இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் தங்க அனுசரணையாளராக SLGJA
இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சிக்கு அனுசரணை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இரத்தினக்கல் அகழ்வோர் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இரத்தினபுரியில் காணப்படும் ஏனைய இரத்தினக்கல் தொடர்பான சங்கங்களுடன் இணைந்து, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. SLGJA இதற்கு தங்க அனுசரணையாளராக வழங்கும் ஆதரவானது, இத்தொழில்துறைக்கான சங்கத்தின் ஆதரவையும் அதன் உறுப்பினர்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க அது கொண்டுள்ள முயற்சிகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
இரத்தினபுரி கண்காட்சி அறிவிப்பு தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் SLGJA இனால் தங்க அனுசரணை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் அதிதிகளாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க, NGJA தலைவர் விராஜ் டி சில்வா, NGJA இன் பணிப்பாளர் நாயகம் ஜனக உதய குமார, SLGJA தலைவர் அஜ்வார்ட் டீன், SLGJA இன் முன்னாள் தலைவர் A.H.M. இம்திசாம், SLGJA இன் துணைத் தலைவர் பிராஸ் ஹமீட், FACETS Sri Lanka தலைவரும் வெளிநாட்டு ஊக்குவிப்பு பிரதித் தலைவருமான அர்மில் சமூன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “NGJA உடனான எமது உறவானது, நீண்ட கால வரலாற்றை கொண்டதோடு, மிகவும் பலன் மிக்கதாகவும் விளங்குகின்றது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் உச்ச அமைப்பு எனும் வகையிலும், இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சிகளை ஆரம்பிப்பவர்களாகவும் நாம் இருப்பதால், இலங்கை முழுவதும் பரந்து காணப்படும் எமது உறுப்பினர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு ஆதரவளிக்க அதிக அர்ப்பணிப்புடன் நாம் இருந்து வருகின்றோம். அத்துடன் இத்தொழில்துறையை முன்னோக்கி கொண்டு செல்கின்ற பிரதேச ரீதியான தொழிற்சங்கங்களுக்கு ஆதரவளிக்கவும் நாம் தயாராக உள்ளோம். இந்த காரணத்திற்காகவே இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சிக்கான தங்க அனுசரணையாளர் எனும் பங்கை SLGJA ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் சுமார் 50 கொள்வனவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு, இது பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணிக வாய்ப்புகள் மற்றும் பெறுமதிவாய்ந்த வலையமைப்பு தொடர்பு ஆகிய இரண்டையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Recent Comments