மீள் புதுப்பிக்கத்தகு வலு சக்தி சேவை வழங்குனர்களுக்கு மின்சார சபை பணம் செலுத்தத் தவறியுள்ளதால் தேசிய கட்டமைப்பு 1,200 MW மின்வலுவை இழக்கும் அபாயம்

சிறிய நீர் மின்சாரம், காற்று, சூரிய வலு, உயிரியல் மின்சக்தி வழங்குநர்கள் மற்றும் இலங்கையின் சூரிய கைத்தொழில் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய மீள் புதுப்பிக்கத்தக்க வலு சங்கங்கள் இணைந்து இலங்கையின் தேசிய மின் உற்பத்தி 1250.9 மெகாவாட் (MW) மின்சாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குவதாக அறிவித்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வறிவிப்பை அச்சங்கங்கள் கூட்டாக வெளியிட்டிருந்தன. கடந்த ஓகஸ்ட் 2021 முதல் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி வழங்குனர்களால், இலங்கை மின்சார சபைக்கு (CEB) வழங்கிய மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தாமையே இதற்கான காரணமாகும்.

நாடு மிகவும் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில், மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வழங்குனர்கள், தங்களின் ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு மற்றும் கடன் செலுத்துகைகள் உள்ளிட்ட முக்கியமான கட்டாய நிதி சார்ந்த விடயங்களை நிறைவேற்ற முடியாமல், தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, அச்சங்கங்களின் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதன் இறுதி விளைவு, நாடு இந்த தூய வலு சக்தியை இழக்க நேரிடும் என்பது மட்டுமல்லாது, இதற்கு மாற்றாக அனல் மின்சாரத்திற்கான எரிபொருளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டி ஏற்படும் என்பதால், இது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். குறிப்பாக மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்திக்காக ஒரு அலகிற்கு சராசரியாக ரூ. 15.77 செலுத்தப்படுவதோடு, மாற்று மின்சாரத்திற்கு அலகிற்கு ரூ. 90 செலவிட வேண்டி ஏற்படும். இது அந்நியச் செலாவணி நெருக்கடியை அதிகப்படுத்தும் என்பதுடன், தற்போதைய நேரத்தில் இது நாட்டிற்கு தாங்க முடியாத சுமையாகவும் அமையும்.

அந்த வகையில் மின்சார சபையினால் மொத்தமாக, சுமார் ரூ. 22 பில்லியன் கொடுப்பனவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வழங்குனர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. இது தொழில்துறையை பாரிய வீழ்ச்சியை நோக்கி கொண்டு சென்றுள்ளள்ளது. சுமார் 7,000 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத கடுமையான அச்சுறுத்தல் நிலையை இது ஏற்படுத்தியுள்ளதுடன், கடுமையான சமூக நெருக்கடிக்கும் இது வழிவகுத்துள்ளது.

அதே வேளை, வங்கிகள் இத்தொழில்துறைக்கு சுமார் ரூ. 60 பில்லியன் கடனை வழங்கியுள்ளன. இந்த கடன்களை கட்டுவது மிக விரைவில் நிறுத்த நேரிடும் என்பதால், அது வங்கி அமைப்பையும் பாதிக்கும். மறுபுறம், தற்போது சுமார் 550 மெகாவாட் திட்டங்களுக்கான செயற்பாடுகள் நடைமுறையில் உள்ளன, அவற்றிற்கு உரிய வகையில் நிதி வழங்கி அபிவிருத்தி செய்யப்படாவிட்டால், மின்சக்திக்காக அதிக விலை கொண்ட எரிபொருட்களை கொள்வனவு செய்ய நேரிடும். இது நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கும்.

தவறான வகை மின் உற்பத்தி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளதால், இலங்கை பாரிய மின் பற்றாக்குறையில் உள்ளது. மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியானது, கிடைக்கக்கூடிய மலிவான மற்றும் தெளிவான தெரிவாகும். இருப்பினும், இவ்வாறான கொடுப்பனவு செலுத்துகை இடைநிறுத்தமானது, இத்துறையின் முதலீட்டாளர்களை தடுத்து நிறுத்துகிறது. இதன் காரணமாக இலங்கை ஒரு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி செய்யும் நாடாக மாறுவதற்கான அதன் இலட்சியம் முற்றிலுமாக ஸ்தம்பிதம் அடைவதுடன், ஐக்கிய நாடுகளின் நிலைபேறான வளர்ச்சி இலக்குகளுக்கான அதன் கடமைகளில் (UN SDGs) இருந்து அது தோல்வியடையும்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு அமைய, நுகர்வோருக்கு வழங்கப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் சராசரி செலவு ரூ. 60 என மதிப்பிடப்பட்டுள்ளது. இ.மி.ச. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து நேரடியாக உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கான செலவானது, ஒரு அலகிற்கு (களனிதிஸ்ஸ மின் நிலையம்) ரூ. 154 இலிருந்து வெவ்வேறு தொகைகளில் அமைகிறது. இதில் பாரிய நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகிற்கு ரூ. 7.19 என்பதே குறைந்த தொகையாக உள்ளது. தனியார் உரிமையாளர்களால் இயக்கப்படும் ஏனைய மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான செலவானது, பாரிய நீர்த்தேக்கங்கள் அடிப்படையிலான நீர் மின்சாரம் மற்றும் மன்னாரில் சமீபத்தில் திறக்கப்பட்ட 100 மெகாவாட் காற்றாலை ஆகியவற்றின் உற்பத்தி செலவுக்கு அடுத்த நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையானது நாடு மற்றும் அதன் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை, மின்சக்தி அமைச்சு, நிதி அமைச்சு, சட்ட மா அதிபர் அலுவலகம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஆகியன, முடிவுகளை எடுக்கும் போது, அதிக நெகிழ்வுத்தன்மையை பேணுவதன் மூலம் குறைந்த செலவு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடின், மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எதிர்கால இலக்கு ஒருபோதும் நிறைவேறாது, ஏனெனில் இவ்வாறு தாமதமான பண கொடுப்பனவுகள், முதலீட்டாளர்களை தூரப்படுத்தும் விடயங்களாக அமைகின்றன.

எனவே, இப்பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு உடனடித் தீர்வு காண வேண்டுமென, மீள மீள புதுப்பிக்கத்தக்க வலுசக்தி நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. இந்த சிக்கல் நிலை தீர்க்கப்படாவிட்டால், தேசிய மின்கட்டமைப்பிலிருந்து 1250.9 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டு, நீண்ட மின்துண்டிப்புகளை எதிர்நோக்க நேரிடும் என்பதுடன், அதனுடன் இணைந்தவாறு பல்வேறு பாரிய பின்விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளன.

Share

You may also like...