வேறுபாட்டை களைந்து பெண்களை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Coca-Cola Beverages Sri Lanka

Coca-Cola Beverages Sri Lanka Ltd. (CCBSL), 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தை அண்மையில் கொண்டாடியது. இலங்கையின் பெண்களை கொண்டாடுவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமாக ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டதாக இது இடம்பெற்றது. முதல் நிகழ்வானது, CCBSL இன் விற்பனை மற்றும் வர்த்தகப் பணிப்பாளர் ஷமல் குணவர்தனவின் ‘Breaking the Bias’ தொடர்பான செயன்முறை அமர்வு மற்றும் CCBSL யின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயங்க் அரோராவின் விசேட உரை உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.

பாலின நிலைப்பாடுகளுக்கு அப்பால் பார்ப்பதன் முக்கியத்துவத்தை, குறித்த இரு அமர்வுகளும் எடுத்துரைத்தன. ஆண்களும் பெண்களும் சமமான திறன்களைக் கொண்டுள்ளனர் என்பதுடன், பாலினத்தின் அடிப்படையில் எந்தவொரு பணித் துறையிலும் தங்களைத் தாங்களே மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை இந்நிகழ்வுகள் வலியுறுத்தின. குடும்ப விடயங்கள் உள்ளிட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துக்காட்டப்பட்டது. காரணம் பாலின வேறுபாடின்றி தாம் அனுபவிக்கும் சுமையின் சம அளவான பங்கானது, அனைவரையும் முன்னோக்கிச் செல்ல வழி வகுக்கிறது. குறிப்பாக பணியிடங்களில் இது இடம்பெறுகின்றது. இந்த செயலமர்வுகளின் போது, பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் இணைத்து செயற்படுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் எடுத்துக் காட்டப்பட்டதுடன், பணியிடத்தில் பெண்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதையும், அவர்களின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படுவதையும் உறுதிசெய்து, அவர்களை மேலோங்கச் செய்வது தொடர்பான சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான CCBSL இன் பல்வேறு முயற்சிகள் எடுத்துக் காண்பிக்கப்பட்டன.

2022 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக, இலங்கையில் ‘Break the Bias’ எனும் கண்ணோட்டத்தை உள்ளடக்கிய, புகழ்பெற்ற பெண் ஆளுமைகளுடன் கருத்தாழம் கொண்ட கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. ஹட்டன் நெஷனல் வங்கியின் தலைவி திருமதி அருணி குணதிலக, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான பணியகத்தின் பணிப்பாளர், SSP திருமதி ரணசிங்க, 40 வருடங்களாக Coca-Cola விநியோகஸ்தராக செயற்பட்டு வரும் திருமதி எலிசபெத் பெரேரா ஆகியோர் இக்கலந்துரையாடலின் பிரதான பங்கேற்பாளராக கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணிகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்கொண்ட பாரபட்சமான நிலைமைகள் தொடர்பிலும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்தியவாறு, அவற்றை எவ்வாறு சமாளித்தார்கள் என்பது தொடர்பிலும் இதன்போது விபரித்தனர்.

தான் பணிபுரியும் நிறுவனத்தின் உச்சத்திற்கு சென்றுள்ள திருமதி அருணி குணதிலக, தனது அனுபவங்களை இதன்போது பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் தலைவியை மக்கள் எப்படி நோக்கினார்கள் என்பதையும், தனது இலக்குகளை அடைய அவர் தன்னை எப்படி ஊக்கப்படுத்திக் கொண்டார் என்பதையும் அவர் இதன்போது அவர் விளக்கினார். இதேவேளை, திருமதி ரணசிங்க மற்றும் திருமதி எலிசபெத் பெரேரா ஆகியோர் பெண்களுக்கு வழக்கமற்ற தொழில்களாக கருதப்படும் தொழில் தொடர்பான அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

CCBSL இன் மனிதவளப் பணிப்பாளர் பிரியந்த ரணசிங்க, இம்மகளிர் தின கொண்டாட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களை கொண்டாடவும் முழு நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளதை காண்பதையிட்டு மிகவும் சந்தோசமடைகின்றேன். தடைகளைத் தகர்த்தெறிந்து, தங்களின் தொழில் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்து, சமத்துவத்தை முற்படுத்தி, பணி மற்றும் வாழ்க்கை இடையிலான சமநிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தி, தமது எழுச்சியூட்டும் கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்காக, எமது மதிப்பிற்குரிய பேச்சாளர்களுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையிலேயே இந்நாளின் ஒரு சிறப்பம்சமாக அமைந்தது.” என்றார்.

உள்ளூர் சமூகத்தில் பெண் தொழில்முனைவோருக்கு வலுவூட்டல்

2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் 30 பெண் தொழில்முனைவோருக்கு மேம்படுத்துவதற்காக, CCBSL அமைந்துள்ள பியகம பகுதியில் உள்ள முக்கிய அரச பங்குதாரர்களுடன் நிறுவனம் கூட்டாக இணைந்தது. அதற்கமைய, கொமர்ஷல் வங்கியின் நிறைவேற்று அதிகாரி சம்பத்குமாரவின், வங்கி மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பான அமர்வு மற்றும் சிறிய அளவிலான வணிக நிறுவனமான Sashee Looms உரிமையாளரான திருமதி திலானி ஜயசிங்கவின் ஊக்கமளிக்கும் அமர்வும் இடம்பெற்றது.

இந்த அமர்வுகளைத் தொடர்ந்து, பியகம பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரோஹண கருணாரத்னவினால் சம்பந்தப்பட்ட அரசாங்க அலுவலகங்களில் இருந்து, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக  தொழில்முயற்சியாளர்கள் எவ்வாறு தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆதரவைப் பெறலாம் என்பது பற்றிய கண்ணோட்டமும் இடம்பெற்றது.

பியகம பிரதேச செயலாளர் திருமதி சந்திமா சூரியராச்சி இதனைத் தொடர்ந்து உரையாற்றியதுடன், 2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உள்ளூர் சமூகத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவளித்த CCBSL இற்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார். “நமது உள்ளூர் சமூகங்களில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தன்று, ஆண் – பெண் பாரபட்சத்தை தகர்த்து அவர்களை ஊக்குவிக்க Coca-Cola நிறுவனம் முன்வந்தமையானது, மிகவும் சந்தோஷமளிக்கின்றது. நிகழ்வின் பேச்சாளர்கள் உண்மையிலேயே ஊக்கமளிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தனர் என்பதுடன், இந்த அமர்வுகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆழமான தகவல்கள் மற்றும் நடைமுறை ரீதியிலான உதவிக் குறிப்புகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர். CCBSL நிறுவனம் பியகமவில் அமைந்திருப்பதை ஒரு அதிர்ஷ்டமாக நாம் கருதுகின்றோம். இலங்கையில் உள்ள பெண்களைக் கொண்டாடுவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் இந்நிறுவனம் எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இது போன்ற நிகழ்வுகளை எதிர்காலத்திலும் அவர்கள் மேற்கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

வெலிகமவில் பெண்களுக்கு PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி பற்றிய விழிப்புணர்வு

CCBSL ஆனது, நீண்டகால மீள்சுழற்சி பங்குதாரரான Eco Spindles மற்றும் உள்ளூர் சமூக அமைப்பான ‘Sobhakantha’ உடன் இணைந்து, வெலிகம கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. PET பிளாஸ்டிக்கின் பெறுமதி, பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியினால் ஏற்படும் தொழில் முனையும் வாய்ப்புகள் குறித்து அப்பகுதியில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்தது. பெண்கள் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட, வெலிகமவிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பெண் தொழில்முனைவோரை வலுவூட்ட முன்வந்த CCBSL இன் முயற்சிகளை அவர்கள் பாராட்டியதோடு,  PET பிளாஸ்டிக்கின் பெறுமதி மற்றும் PET பிளாஸ்டிக்கை பொறுப்பாக சூழலிலிருந்து அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கியமை தொடர்பிலும் அவர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Share

You may also like...