காலநிலை மாற்ற கொள்கையில் இளைஞர்களின் அவசியத்தை வலியுறுத்தும் பிரிட்டிஷ் கவுன்சில் அறிக்கை
- உலகெங்கிலும் உள்ள 75 வீதமான இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் திறன்களைக் கொண்டிருப்பதோடு, 69 வீதமானோர் அவ்வாறான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
- தற்போதைய காலநிலை மாற்றக் கொள்கையில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்கள் செவிமடுக்கப்படுவதில்லை என கவலை தெரிவிக்கப்படுகிறது.
- காலநிலை மாற்றத்தை தலைவர்களால் தனியாக எதிர்கொள்ள முடியாதென 67 வீதமான இளைஞர்கள் கருதுகின்றனர்.
- கொள்கை முடிவுகளில் இளைஞர்களின் கருத்துகளும் சேர்க்கப்பட வேண்டுமெனும் தொடர்ச்சியான கோரிக்கை வலியுறுத்தப்படுகின்றது.
காலநிலை மாற்றமானது, பூமி எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகுமென உலகெங்கிலுமுள்ள இளைஞர்கள் ஒருமனதாக கருதுகின்றனர். ஆயினும் அதனை தடுக்கும் வகையிலான அர்த்தமுள்ள விடயங்களை மேற்கொள்ள பலர் போராடுகிறார்கள். அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டுமென, செப்டெம்பர் 09ஆம் திகதி பிரிட்டிஷ் கவுன்சிலினால் வெளியிடப்பட்ட அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
பிரேசில், இந்தியா, கென்யா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த 18 தொடக்கம் 35 வரையான வயதுடைய 8,000 இளைஞர்களிடம், காலநிலை மாற்றம் குறித்த அவர்களின் முன்னோக்குகள் பற்றிய கருத்துகள், அவர்களது அனுபவங்கள், அபிலாஷைகளைப் பெறுவதற்கான ஒரு கலப்பு அணுகுமுறையை ‘The Global Youth Letter’ அறிக்கை பயன்படுத்தியுள்ளது. குறித்த 23 நாடுகளிலும் காலநிலை மாற்றம் குறித்து இளைஞர்களின் வலுவான ஒருமித்த குரலைக் அது கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வானது பிரிட்டிஷ் கவுன்சிலின் ‘Climate Connection’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள உலகெங்கிலுமுள்ள மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிக்கையிடப்பட்ட இந்த ஆய்வானது 2021ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கிடையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வறிக்கையிலிருந்து கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்டு, காலநிலை மாற்றத்தை சூழ்ந்து காணப்படும், இளைஞர்களின் அபிலாஷைகளையும் பரிந்துரைகளையும் செயற்படுத்தும் செயற்திட்டமான, ‘Global Youth Letter’ எழுதப்பட்டுள்ளது. இக்கடிதம் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா.வின் காலநிலை மாற்ற சம்மேளனத்தின்போது (COP26), உலகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கப்படவுள்ளது.
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 25 வீதமான இளைஞர்கள் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களாவர். அத்துடன் 75 வீதமானோர் நகர்ப்புறங்களிலிருந்து வந்தவர்களாவர். பங்குபற்றியவர்களில் 55 வீதமானோர் பெண்களாவர். அத்துடன், மாற்றுத்திறனாளி இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தவர்கள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வழக்கமாக கவனிக்கத் தவறும் குழுக்களிடமிருந்தும் கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களில் 67 வீதமானோர் தங்கள் நாட்டுத் தலைவர்களால் தனித்து நின்று காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியாது என தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள காலநிலை மாற்றக் கொள்கையில், பெண்கள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் குரல்கள் பிரதிபலிக்கப்படவில்லையென அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காலநிலை கொள்கை முடிவுகளில் இளைஞர்களின் கருத்துகள் சேர்க்கப்பட வேண்டுமெனும் தொடர்ச்சியான கோரிக்கையை அறிக்கை கண்டறிந்துள்ளது. தங்கள் ஈடுபாடானது, காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கு அவசியமான புத்தாக்கம் கொண்ட யோசனைகளை முன்வைக்கவும், பரந்த, மிக பயனுள்ள வகையிலான அடைவைப் பெற உதவுமென இளைஞர்கள் கருதுகின்றனர். இளைஞர்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் மிக நடைமுறை ரீதியலானதும், உரிய வகையில் கட்டமைக்கப்பட்ட வழிகளிலும் கொள்கை வகுப்பாளர்கள் வழிநடாத்த வேண்டுமெனும் தெளிவான தேவையை இவ் ஆய்வின் கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன.
இளைஞர்கள் அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்யத் தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கின்ற போதிலும், பலருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லையென இவ்வறிக்கை கண்டறிந்துள்ளது. தங்கள் சமூகத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கும் திறனை தாங்கள் கொண்டுள்ளதாக 75 வீதமான இளைஞர்கள் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு (COP26) தொடர்பில் தாங்கள் அறிந்துள்ளதாக 63 வீதமானோரும் தெரிவித்துள்ளனர். ஆயினும், 69 வீதமானோர், தாங்கள் காலநிலை மாற்றம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் இதுவரை பங்கெடுக்கவில்லையென தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் அணுகலை அடைவதிலான வரையறுக்கப்பட்ட நிலை, மாறுபட்ட சமூக கலாச்சார படிநிலை காரணமாக இளைஞர்களை ஒதுக்கும் நிலை அத்துடன் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான அணுகலை அடைய முடியாத நிலை உள்ளிட்ட பல விடயங்கள், இளைஞர்கள் காலநிலை தொடர்பான நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு தடைகளாக அமைந்துள்ளன.
காலநிலை மாற்றத்தை இளைஞர்கள் எதிர்கொள்வதற்கான ஒரு கருவியாக டிஜிட்டல் சார்ந்த விடயங்களின் பங்கு மற்றும் அதன் அவசியத்தை இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஆயினும் ‘digital divide’ (டிஜிட்டல் பிளவு) காரணமாக, இணையத்தை அணுகுவதிலிருந்து அது ஒரு சிலரை தடுத்துள்ளது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமென அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் பற்றிய செய்திகளை தங்கள் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ளவும், தவறான தகவலை தடுக்கவும், தங்களை சுற்றி உள்ளோர் விளைபயனடையவும், ஒரு முக்கியமான தளமாக சமூக ஊடகங்களை இளைஞர்கள் பார்க்கின்றனர். இணைய வசதியற்ற, தொலைதூர பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
இக்கடிதத்தில் கையெழுத்திட இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு, அதன் மூலம் காலநிலை மாற்றத்தை அவர்கள் எதிர்கொள்ளவும் உறுதியளிக்கிறார்கள். அத்துடன் அவர்களால் முன்வைக்கப்படும் அவர்களது சொந்த பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும். பின்வரும் இணைய முகவரியின் ஊடாக கடிதத்தில் கையொப்பமிடலாம்: www.britishcouncil.org/climate-connection/get-involved/global-youth-letter
‘Global Youth Letter’ (உலகளாவிய இளைஞர் கடிதம்) செப்டம்பர் 09ஆம் திகதி இணைய வழியிலான நிகழ்வின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கடிதத்தின் உள்ளார்ந்த அம்சங்களானவை, கொள்கை வகுப்பாளர்களுடன் COP26 மாநாடு தொடர்பில் தற்போது கலந்துரையாடப்படுகின்ற விடயங்களில் செல்வாக்குச் செலுத்தும் என்பதுடன், இம்மாநாடு இடம்பெறும் காலப் பகுதியிலும் அது செல்வாக்குச் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
1,000 இற்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற ‘Perceptions of Young People on Climate Change and Action’ (காலநிலை மாற்றம் மற்றும் அதற்கான நடவடிக்கை தொடர்பான இளைஞர்களின் கருத்துக்கள்) எனும் ஆய்வில் கலந்து கொண்ட இலங்கையிலிருந்து பங்கேற்ற இளைஞர்களின் குரல்களும், ‘Global Youth Letter’ இல் உள்ளடக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் உணர்வுகளின் அடிப்படையில், இலங்கையில் உள்ள இளைஞர்கள் பொதுவாக காலநிலை மாற்றம் பற்றி அறிந்துள்ளார்கள். ஆயினும் பெரும்பாலானோருக்கு அது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான புரிதல் மற்றும் விரிவான விளக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் தொடர்பில் மேலும் அறிந்து கொள்ளவதற்கான குறிப்பிடும்படியான ஆர்வம் இளைஞர்களிடையே காண்படுகின்றது. அத்துடன் பெரும்பாலானோர் காலநிலை மாற்றம் குறித்த அவர்களின் கருத்துகளும் செயல்பாடுகளும் எதிர்காலத்தில் முக்கியம் பெறுமென நம்புகின்றனர். இம்மாற்றத்தை உருவாக்கி, காலநிலை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக, கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, வெற்றிகரமான நடைமுறைகளை பேணுவதன் மூலம், இச்செயற்பாட்டை ஊக்குவித்து அதனை எளிதாக்குவதற்கான ஒரு உறுதியான வழியை அடையலாம். இலங்கையிலுள்ள இளைஞர்கள் காலநிலை மாற்றத்திற்கான கூட்டு நடவடிக்கையை வரவேற்பதுடன், அதை ஒரு ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக அல்லாது சமூக பொறுப்பாக நோக்குகிறார்கள். முறையான மாற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான நடவடிக்கைகளின் தேவையின் அவசியத்தை அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரு சூழல்களிலும், அறிவாற்றல் தொடர்பான வளங்களை அணுக முடியாமை, கற்பித்தல் வளப் பற்றாக்குறை மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் குறைந்தளவிலான ஈடுபாடு ஆகியன, இளைஞர்களின் ஈடுபாடு தொடர்பில் காணப்படும் தடைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
‘Climate Connection’ திட்டத்தின் ஒரு பகுதியாக British Council Sri Lanka நிறுவனமானது, பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் நமது இளைஞர் தலைமைத்துவத் திட்டம் ஆகியன, சமூக மட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளைத் கையாள்வதற்கான முக்கிய ஊடகமாக தொடர்ந்து பயணிப்பதன் மூலம், சமூகத்தில் பாரியளவிலான உறுதியான மாற்றங்களைக் கொண்டு சேர்க்கும். கலை மற்றும் கலாச்சாரம், ஆங்கிலம், கல்வித் துறைகளில் எமது ஒட்டுமொத்த பணியின் மூலம், கொள்கை மட்டத்திலான காலநிலை நடவடிக்கைகளுக்கான தேசிய செயற்திட்டத்தில் செய்வினை பங்களிப்பினை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
British Council Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான Country Director, மர்யா ரஹ்மான் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்: “காலநிலை அவசரநிலை ஆனது, நமது பூமி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். எனவே பிரிட்டிஷ் கவுன்சில் ஆய்வானது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு இதில் முதலிடம் அளித்துள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. உலகத் தலைவர்களை அவசர நடவடிக்கைக்கு அழைப்பது தொடர்பான, Global Youth Letter கடிதத்தில் இதுவரை கையொப்பமிட்டுள்ள இலங்கை இளைஞர்கள் தொடர்பில் நான் பெருமிதமடைகிறேன். காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களில் இளைஞர்களின் குரல்களை செவிமடுப்பதன் முக்கியத்துவம் பற்றிய வலுவான செய்தியை இது எதிரொலிக்குமேன நான் நம்புகிறேன்.” என்றார்.
British Council நிறுவனத்தின் பிரதி பிரதான நிறைவேற்றதிகாரி கேட் எவர்ட்–பிக்ஸ் (Kate Ewart-Biggs) தெரிவிக்கையில், “காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் பங்களிப்பதில் உலகளாவிய ரீதியில் இளைஞர்களை பயன்படுத்தப்படாத நிலையை எமது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இளைஞர்களே நாளைய தலைவர்கள், நாளைய பொழுதில் செல்வாக்கு செலுத்துபவர்கள். அவர்களது எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கை முடிவுகளில் அவர்களை ஈடுபடுத்துவதன் அவசியத்தின் அடிப்படையில், அவர்களது குரல்கள் அரச தலைவர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகளை நாம் வழங்கியுள்ளோம். பிரிட்டிஷ் கவுன்சிலின் ‘Climate Connection’ பிரச்சாரத்தின் மூலம், நாம் எதிர்கொள்ளும் மிகப் பாரிய உலகளாவிய அவசரநிலையை எதிர்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அவசியமான புத்தாக்கம் தீர்வுகளைக் கண்டறியும் வகையில் கல்வி, கலை, கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றின் மூலம் எமது நிபுணத்துவத்தை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நவம்பர் 01 – 12ஆம் திகதி வரை இடம்பெறும் COP26 மாநாட்டை இங்கிலாந்து நடாத்துகிறது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கும் வகையில், பிரிட்டிஷ் கவுன்சிலானது அதன் உலகளாவிய வலையமைப்புகளைப் பயன்படுத்தி COP26 தொடர்பான இங்கிலாந்து அரசாங்கத்தின் இலட்சியத்திற்கு தனது ஆதரவை வழங்குகிறது.
– முற்றும் –
ஊடக தொடர்புகளுக்கு : சப்ரா அன்வர் 0777667527 அல்லது [email protected]
Climate Connection திட்டம் மற்றும் பிரச்சாரம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு : www.britishcouncil.lk/programmes/climate-connection
Global Youth Letter அறிக்கை பற்றி:
காலநிலை நடவடிக்கை தொடர்பான Global Youth Letter ஆனது, இந்நடவடிக்கைக்கான உலகளாவிய ரீதியிலான இளைஞர்களுக்கான அழைப்பாகும். இது COP26 – 26ஆவது ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு நேரடியாக எழுதப்பட்டுள்ளது.
இது British Council இற்கும் மற்றும் இலாப நோக்கமற்ற சமூக நிறுவனமான Catalyst in Communities இற்கும் இடையேயான ஒரு பாரிய அளவிலான ஆய்வு நடவடிக்கையின் விளைவாகும். Catalyst in Communities ஆனது, crowdsourcing உள்ளிட்ட கலப்பு அணுகுமுறையை பயன்படுத்தி 23 நாடுகளில் உள்ள 8,000 இளைஞர்களின் கருத்துகள், அனுபவங்கள், அபிலாஷைகள் உள்ளிட்ட தரவுகளை பெற்றது.
முடிந்தவரை பாலினம், பின்னணி, அமைவிடம் மற்றும் சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆய்வுக் குழுவானது உலகளாவிய கொவிட்-19 கட்டுப்பாடுகளைப் பேணியவாறு, காலநிலை தொடர்பான விவாதத்தின், இன்றைய இளைஞர்கள் எனும் செவிமடுக்கப்படாத குரலின் ஒலியை பெருக்கவும் செய்துள்ளது. அறிக்கையிடப்பட்ட இந்த ஆய்வானது 2021ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கிடையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலநிலை நடவடிக்கைக்கான Global Youth Letter உடன் வளர்ச்சியுறும் 8,000 பிரசாரமானது, பிரிட்டிஷ் கவுன்சிலின் Climate Connection திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது கலந்துரையாடல், ஒத்துழைப்பு, செயற்பாடு ஆகியவற்றுக்கான உலகளாவிய தளம் என்பதுடன், காலநிலை நெருக்கடி சார்ந்த பகிரப்பட்ட தீர்வுகள் மூலம் மில்லியன் கணக்கான மக்களை இணைக்கிறது.
இந்த ஒத்துழைப்பு அணுகுமுறையின் மையத்தில் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் குரல் உயர்த்துவதற்காக நாம் உதவுவதோடு, அர்த்தமுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கான திறன்களையும் அதற்கான வலையமைப்புகளையும் வழங்கி எமது பூமியில் உண்மையான மாற்றத்தை கொண்டு வர உதவுகிறோம்.
பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி
பிரிட்டிஷ் கவுன்சில் கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான இங்கிலாந்தின் சர்வதேச அமைப்பாகும். கலை மற்றும் கலாச்சாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி மூலம் இங்கிலாந்து மற்றும் ஏனைய நாடுகளின் மக்களிடையே இணைப்பை ஏற்படுத்தி, புரிதல் மற்றும் நம்பிக்கையை நாம் உருவாக்குகிறோம். 2019-2020 காலப் பகுதியில் நாம் 75 மில்லியனுக்கும் அதிகமான மக்களை நேரடியாகவும், 758 மில்லியன் மக்களை இணையவழி, ஒளிபரப்பு மற்றும் வெளியீடுகள் உள்ளிட்டவற்றின் மூலமும் சென்றடைந்துள்ளோம். 1934 இல் நிறுவப்பட்ட நாம், ரோயல் சாசனம் மற்றும் இங்கிலாந்து அரசு ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் இங்கிலாந்து தொண்டு அமைப்பாகும். நாம் இங்கிலாந்து அரசிடமிருந்து 14.5 வீத முக்கிய நிதி உதவியைப் பெறுகிறோம். மேலதிக தகவல்களுக்கு: www.britishcouncil.org
Recent Comments