இ-ஸ்வாபிமானி 2020 இனை வெற்றிகரமாக முடித்து டிஜிற்றல் புத்தாக்கத்தின் சிறப்பைக் கொண்டாடும் ICTA
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆனது, நாட்டை டிஜிற்றல் உள்ளடக்கத்தை நோக்கி செலுத்துகிறது. சிறந்த டிஜிற்றல் புத்தாங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட, தேசிய டிஜிற்றல் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் விருதுகளான இ-ஸ்வாபிமானி 2020 இனை அண்மையில் நடாத்தியிருந்தது. இவ்விருது வழங்கும் விழாவில் மொத்தமாக 62 டிஜிற்றல் புத்தாக்கங்களின் கண்டுபிடிப்பாளர்கள் அங்கீகாரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
கொழும்பு ஹில்டனில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க கலந்து கொண்டதோடு, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா, ICTA தலைவர் பேராசிரியர் லலித் கமகே ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சமூக தாக்கத்துடன் டிஜிற்றல் புதுமைகளை அங்கீகரிக்கவும் அதனை கொண்டாடும் வகையிலும் இடம்பெற்ற இ-ஸ்வாபிமானி 2020, சுகாதார வழிகாட்டல்களைப் பேணியவாறு, தொடர்ச்சியாக 10ஆவது ஆண்டாக நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, இ-ஸ்வாபிமானி ஆனது, உள்நாட்டு திறமையாளர்களை ஊக்குவித்து, புதிய டிஜிற்றல் கண்டுபிடிப்புகளை தோற்றுவிப்பதற்கான தளத்தை வழங்குவதன் மூலம், அவர்கள் உலகளாவிய மட்டத்தை அடைவதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகின்றது. தற்போதுள்ள சவாலான சூழலிலும், இ-சுவாபிமானி 2020 இற்கு, அதிகளவிலான கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது போட்டியாளர்களிடையே ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுத்தது.
வெற்றியாளர்கள் உலக உச்சி மாநாடு விருதுகளுக்கு (World Summit Awards – WSA) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் தேசிய நிபுணராக ICTA செயல்படுவதோடு, அது தேசிய தேர்வுக்கு முன்னரான செயன்முறையை மேற்கொள்வதற்கும் வலியுறுத்தியுள்ளது. 2020 உலக உச்சி மாநாடு விருது விழாவில், இலங்கையின் ஏழு பரிந்துரைகளில் ஆறு பரிந்துரைகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவானதோடு, அதில் ஒரு தயாரிப்பு, அரச மற்றும் குடிமக்கள் ஈடுபாடு பிரிவின் கீழ் வெற்றியாளராக தெரிவாகியிருந்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இவ்விருது வழங்கும் விழாவின் போது, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்கா தெரிவிக்கையில், “உலகம் பல சவால்களை எதிர்கொள்கையில், புத்தாக்கவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தேவையை முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்கிறோம். இந்த பின்னணியில், இளம் கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரிப்பதிலும், அவர்களின் கண்டுபிடிப்புகளின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தவும் அவர்களுக்கு ஊக்கமளிப்பதில் ICT இற்கு மாபெரும் பங்கு உள்ளது. இ-ஸ்வாபிமானி என்பது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும் என்பதோடு, இவ்வாறான கண்டுபிடிப்பாளர்கள் தோன்றுவதற்கான தளத்தை தோற்றுவிக்கிறது. அனைத்து வெற்றியாளர்களையும் நான் வாழ்த்துவதோடு, சாத்தியமான தொழில்நுட்ப தீர்வுகள் மூலம், இக்கண்டுபிடிப்பாளர்களால் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றகரமாக மாற்ற முடியும் என்று நம்புகிறேன். ” என்றார்.
இவ்விழாவில் ICTA தலைவர் பேராசிரியர் லலித் கமகே தெரிவிக்கையில், “டிஜிற்றல் சட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், ஐ.சி.டி துறையை விரிவுபடுத்துவதன் மூலமும், முதல் அடி வைப்பவர்கள், புத்தாக்கவியலாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு இவ்வாறான அடித்தளத்தை வழங்குவதன் மூலமும் பல ஆண்டுகளாக, நாட்டை டிஜிற்றல் மாற்றத்தை நோக்கி நகர்த்துவதில் ICTA முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தாக்கவியலாளர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதற்கான மற்றொரு வெற்றிகரமான முயற்சியின் உச்சத்தை இன்று நாங்கள் கொண்டாடுகிறோம். இ-ஸ்வாபிமானி 2020 இன் அனைத்து வெற்றியாளர்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன், மேலும் அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமென்பதுவும் எனது விருப்பமுமாகும்” என்றார்.
அரச மற்றும் குடிமக்கள் ஈடுபாடு, சுகாதாரம் மற்றும் சுகவாழ்வு, கற்றல் மற்றும் கல்வி, சுற்றாடல் மற்றும் பசுமை வலு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, ஸ்மார்ட் குடியேற்றம் மற்றும் நகரமயமாக்கல், வணிகம் மற்றும் வர்த்தகம், உள்ளடக்கம் மற்றும் அதிகாரம், டிஜிற்றல் பொழுதுபோக்கு, இளைஞர் பிரிவு எனும் பிரிவுகளின் கீழ் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
டிஜிற்றல் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கும் டிஜிற்றல் மயமான உலகத்தை உருவாக்குவதற்கும் அவசியமான உதவியை வழங்கும் வகையில், Huawei Technologies (Pvt) Ltd நிறுவனம், இ-சுவாபிமானி 2020 நிகழ்விற்கான அனுசரணையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments