ஹைபிரிட் சேகரிப்பு மற்றும் விற்பனை மைய வலையமைப்பு வலுப்படுத்தும் பெல்வத்தை

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டிற்காக சேமிக்கும், இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான பெல்வத்தை (Pelwatte), அதன் ஹைபிரிட் பால் சேகரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தை அநுராதபுரத்தில் திறந்து வைத்துள்ளது. இது பெல்வத்தையின் கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள 1ஆவது பால் விற்பனை நிலையம் என்பதோடு, அதன் மொத்த வலையமைப்பில் 15ஆவது விற்பனை நிலையமுமாகும்.

பெல்வத்தை நிறுவனத்தின் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “சேகரிப்பு மற்றும் விற்பனை மைய திட்டமானது பெல்வத்தையின் ஒருங்கிணைப்பு மூலோபாயத்தின் முன்னோக்கிய மற்றும் பின்னோக்கிய ஒரு பகுதியாகும். இந்த ஒருங்கிணைந்த பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையமானது, சேகரிப்பு நேரத்தையும் செலவுகளையும் மீதப்படுத்துகிறது. அது எமது வாடிக்கையாளர்களுக்கும் அப்பயனை வழங்குகிறது. இப்பகுதியிலுள்ள பால் விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு 150,000 லீற்றர் பாலை நாம் ஏற்கனவே சேகரித்து வருகிறோம். தற்போது இந்த மையத்தின் மூலம் இந்த சேகரிப்பு அளவு அதிகரிக்கும் என்பதோடு அதற்கான செயன்முறையையும் நெறிப்படுத்த முடியும். இப்புதிய சேகரிப்பு மையம் பால் விவசாயிகளுக்கு எமது ஆதரவை மேலும் வலுப்படுத்த உதவும். அத்துடன், மொத்த மற்றும் சில்லறை வாடிக்கையாளர்கள் இம்மையத்தில் இருந்து எமது அனைத்து உற்பத்திப் பொருட்களையும் கொள்வனவு செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.

இந்த மையமானது, பால் மூலப்பொருட்கள் வழங்குநர்கள் மற்றும் சந்தை இணைப்புகள் ஆகிய இரண்டையும் இணைத்த ஹைபிரிட் நடவடிக்கையுடன் ஒருங்கிணைத்துள்ளதால், பெல்வத்தையின் நேரிய மேல் நோக்கிய ஒருங்கிணைப்பு முயற்சிகளில் மற்றுமொரு படியாக இது அமைகின்றது. இதன் மூலம் அதன் நுகர்வோர், இலங்கையின் சிறந்த பால் உற்பத்திகளை பெறுகின்றனர்.

பெல்வத்தை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “பெல்வத்தையானது இப்பிரதேசத்தில் ஏற்கனவே பால் உற்பத்திச் சந்தையில் சிறந்த பங்கினை கொண்டுள்ளது. புதிய விற்பனை மையம் இந்த சந்தைப் பங்கை மேலும் முக்கிய அளவில் உயர்த்தும். இது அதன் தயாரிப்புகளை பிராந்திய வாடிக்கையாளர்களுக்கு மிக வேகமாக கொண்டு சேர்க்க உதவும்.” என்றார்.

பெல்வத்தை தொழிற்சாலைகள் தற்போது நாளொன்றுக்கு 150,000 லீற்றருக்கும் அதிகமான புதிய பாலை கையாளுகின்றன. உயர்தர பாலை பெறுவதனை பேணுவதற்காக, நிறுவனம் அதன் பால் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக வெகுமதிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் பெல்வத்தை நிறுவனத்தால் 10,000 பால் பண்ணையாளர்கள் ஆதரிக்கப்படுகின்றனர்.

Share

You may also like...