DIMO மற்றும் SDF இணைந்து விவசாயிகள் நவீன விவசாய உபகரணங்களை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது
இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம் மற்றும் Sarvodaya Development Finance (SDF) ஆகியன இணைந்து, இலங்கை விவசாயிகள் உயர்தர விவசாய உபகரணங்களை இலகுவாக அணுகும் நோக்கத்துடன், அண்மையில் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாயத் திறனை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் விவசாயத்தில் இயந்திரமயமாக்கலை அதிகரிப்பதுமே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும்.
DIMO நிறுவனமானது, இலங்கையில் மேம்பட்ட ஜேர்மன் தொழில்நுட்பத்தில் அமைந்த STIHL Power Tool தயாரிப்பு வகைகளின் விநியோகஸ்தராக செயற்படுகின்றது. அத்துடன், STIHL Tea Pruner மற்றும் Tiller Machines ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான தனித்துவமான நிதித் தீர்வுகளை இந்த கூட்டாண்மை மூலம் வழங்க Sarvodaya Development Finance எதிர்பார்க்கின்றது. அதிக செலவில் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்குப் பதிலாக, அத்தியாவசிய உபகரணங்களில் நிதியை முதலீடு செய்வதற்கான எளிய வழிகளை இந்த தீர்வுகள் வழங்குகின்றன. இது விவசாயிகளின் பொருளாதார நிலையை கணிசமான வகையில் மேம்படுத்த உதவுவதோடு, பயிரிடல் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளில் விவசாயிகள் முதலீடு செய்யவும் உதவும். இந்த குத்தகை சலுகையைப் பெறும் வாடிக்கையாளர்கள் Tiller Machines உபகரணங்களுக்கு 20% முற்பணத்தையும் Tea Pruner உபகரணங்களுக்கு 10% முற்பணத்தையும் செலுத்த வேண்டும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த DIMO நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரகித குணசேகர, “பெருமளவான விவசாயிகளுக்கு நவீன விவசாய உபகரணங்களை அறிமுகப்படுத்துவதற்காக Sarvodaya Development Finance உடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புத்தாக்கமான தீர்வுகள் மூலம் இலங்கையின் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் எமது அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு வெளிப்படுத்துகிறது.” என்றார்.
Sarvodaya Development Finance நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிலந்த ஜயநெத்தி இது தொடர்பில் தனது கருத்துகளைத் தெரிவிக்கையில், Sarvodaya Development Finance எனும் வகையில், அதிக உற்பத்தித் திறனுக்குத் தேவையான விவசாயக் கருவிகளை வழங்கி விவசாயிகளுக்கு வலுவூட்டுவதற்காக DIMO நிறுவனத்துடன் கைகோர்க்கும் வாய்ப்பைப் பெற்றதில் பெருமை கொள்கிறோம். எமது கூட்டாண்மை மூலம், விவசாயிகளின் முக்கிய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நெகிழ்வான நிதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் விவசாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்க முடியுமென நாம் நம்புகிறோம்.” என்றார்.
Sarvodaya Development Finance அமைப்பானது, கிராமப்புறங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதன் இருப்பைக் கொண்டுள்ளதோடு, விவசாய சமூகத்தின் நிதித் தேவைகள் குறித்த தனித்துவமான அறிவையும் கொண்டுள்ளமையானது, இந்தக் கூட்டாண்மையில் அவர்களைத் தெரிவு செய்வதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. விவசாயிகளுக்கு மிகவும் பொருத்தமான நிதித் தீர்வுகளை இந்த அமைப்பு வழங்கியுள்ளதோடு, இதன் மூலம் அவர்களின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்பு தொடர்பான அவர்களது அர்ப்பணிப்பானது, சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு வலுவூட்டும் DIMO நிறுவனத்தின் இலக்குடன் ஒத்துப்போகிறது.
தேயிலைத் தோட்டங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள STIHL Tea Pruner உபகரணமானது, அறுவடைக்குப் பின்னர் தேயிலைப் புதர்களை கத்தரிக்கப் பயன்படுகிறது. STIHL Tiller இயந்திரமானது மரக்கறி விளைச்சல், நெல் வயல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளின் விளைச்சல்களை பெறுவதற்காக பயன்படுத்தப்படக் கூடியது. இந்த Tiller இயந்திரம் கலப்பு பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றதாகும். இதன் மூலம் மிகவும் கடினமான மற்றும் சவாலான விவசாயப் பணிகளை மிகவும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
இதில் பயன்படுத்தப்படும் worm gear drive ஆனது, அதிக அதிர்வு இல்லாமல் உபகரணத்தை இயங்கச் செய்வதோடு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வளைந்த கைப்பிடியானது, இயந்திரத்தை உடலின் உயரத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ள உதவுவதன் மூலம் இலகுவாக அதனை இயக்க உதவுகிறது. இதிலுள்ள reverse gear, forward gear உள்ளிட்ட விடயங்கள் மூலம் சுமையை பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுவதால், விவசாயிகள் குறைந்த வேலைப் பளுவின் மூலம் அதனை இயக்க முடிகிறது. Tiller இயந்திரத்தின் 100 செ.மீ அகலத்திலான செயற்பாட்டின் காரணமாக, பெரிய வயல்களையும், பயிர்ச் செய்கை நிலங்களையும் திறம்பட பயன்படுத்த முடியும். இந்த இரண்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மற்றும் திறனான செயற்பாடு ஆகியன நவீன மேம்பட்ட ஜேர்மன் தொழில்நுட்பத்தால் உறுதி செய்யப்படுகின்றன.
இந்த இயந்திரங்களுக்கும் விரிவான விற்பனைக்குப் பின்னரான சேவையை DIMO வழங்குகிறது. இடத்திலிருந்தான பராமரிப்பு சேவை, அசல் உதிரிப் பாகங்களை எளிதாக பெறுதல், சேவை உத்தரவாதம் மற்றும் பயிற்சி சேவைகள் ஆகியன இதில் அடங்குகின்றன. இது விவசாயிகள் தங்கள் முதலீட்டுக்கான உச்சபட்ச வருமானம் பெறுவதை உறுதி செய்கிறது.
DIMO மற்றும் Sarvodaya Development Finance ஆகியவற்றுக்கு இடையில் ஆரம்பமாகியுள்ள இந்த கூட்டாண்மையானது, இலங்கையில் விவசாய இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்கும் அதன் வெற்றியை மேம்படுத்துவதற்குமாக விவசாயிகளை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கை எனலாம்.
Recent Comments