‘எமக்கே தெரியாத எமது உணவுகள்’ சமையல் போட்டியின் ஆறு(6) வார கால நிகழ்வின் இறுதிப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு
இலங்கையின் சுற்றாடல் அமைச்சு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன இணைந்து நடாத்தும் பயன்பாட்டிலில்லாத பாரம்பரிய பயிர்களின் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வருவதை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

இலங்கை, கொழும்பு, 2025 மார்ச் 11 : ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன, சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்த ‘எமக்கே தெரியாத எமது உணவுகள்’ ஊக்குவிப்பு பிரசாரமானது, 2025 ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, ஊட்டச்சத்து நிறைந்த ஆனால் குறைவாகப் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் பாரம்பரிய, உணவுப் பயிர்களை இலங்கையர்களின் அன்றாட உணவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். இந்த பிரசாரத் திட்டமானது, தேசிய கொள்கைகள் மற்றும் உத்திகளில் உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், இலங்கை உலகளாவிய உயிர்ப் பல்வகைமை கட்டமைப்பை செயற்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற, Global Environment Facility (GEF) இனால் நிதியளிக்கப்படும் Early Action Support (EAS) திட்டத்தின் மூலம் நேரடியாக ஆதரவளிக்கப்படுகிறது.
ஆறு(6) வார கால பிரசாரத்தை நிறைவு செய்யும் இறுதி நிகழ்வு அண்மையில் (11) இடம்பெற்றது. இந்நிகழ்வில், இலங்கையின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி விஜேசிங்க,சுற்றுச்சூழல் அமைச்சின் உயிர்ப்பல்வகைமை பணிப்பாளர் சாந்தனி வில்சன், இலங்கைக்கான UNDP-யின் பொறுப்பாளர் Malin Herwig; WFP இலங்கைக்கான பிரதிநிதியும் நாட்டுக்கான பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்தீக், இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மஞ்சுள விக்ரமசிங்க, தனியார் துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த ஏனைய அரசு அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பிரசார நடவடிக்கை காலப் பகுதியில் ஒரு டிஜிட்டல் சமையல் போட்டி முன்னெடுக்கப்பட்டது. இது நாடு முழுவதிலுமுள்ள மக்களிடமிருந்து, அதிகம் பயன்படுத்தப்படாத/அறியப்படாத உணவுப் பயிர்களைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகளின் சமையல் குறிப்புகளைச் சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் இறுதி நிகழ்வின் சிறப்பம்சமாக, மூன்று இறுதிப் போட்டியாளர்கள் ஒரு அற்புதமான நேரடி சமையல் நிகழ்வில் பங்குபற்றினர். இதில் ‘கஜு தலு வியாஞ்சனய’ (முந்திரி இலை கறி) சமைத்த தயாத்ரி நயனதாரா முனசிங்கே வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். ‘மதட்டிய தலு வியாஞ்சனய’ (சிவப்பு குன்றிமணி இலை கறி) சமைத்த உதேஷிகா ஹன்சனி மற்றும் அத்திக்கா வியாஞ்சனய (அத்திக்காய் கறி) சமைத்த பஞ்சமி ஹேவாவிஸ்ஸந்தி இணை வெற்றியாளர்களாக இரண்டாம் இடத்தைப் பெற்றனர். பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் பிரபலம் Dinux Kitchen மற்றும் இப்பிரசார நிகழ்வின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டாளர்களால், மூன்று இறுதிப் போட்டியாளர்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் மதிப்பிடப்பட்டன.

இந்த பிரசார நடவடிக்கையில் UNDP இன் பங்கு குறித்து UNDP இன் இலங்கை அலுவலகத்திற்கான பொறுப்பதிகாரி Ms. Malin Herwig கருத்து வெளியிடுகையில், “இந்த பிரசாரமானது, உணவு முறைகளை மீளவடிவமைத்தல், உள்ளூர் பயிர்களை புத்துயிர் பெறச் செய்தல் மற்றும் அனைவருக்கும் அதிக சத்தான, ஈடுகொடுக்கக் கூடிய எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. புத்தாக்கமான நடைமுறைகளுடன் பாரம்பரிய உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், இம்முயற்சியானது உணவுப் பாதுகாப்பை ஆதரிப்பதோடு, போசணையை மேம்படுத்துகிறது. அத்துடன் சூழல் நிலைபேறான தன்மையை ஊக்குவிக்கிறது. இந்த முக்கியமான பிரசாரத்தில் இணைந்த அனைத்து கூட்டாளர்களுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அத்துடன் அதிகம் அறியப்படாத உணவுகளை ஊக்குவிப்பது தொடர்பான உறுதியான மற்றும் நிலைபேறான முயற்சிகளை மேலும் விரிவாக்கம் செய்வதை நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
இந்த பிரசார நடவடிக்கையானது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களை ஒன்றிணைத்து பங்குபற்றச் செய்யும் வகையிலான ஒன்லைன் மற்றும் நேரடி செயற்பாடுகளை கொண்டிருந்தது. விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், அதிகம் பயன்படுத்தப்படாத மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் 50 இற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளைக் கொண்ட ஒரு செய்முறைப் புத்தகத்தை உருவாக்குவது இந்த பிரசாரத்தின் முக்கிய அறிவார்ந்த வெளியீடாகும். எதிர்வரும் சில மாதங்களில், இந்த செய்முறைப் புத்தகமானது, ஏழு மாவட்டங்களில் 200,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கு உணவு விநியோகிக்கின்ற, உலக உணவுத் திட்டத்தின் (WFP) வீட்டில் வளர்க்கப்படும் பயிர்களிலிருந்து தயாரிக்கப்படும் பாடசாலை உணவு (Home-Grown School Feeding – HGSF) திட்டத்தில் இணைந்துள்ள பாடசாலை உணவு வழங்குநர்களிடையே விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஹோட்டல்-பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட முக்கிய இலக்கு குழுக்களுடனும், பொதுமக்களுக்கும் இச்செய்முறை புத்தகம் ஒன்லைனில் கிடைக்கச் செய்யப்படும். தம்புள்ளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த உணவு தயாரிப்பாளர்களுக்காக ஒரு அறிவுப் பகிர்வு அமர்வும் இடம்பெற்றது. இதில் அதிகம் பயன்படுத்தப்படாத பயிர் உணவுகளை எவ்வாறு தயாரிப்பது, போசணை தொடர்பான சிறந்த நடைமுறைகள், பொருட்களைத் தெரிவு செய்வது மற்றும் தாவர உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்த செயல் விளக்கங்களும் இடம்பெற்றன.

பிராந்திய தொடர்பான ஈடுபாடுகளின் ஒரு அங்கமாக, Aliya Resort Dambulla உணவகத்தில் தம்புள்ளையைச் சேர்ந்த 25 ஹோட்டல் பாடசாலை மாணவர்களுடன் அறிவுப் பகிர்வு அமர்விற்கான பிரச்சாரத்துடன் Thema Collection கூட்டுச் சேர்ந்தது. உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு மற்றும் போசாக்கின் முக்கியத்துவம் குறித்த நுண்ணறிவுகளை UNDP மற்றும் உலக உணவுத் திட்டத்தின்(WFP) தொழில்நுட்ப வல்லுநர்கள் பகிர்ந்ததோடு, அதிகம் பயன்படுத்தப்படாத தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பொருட்கள் மூலமான உணவுகளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த செயல் விளக்கங்களை உணவகத்தின் சமையல் நிபுணர்கள் விளக்கினர். கொழும்பில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தியத உயன மற்றும் காலி முகத்திடல் ஆகிய இடங்களில் இது தொடர்பான இரண்டு செயற்பாடுகள் இரண்டு வார இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்டன. இங்கு 1,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு இவ்வாறு சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. பிரபல சமையல் நிபுணர் பப்பிலிஸ் சில்வா மற்றும் அவரது குழுவினரால் கருணைக்கிழங்கு, செம்பருத்தி, பாடா (moon seed) மற்றும் சாமைக்கிழங்கு இலைகள் போன்ற அதிகம் அறியப்படாத உணவுப் பயிர்களைப் பயன்படுத்தி சிற்றுண்டிகள், பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்றன தயாரிக்கப்பட்டன. இலங்கையின் அதிகம் அறியப்படாத உணவுகளைப் பற்றி மேலும் அறிய இது பொதுமக்களுக்கு வாய்ப்பளித்தது.
இந்த விடயம் தொடர்பிலான அரசாங்கத்தின் முன்னுரிமைகளை எடுத்துரைத்த, சுற்றாடல் அமைச்சின் உயிர்ப்பல்வகைமை பணிப்பாளர் திருமதி சாந்தனி வில்சன், “இலங்கையானது முக்கியமான உள்ளூர் உயிர்ப்பல்வகைமை பெருக்கத்தைக் கொண்ட ஒரு நாடாகும். அந்த வகையில் இலங்கையில் காணப்படும் எந்தவொரு உயிரினத்தினதும் இழப்பானது முழு உலகிற்கும் ஒரு இழப்பாகும். ஏற்கனவே தனது நிலப்பரப்பில் 30% ஆன காடுகளைப் பாதுகாக்கும் ஒரு நாடு எனும் வகையில், பாதுகாக்கப்பட்ட பகுதி வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் பல்வேறு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை இலங்கை எதிர்நோக்குகின்றது. அதனாலேயே நாம் சமூக அடிப்படையிலான பாதுகாப்பு முயற்சிகளை நோக்கிச் செல்ல வேண்டும். அதிகம் பயன்படுத்தப்படாத பயிர்களை பிரதான பயன்பாட்டிற்கு கொண்டு வருவது முக்கியமானதாகும். ஏனெனில், இது உணவுப் பெறுமதி கொண்ட பரந்த அளவிலான தவார இனங்களை மக்கள் பாதுகாப்பதை உறுதி செய்யும். அந்த வகையில், எமது உயிர்ப் பல்வகைமைப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஆதரிக்க சுற்றாடல் அமைச்சு உறுதி பூண்டுள்ளது.” என்றார்.
இந்த பிரசார திட்டமானது, இலங்கையின் உயிர்ப் பல்வகைமைப் பெருக்கத்தின் பாரிய சரிவு மற்றும் அது எதிர்கொள்ளும் பல அச்சுறுத்தல்கள்; மற்றும் சிறந்த போசணையை வழங்கும் வகையில், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடையே பல்வேறு வகையான உணவுகளை அணுகச் செய்வது; ஆகிய இலங்கையில் காணப்படும் இரண்டு முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகம் பயன்படுத்தப்படாத உணவுப் பயிர்களை பிரபலப்படுத்துவதன் மூலம், இந்த போசணை நிறைந்த பயிர்களுக்கு வணிக மதிப்பை உருவாக்குவதையும், அதன் மூலம் அவற்றின் விளைச்சலை அதிகரிப்பதற்கான ஊக்கத்தையும் இறுதியில் அவற்றின் பாதுகாப்பையும் உருவாக்குவதையும் இந்த பிரசாரத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிர்களை வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம் அல்லது வணிக விளைச்சலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கலாம். அந்த வகையில், இது இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே மலிவு விலையில் உணவுத் தெரிவுகளை ஏற்படுத்தும்.
இப்பிரசாரத் திட்டம் தொடர்பான மேலதிக விடயங்களை அறிய: https://www.lesserknownfood.com
**முற்றும்**
UNDP: நெருக்கடிக்கு முகம் கொடுக்கக்கூடிய நாடுகளை உருவாக்கவும், அனைவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான வளர்ச்சியை உருவாக்கி, அதனை நிலையானதாக பேணுவதற்கு உதவுவதற்காக, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களுடன் UNDP கூட்டுச் சேர்ந்துள்ளது. 170 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்வர்களின், வாழ்க்கையை மேம்படுத்தவும், ஈடுகொடுக்கக் கூடிய நாடுகளை உருவாக்கவும் உதவும் வகையிலான, உலகளாவிய முன்னோக்கையும் உள்ளூர் நுண்ணறிவையும் நாம் வழங்குகிறோம்.
தொடர்புக்கு: [email protected] | 0779804188 | Ext 1501 எம்மை பின்தொடருங்கள்: UNDP on X | Facebook | Instagram
Recent Comments