சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கும் AMW

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை முழு நாடும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகளை ஊகத்தின் அடிப்படையில் பொய்யாக வெளியிடும் ஏராளமான சமூக ஊடகப் பதிவுகளைக் காணக் கூடியதாக உள்ளன. இலங்கையின் வாகனத் துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமும் Suzuki உள்ளிட்ட முன்னணி வாகன வர்த்தகநாமங்களின் ஒரேயொரு விநியோகஸ்தர் எனும் வகையிலும் Associated Motorways (Pvt) LTD (AMW) நிறுவனமானது, இந்த தவறான தகவல் பரவுவது குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.

புதிய வாகனங்களின் விலையை கணக்கிடுவதற்காக சந்தையை உன்னிப்பாக AMW அவதானித்து வருகின்றது. இறக்குமதி தீர்வைகள் உள்ளிட்ட ஏனைய வரிகள், VAT, நாணயமாற்று விகிதங்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற காரணிகளை இந்த விலைகள் உள்ளடக்கியுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விலைகள், பயன்படுத்தப்பட்ட வாகன சந்தையின் மதிப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. ‘பதிவு செய்யப்பட்ட கார் விற்பனை மாபியா’ என அழைக்கப்படும் நபர்களால் இந்தத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக பரவலாக நம்பப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பை செயற்கையாக குறைக்க இந்த தரப்பினர் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Associated Motorways (Pvt) LTD பணிப்பாளர் விரான் டி சொய்சா, இந்த பிரச்சினை தொடர்பான தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில், “தவறான தகவல்களைப் பகிர்வது போன்ற முறைகேடான விடயங்கள் நடந்து வருவது துரதிர்ஷ்டவசமானதாகும். குறிப்பாக தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு கைகூடி வரும் நிலையில், மோசடி ஆசாமிகளின் பிடிக்குள் இரையாகாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு தவறான தகவல்களும் நம்பகமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட தரப்பினரால் சரிபார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.”

AMW நிறுவனத்திடமிருந்து பிரத்தியேகமாக பின்வரும் தெரிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிர்பார்க்கப்படும் விலைகள் அமைகின்றன. Suzuki Alto K10 1L, Automatic ரூ. 6,700,000, Suzuki S-Presso 1L, Automatic ரூ. 6,900,000, Suzuki Celerio, 1L, Automatic ரூ. 7,100,000, Suzuki Fronx, 1L Turbo Automatic ரூ. 10,750,000 ஆகிய எதிர்பார்க்கப்படும் விலையில் வாகனங்கள் அமையும். இவை தவிர, Nissan Magnite, 1L, Automatic ரூ. 7,600,000, Nissan Magnite 1l Turbo, Automatic ரூ. 8,500,000, Nissan Almera, 1L, Turbo, Automatic ரூ. 12,600,000, Nissan Urvan (15-seater) ரூ. 16,100,000 ஆகிய விலைகளில் கிடைக்கும்.

மேற்கூறிய வாகனங்களின் தெரிவின் போது, நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் பொருந்தும் என AMW தெரிவிக்கின்றது. பிரத்தியேகமான முன்பதிவு செய்தல் பற்றிய தகவலுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்குமாறும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ அரசாங்க அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே அது வெளியிடப்படும் என AMW நிறுவனம் வலியுறுத்துகிறது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களைப் பற்றி எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு AMW நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களையும் கேட்டுக்கொள்கின்றது. அத்துடன், சரியான நேரத்தில் மிகவும் துல்லியமான தகவலை வழங்குவதற்கு AMW உறுதி பூண்டுள்ளது. AMW மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்தான உத்தியோகபூர்வ தொடர்பாடல் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஆதாரங்களை மாத்திரம் நம்புமாறு நிறுவனம் வலியுறுத்துகிறது. காரணம், விலை எதிர்வுகூறல்கள் மற்றும் வாகனங்களின் கொள்வனவு ஆகிய விடயங்களில் இது தங்கியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

அத்துடன், டிஜிட்டல் தளங்களில் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும். நாட்டின் சட்டத்தின்படி, குறிப்பாக பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பகிர்வது குற்றமாகும். சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிரும் போது அனைத்து வாடிக்கையாளர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு AMW நிறுவனம் கேட்டுக் கொள்கின்றது. பகிரப்படும் தகவலின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மை குறித்து வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட நம்பகமான ஆதாரங்கள் மூலம் அவற்றை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.

Share

You may also like...