ஜனசக்தி லைஃப் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ரூ. 5 பில்லியனிற்கு அதிகமான தொகையை இலாபமாக பதிவு செய்துள்ளது

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜனசக்தி லைஃப், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 5.7 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் வரிக்கு முந்திய இலாபத்தில் ரூ. 5 பில்லியன் பெறுமதியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டில் நாம் கொண்டிருந்த உறுதியான நிதிப் பெறுபேறுகள் என்பது, எம் காப்புறுதிதாரர்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் கொண்டுள்ள எமது மூலோபாய நோக்கு, சிறப்பான தொழிற்பாடு மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சந்தையில் உறுதியற்ற நிலை காணப்பட்ட போதிலும், எம்மால் தொடர்ந்தும் வளர்ச்சியைப் பதிவு செய்து, எமது பங்குதாரர்களுக்கும், காப்புறுதிதாரர்களுக்கும் சிறந்த பெறுமதியை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. எமது வளர்ச்சி என்பது, தொழிற்துறை வளர்ச்சியின் இரட்டிப்பு மடங்காக அமைந்திருப்பதுடன், 44% வருமான வளர்ச்சியை எய்தி, ரூ. 6.6 பில்லியன் கட்டுப்பண வருமானத்தை கடந்துள்ளது. அத்துடன், எமது முதலீட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு வழங்கப்படும் பெறுமதி உருவாக்கத்தில் எவ்விதமான சமரசங்களுமின்றி, ரூ. 5.7 பில்லியனுக்கு அதிகமான தொகையை வரிக்கு முந்திய இலாபமாகவும் பெற்றுள்ளது.” என்றார்.

ரவி லியனகே – பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி

அவர் மேலும் குறிப்பிடுகையில், “2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி சேவை வழங்குனர் எனும் போக்கை எதிர்காலத்தில் பேணுவதற்கான சிறந்த நிலையில் நிறுவனம் காணப்படுகிறது. சந்தை மற்றும் விநியோக விரிவாக்கத்திற்கு சிறந்த நோக்குடைய மூலோபாயங்களை நிறுவனம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், வளர்ச்சிக்காக திட்டங்கள்/சந்தையை கருதுகோளாகக் கொண்டுள்ளது.  2025 ஆம் ஆண்டிற்காக ஆயுள் காப்புறுதி சந்தையில் வளர்ந்து வரும் பிரிவுகளுக்காக சில புத்தாக்கமான தீர்வுகளும் வடிவமைக்கப்பட்ட வண்ணமுள்ளன. மேலும், வாடிக்கையாளர் ஆயுள்சுழற்சி முகாமைத்துவத்தினூடாக சிறந்த சேவைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்களும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னோடி எனும் அதன் நிலையை மேலும் உறுதி செய்வதற்கான துரித டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளையும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 2024 ஆம் ஆண்டின் நிறைவில் ரூ. 38 பில்லியனாக, பெருமளவு உயர்வடைந்து காணப்பட்டது. நிறுவனத்தின் நிதிசார் உறுதித் தன்மை மற்றும் வலிமையை இது வெளிப்படுத்துவதுடன், பங்காளர்களுக்கான நீண்ட கால பாதுகாப்பு மற்றும் நிலைபேறாண்மையையும் உறுதி செய்கிறது. மேலும், பிரதான நிதிசார் குறிகாட்டியான மூலதன போதுமான விகிதம் 277%க்கு அதிகமாக காணப்பட்டமையினூடாக, நிறுவனத்தின் கடுமையான நிதிசார் முகாமைத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சகல பங்காளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை மீளுறுதி செய்துள்ளது.” என்றார்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி தலைமை அதிகாரி அன்னிகா சேனாநாயக்க நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “சகல பங்காளர்களுக்கும் நிலைபேறான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பது என்பதில் ஜனசக்தி லைஃப் கவனம் செலுத்துகிறது. 2024 ஆம் ஆண்டின் எமது நிதிப் பெறுபேறுகளினூடாக, எமது நிதிசார் வலிமை பிரதிபலிக்கப்பட்டுள்ளமை மாத்திரமன்றி, எமது காப்புறுதிதாரர்களுக்கு அவசியமான போது ஆதரவளிக்கும் எமது ஆழமான அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செலுத்தப்பட்டுள்ள உரிமைகோரல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமையினூடாக, எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நாம் நம்பிக்கையை வென்ற பங்காளராக திகழ்கின்றமைக்கான எமது அர்ப்பணிப்பு புலனாவதுடன், அவர்களுக்கு நிதிசார் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியையும் வழங்குகிறோம். எதிர்காலத்தை கவனத்தில் கொண்டால், எமது மனித வளங்கள், தொழினுட்பம் மற்றும் தயாரிப்பு புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளை வழங்கல், எமது சந்தை நிலையை வலிமைப்படுத்தல் மற்றும் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் நீண்ட கால வளர்ச்சியை ஏற்படுத்த எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “2024 ஆம் ஆண்டில், நாம் எமது காப்புறுதிதாரர்களுக்கு உரிமைகோரல்கள் மற்றும் முதிர்ச்சிக் கொடுப்பனவுகள் போன்றவற்றினூடாக ரூ. 4.2 பில்லியனுக்கு அதிகமான தொகையை செலுத்தியுள்ளோம். பொருளாதார சவால்கள் நிலவிய போதிலும், நிறுவனத்தின் கடுமையான நிதி முகாமைத்துவம் மற்றும் திட்டமிடல் போன்றவற்றினூடாக இது சாத்தியமாகியிருந்தது.” என்றார்.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில், நிறுவனத்தின் செயற்பாடுகளில் பல சிறந்த சாதனைகள் பதிவாகியிருந்தன. அதில் அடங்கியிருந்த ஆயுள் பாதுகாப்பு வழங்கலில் உயர் வளர்ச்சி, 63%க்கு அதிகமான புதிய வியாபார கட்டுப்பண வளர்ச்சி போன்றன எமது வியாபார கையகப்படுத்தல் முயற்சியின் வெற்றிகரமான செயற்பாடுகளை பிரதிபலித்துள்ளன. மேலும், நாம் தொழிற்துறையிலிருந்து பல விருதுகளையும் பெற்றிருந்தோம். ஐந்தாவது ஆசியாவின் சிறந்த மற்றும் வளர்ந்து வரும் காப்புறுதி நிறுவன விருதுகள் வழங்கலில், ஆசியாவின் சிறந்த காப்புறுதி நிறுவனம், சர்வதேச நிதியியல் விருதுகள், Business Pinnacle விருதுகள், Business Tabloid விருதுகள், குளோபல் வங்கியியல் நிதியியல் விருதுகள் 2024, SLITAD மக்கள் விருத்தி விருதுகள் மற்றும் TAGS விருதுகள் போன்றன அடங்கியிருந்தன. இவை அனைத்தும் ஊழியர் விருத்தி மற்றும் தொழிற்துறை தலைமைத்துவம் ஆகியவற்றில் எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃவ்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை ஜனசக்தி லைஃப் கொண்டுள்ளதுடன், பரந்த 75 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்திற்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டு துறைகளில் இயங்கும் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜனசக்தி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி திகழ்கின்றது.

Image Caption:
அன்னிகா சேனாநாயக்க, தலைமை அதிகாரி, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி

Share

You may also like...