அனைத்து இலங்கையர்களுக்கும் இலவச டெலிமெடிசின் சேவைகளை வழங்குவதன் மூலம் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் oDoc – HUTCH சுவ சரண

சுகாதாரத் துறைக்கு ஆதரவு வழங்கும் முன்னோடி முயற்சியாக, தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளின் மத்தியில் அனைத்து இலங்கையர்களுக்கும் டெலிமெடிசின் சேவைகளை இலவசமாக வழங்கும் சுவ சரண திட்டத்தை ஆரம்பிக்கும் பொருட்டு, Hutch நிறுவனமானது முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குனரான oDoc உடன் கைகோர்த்துள்ளது. இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மூலம், அனைத்து இலங்கையர்களும் எந்தவொரு மொபைல் வலையமைப்பின் மூலமாகவும் 078 8777222 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே இலவச மருத்துவ ஆலோசனையைப் பெற முடியும்.

oDoc – Hutch சுவ சரண சேவையானது மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு, SLMC இல் பதிவு செய்யப்பட்ட பொது மருத்துவருடன் தொலைபேசியின் ஊடாக சந்திப்பொன்றை ஒழுங்கு செய்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது. மருத்துவ ஆலோசனைகளுக்கு மேலதிகமாக, பாவனையாளர்கள் இந்த சேவையின் மூலம் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் மருந்துச்சீட்டுகளையும் பெறலாம்.

இந்த புதிய முயற்சி தொடர்பில் HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்து தெரிவிக்கையில், “டெலிமெடிசின் நாட்டிற்கு சேவை ஆற்றக்கூடிய, குறிப்பாக சுகாதாரத் துறைக்கு மேலதிக ஒத்துழைப்பு தேவைப்படும் இம் மாதிரியான சூழ்நிலையில் உதவக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இலங்கையர்கள் வீட்டினுள்ளேயே இருந்து  தகுதிவாய்ந்த மற்றும் நம்பிக்கைக்குரிய பொது மருத்துவரிடமிருந்து தேவையான ஆலோசனைகளையும் மருந்துச்சீட்டுகளையும் பெற இது முக்கிய பங்கு வகிக்கிறது. ODoc உடன் இணைந்து இந்த முயற்சியில் முன்னணியில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், இந்த தொற்றுநோய் நிலையின் போது அனைத்து இலங்கையர்களுக்கும் இலவச டெலிமெடிசின் அணுகலை வழங்குகிறோம்,”என்றார்.

HUTCH சந்தாதாரர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் தொடங்கப்பட்ட oDoc டெலிமெடிசின் சேவைகளை வழங்க, HUTCH மற்றும் oDoc இற்கு இடையிலான புரட்சிகர பங்குடமையின் விளைவாக  இந்த சரியான நேரத்தில் இம் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இச் சேவையானது ரூபா 199 + வரி என்ற அறிமுக கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

oDoc இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, ஹேஷான் பெர்ணாண்டோ கருத்து தெரிவிக்கையில்,”இந்த அவசரகால சூழ்நிலையில் நம் நாட்டுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கோவிட் -19 நெருக்கடியின் மத்தியில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெலிமெடிசின் என்பது காலத்தின் தேவை. எங்களுடன் HUTCH இணைந்திருப்பதால், எங்கள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் சுகாதார பராமரிப்பு வழங்குநர்களுக்கு ஒரு பெரிய உதவியை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் பங்காளர்களான பொது மருத்துவர்கள், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எந்நேரத்திலும் உதவ தயாராக உள்ளதுடன், 24/7 தொந்தரவு இல்லாத சேவைகளை நோயாளிகளுக்கு வழங்கவுள்ளனர். வீட்டில் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் இந்த இலவச சேவையைப் பெற அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்,” என்றார்.

Share

You may also like...