவரி 03 முதல் 05 வரை Cinnamon Life இன் ‘City of Dreams’ இலுள்ள The Forum இல் புதிய பல மாற்றங்களுடன் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் FACETS கண்காட்சியானது, உயர்ந்த பாரம்பரியத்தைத் தாண்டி, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் வரலாறையும் எதிர்காலத்தை நோக்கிய பார்வையையும் பிரதிபலிக்கும் புதிய தூரநோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தோற்றத்தின் அடையாளம், உணர்வூட்டும் அனுபவங்கள் மற்றும் நவீன புத்தாக்கத்துடனான பிரசார நடவடிக்கைகளுடன், FACETS 2026 கண்காட்சி உலகின் கவனத்தை உலகாளவிய இரத்தினக்கல் தாயகமான இலங்கை மீது மீண்டும் திரும்பச் செய்வதோடு, இதனை ஆராய அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.
‘சுரங்கத்திலிருந்து சந்தைக்கு’ பாதையின் 32 வருட நிறைவு
1991 இல் ஆரம்பிக்கப்பட்ட FACETS Sri Lanka கண்காட்சியானது ஒரு குறுகிய தொழில்துறை நிகழ்விலிருந்து தற்போது சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. இது இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைவண்ணத்தை உலகத்துடன் இணைக்கும் ஒரு தளமாகும். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, இந்த நிகழ்வு Ceylon Sapphire (இலங்கையின் நீல மாணிக்கம்) மற்றும் உள்நாட்டின் இரத்தினக்கல் பட்டைதீட்டும் நிபுணர்களின் திறமைகளையும், இலங்கையின் ஒப்பிட முடியாத இயற்கையான புதையலையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் முக்கிய வகித்துள்ளது.
ஆரம்பத்தில் ஹில்டன் மற்றும் BMICH ஆகிய இடங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வு, Cinnamon Grand ஊடாக தற்போது மிகவும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள Cinnamon Life இல் புதிய பரிமாணத்துடன் நடைபெறவுள்ளதன் மூலம், FACETS கண்காட்சியானது அதன் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (SLJGA) தலைவர் அக்ரம் காசிம் இது குறித்து தெரிவிக்கையில், “FACETS என்பது வெறுமனே ஒரு கண்காட்சிக்கு அப்பாற்பட்டதாகும். இது இலங்கையின் பாரம்பரியம், திறமை மற்றும் உலகளாவிய நோக்கங்களுக்கான கொண்டாட்டமாகும். FACETS 2026 கண்காட்சி, கடந்த காலத்தை மதிப்பதோடு, எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் புதிய அத்தியாயமாகும் ஒரு திருப்பமாகும்” என்றார்.
புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் நீல மாணிக்கத்தின் பிரகாசம்
FACETS 2026 கண்காட்சி, பாரம்பரியமான பண்டைய நிலைபேறான சுரங்க அகழ்வு முறைகள் முதல் நவீன தொழில்நுட்பங்களுடனான மாணிக்கக்கல் பட்டை தீட்டுதல், நெறிமுறை சார்ந்த வளப் பயன்பாடு, நவீன நகை வடிவமைப்புகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு முழுமையான பயணத்தை கண்முன்னே கொண்டு வரும் நிகழ்வாக அமையவுள்ளது. இரத்தினக்கல் சார்ந்த மற்றும் பட்டைதீட்டும் தொழில்நுட்பங்களில் உள்ள புதிய முன்னேற்றங்கள், புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் நீல மாணிக்கத்தின் Royal Blue, Teal மற்றும் அபூர்வமான Padparadscha உள்ளிட்ட பல வித நிறங்கள் கொண்ட இரத்தினக்கற்கள் இங்கு பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.
இலங்கையின் “சுரங்கத்திலிருந்து சந்தைக்கு” கதையை விளக்கும் பிரத்தியேகமான காட்சிப் பகுதிகள் இவ்வருடம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பண்டைய சுரங்க அகழும் கருவிகள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகள், பட்டை தீட்டிய மற்றும் தீட்டப்படாத இரத்தினங்கள், மாணிக்கக்கற்களை வெட்டுதல் மற்றும் வடிவமைப்பதிலான புத்தாக்க அம்சங்கள், இலங்கை இரத்தினக்கல் சுரங்கங்களை பார்த்து அனுபவிக்க உதவும் வகையிலான VR அனுபவங்கள், எதிர்கால தலைமுறையினரை நோக்காகக் கொண்ட கண்காட்சிப் பகுதிகள் போன்ற விடயங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.
FACETS 2026 கண்காட்சியின் தலைவர் ஆர்மில் சமூன் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “FACETS என்பது எமது தொழிற்துறையின் இதயத்துடிப்பை பிரதிபலிக்கும் ஒன்று. இந்த ஆண்டு கண்காட்சியானது பாரம்பரியத்தையும் மாற்றத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. நாம் நகைகளை மாத்திரம் காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாது, கதைகளை கூறுகிறோம்; எதிர்காலத்தை ஊக்குவிக்கிறோம்; அத்துடன் உலக இரத்தினக்கல் தொழில்துறையின் மேடையில் இலங்கையை உயரத்திற்கு கொண்டு செல்கிறோம்.” என்றார்.
சர்வதேச பார்வையும் உள்ளூர் பாரம்பரியம்
FACETS 2026 கண்காட்சியில், இலங்கை முழுவதிலிருந்து முன்னணி இரத்தின வர்த்தகர்கள், ஆபரண நிறுவனங்கள் மற்றும் வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள் என 100 இற்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இலக்கு வைக்கப்பட்ட உலகளாவிய தொடர்புகளுடன், சர்வதேசத்தை அடையும் வகையிலான ஏற்பாடுகள், கொள்வனவாளர் பிரதிநிதிகள், “Sapphire Night”, “Power Breakfast for Women of Influence”, “High Tea Fashion Shows” போன்ற விசேட நிகழ்வுகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அங்கம் வகிப்பதோடு, இவை வணிகத்தையும் கலாசாரத்தையும் படைப்பாற்றலுடன் இணைக்கின்றன.
இலங்கை உலகளாவிய மேடையில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வரும் இவ்வேளையில், FACETS 2026 கண்காட்சி ஊடாக சிறந்த தரம் வாய்ந்த இரத்தினங்களின் மூலமாக மாத்திரமன்றி, புத்தாக்கம், நெறிமுறையான கைவினைத் திறன் மற்றும் காலத்தால் அழியாத அழகின் மையமாகவும் தன்னை நிறுவுகிறது.
Recent Comments