தகவல்தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் இலங்கையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் EWIS Colombo Ltd, உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிகணினிகளை சிம்பாவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது  

கொழும்பு, இலங்கை – இலங்கையின் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தித் தொழில்துறையில் புதியதொரு சாதனையைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு கணினி உற்பத்தியாளரான EWIS Colombo Ltd நிறுவனம், உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிக்கணினிகளின் முதற்தொகுதியை சிம்பாவே நாட்டிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை நிகழ்வானது, சர்வதேச தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியில் வளர்ந்துவரும் சக்தியாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளமை மாத்திரமன்றி, சர்வதேச அரங்கில் புத்தாக்கம், தரம் மற்றும் மேன்மை மீது EWIS கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டியுள்ளது.    

சூரியவெவவில் அமைந்துள்ள EWIS ன் அதிநவீன வசதிகளைக் கொண்ட உற்பத்திச் சாலையிலிருந்து இந்த சாதனை மிக்க தயாரிப்பு தொகுதி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் காண்பிக்கின்றது. தயாரிப்பு மற்றும் இணைப்பு செயற்பாடுகளில் 11 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள EWIS Colombo Ltd, இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியளிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் பகுதி 17 ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகத் திகழும் EWIS, நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு உள்நாட்டு கணினி உற்பத்திச்சாலையை அமைத்துள்ளதுடன், உயர் தொழில்நுட்ப உபகரண ஏற்றுமதியில் தேசம் வளர்ச்சி காண்பதற்கும் வழிவகுத்துள்ளது.    

இச்சாதனை குறித்து EWIS Colombo Ltd தலைவர் திரு. சஞ்சீவ விக்ரமநாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த சாதனையானது EWIS நிறுவனம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்பட வேண்டிய ஒரு தருணமாகும். சர்வதேச அரங்கில் நம்பிக்கையுடன் போட்டியிடும் அளவுக்கு எமது நாடு திறமை, ஆற்றல், மற்றும் குறிக்கோளைக் கொண்டுள்ளதை இது நிரூபிக்கின்றது. உள்நாட்டிற்கு அப்பால், எமது வழங்கலை நாம் விரிவுபடுத்தி வரும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் இலங்கையின் மகத்துவத்தை உலகிற்கு காண்பிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.      

சர்வதேச தரம், பாதுகாப்பு மற்றும் சூழல் தராதரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில், ISO 9001:2015, ISO 14001:2015, CE, FCC, RoHS மற்றும் IEC 62368-1 ஆகிய தரச்சான்றுகளின் அங்கீகாரங்களை EWIS பெற்றுள்ளமையானது உலகத்தரத்தில் அதன் அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச அங்கீகாரங்கள் மகத்துவத்தின் மீது EWIS கொண்டுள்ள இடைவிடாத அர்ப்பணிப்பை நிரூபிப்பதுடன், அதன் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளில் போட்டி மிக்கதாகவும் ஆக்கியுள்ளது.    

EWIS சுமார் நான்கு தசாப்தங்களாக இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து வந்துள்ளதுடன், கல்வி, வணிகம் மற்றும் அரச தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்கி வந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் இணைப்பு நிபுணத்துவதில் 11 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், அதியுயர் தரம் கொண்ட, சர்வதேச மட்டத்தில் போட்டியிடும் வகையிலான தகவல் தொழில்நுட்ப வன்பொருளை உற்பத்தி செய்வதில் தனது ஆற்றலை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகின்றது.

சிம்பாவே நாட்டிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளமை EWIS ன் சர்வதேச அடிச்சுவட்டை விரிவுபடுத்துவதை நோக்கிய தைரியமான ஒரு படியாக காணப்படுவதுடன், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி மையமாக திகழ்வதில் இலங்கையின் வளர்ச்சிவாய்ப்புக்களையும் மீள வலியுறுத்துகின்றது. டிஜிட்டலுக்கு முதலிடம் அளிக்கும் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தில் இலங்கையின் பயணத்தை விரைவுபடுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் ஏற்றுமதிகளை அதிகரித்து, சர்வதேச தொழில்நுட்ப வழங்கல் சங்கிலியில் தேசத்தின் ஸ்தானத்தை வலுப்படுத்துவதற்கு இச்சாதனை அடித்தளமிட்டுள்ளது.    

சிம்பாவே நாட்டிற்கான ஏற்றுமதியுடன் வெற்றிகரமாக அங்கு கால்பதித்துள்ள நிலையில், ஆபிரிக்கா மற்றும் அதற்கு அப்பால் புதிய வாய்ப்புக்கள் குறித்து EWIS Colombo Ltd  தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உலகளவில், மாற்றம் கண்டு தேவைகளுக்கேற்ப வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு புத்தாக்கமான, உயர் செயல்திறன் கொண்ட, மற்றும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற தனது இலக்குடன்; இந்நிறுவனம் தொடர்ந்தும் உறுதியுடன் பயணித்து வருகின்றது. வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை EWIS தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், சர்வதேச தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தொழில்துறையில் இலங்கையின் வகிபாகத்தை வலுப்படுத்துவதற்காக ஒத்துழைக்க முன்வருமாறு சர்வதேச தொழில்நுட்ப கூட்டாளர்கள், வழங்குனர்கள், மற்றும் தொடர்புபட்ட தரப்பினருக்கு இந்நிறுவனம் அழைப்பு விடுக்கின்றது. உலகிற்காக பொறியமைப்புச் செய்யப்பட்டவற்றை இலங்கையில் கட்டமைக்கும் பெருமையுடன் EWIS Colombo Ltd பயணித்து வருகின்றது.  

Share

You may also like...