பயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்; CMTA எச்சரிக்கை

இலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders Association – CMTA), 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இலங்கையின் பயன்படுத்தப்பட்ட வாகனச் சந்தையுடன் தொடர்புடைய தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது. வாகன பயண தூரத்தை காண்பிக்கும் odometer (ஓடோமீட்டர்) மோசடிகள், போலியான உதிரி பாகங்களுடன் மீளுருவாக்கப்பட்ட வாகனங்கள், போலி ஆவணங்களைக் கொண்ட வாகனங்கள் உள்ளிட்ட பல மோசடிகளுக்கு, வாகன வாடிக்கையாளர்கள் சிக்கிக் கொள்கிறார்கள் என, சங்கம் கூறுகிறது. புதிய மற்றும் மீள் திருத்தப்பட்ட (re-conditioned) வாகன இறக்குமதி தடை காரணமாக, சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் சந்தை மதிப்பு மட்டற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இது மோசடி செயல்களுக்கு மேலும் மேலும் வழிவகுக்கிறது.

CMTA தலைவர் யசேந்ர அமரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனைச் சந்தையில் இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் நாங்கள் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். உண்மையில் 150,000 கி.மீ மைலேஜ் கொண்ட கார் ஒன்று அதன் மைலேஜ் 40,000 கி.மீ.க்கு மாற்றப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றது போன்ற பல நிகழ்வுகளை நாங்கள் அவதானித்து வருகிறோம். அதனை கொள்வனவு செய்யும் அப்பாவியான கொள்வனவாளர்கள், தங்கள் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தும் இத்தகைய மோசடிகளில் தொடர்ந்து சிக்கிக் கொள்வது துரதிர்ஷ்டவசமானது. எதிர்கால வாகன கொள்வனவாளர்களின் பாதுகாப்பு குறித்து நாம் தீவிரமாக அக்கறை கொண்டுள்ளதோடு, அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இவ்வாறான மோசடியான வாகனங்களில் முதலீடு செய்வதை நாம் விரும்பவில்லை.” என்றார்.

தற்போது பரவலாக காணப்படும் மோசடிகளாக ஓடோமீட்டர் மோசடிகள் காணப்படுகின்றன. ஒரு வாடிக்கையாளர் எப்போதும் குறைந்த மைலேஜ் கொண்ட ஒரு வாகனத்தையே கொள்வனவு செய்ய விரும்புகிறார். இந்த மோசடியானது, வாகனத்தை கொள்வனவு செய்தவர், அதற்கு உரிய காலத்தில் அவசியமான பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதற்கு வழியேற்படுத்துகிறது. இதன் காரணமாக உண்மையான வாகன மைலேஜின் காரணமான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களில் பிரச்சினைகள் எழுகின்றன.

சில கார் விநியோகத்தர்கள், சேதமடைந்த வாகனங்களை ஏலங்களிலிருந்து கொள்வனவு செய்து அல்லது குறைபாடுகளைக் கொண்ட வாகனங்களை கொள்வனவு செய்து, அவற்றை விற்பனை செய்யும் நோக்கத்தின் அடிப்படையில், அசல் உதிரி பாகங்களை பொருத்தாமல் அவற்றை திருத்தியமைக்கின்றனர். இவ்வாறான வாகனங்களின் உண்மையான நிலையை அறியாத, அதனை கொள்வனவு செய்யும் கொள்வனவாளர்களுக்கு இது பேராபத்தில் முடிகின்றது.

அங்கீகாரமளிக்கப்படாத வாகன விற்பனையாளர்களால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு வகையான மோசடி தொடர்பில் CMTA சுட்டிக்காட்டுகிறது. இதில் குறிப்பாக, போலி வாகன பதிவு ஆவணங்களுடனான, வாகனங்கள் விற்பனை செய்யப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான அடிப்படையின் கீழ் விற்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் திருடப்பட்ட வாகனங்களாகவும், வாடகை கார் நிறுவனங்களிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, போலி ஆவணங்களை தயாரித்து விற்கப்படும் வாகனங்களாக காணப்படுகின்றன. இச்சந்தர்ப்பத்தில், வாகனத்தின் உண்மையான உரிமையாளரும், அதனை கொள்வனவு செய்பவருமாகிய இரு தரப்பினரும் ஏமாற்றப்படுகிறார்கள்.

தற்போது காணப்படும், பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனைச் சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய மோசடிகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் CMTA ஆனது, ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகவரிடமிருந்து அல்லது நன்கு அறியப்பட்ட நபர் அல்லது நிறுவனத்திடமிருந்து, பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றது. இதன் மூலம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த முடியும்.

CMTA தலைவர் அமரசிங்க மேலும் தெரிவிக்கையில், “பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் கொள்வனவாளர்கள், எப்போதும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான சேவையை வழங்க உறுதியுடன் முன்னிற்கும், அங்கீகரிக்கப்பட்ட வாகன முகவர்களின் சேவைகளைப் பெற முன்வர வேண்டும் என்பதை நாங்கள் மிகவும் ஊக்குவிக்கிறோம். தற்போது, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையில் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அறிமுகமான ஒரு முகவரிடமிருந்து வாகனத்தைத் தெரிவு செய்ய வழி வகுக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், வாகனங்களை முழுமையாக பரிசோதித்து, வாடிக்கையாளரிடம் வாகனத்தை ஒப்படைப்பதற்கு முன்பு அசல் உதிரி பாகங்களைப் பயன்படுத்தி, தேவையான புதுப்பிப்புகளை மேற்கொள்வார்கள் என, நீங்கள் உறுதியாக நம்ப முடியும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விரிவான வாகன சோதனைகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன. ” என்றார்.

பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட முகவரிடமிருந்து மட்டுமே ஒரு வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான பரிந்துரையை CMTA வழங்குகிறது. உண்மையான மைலேஜ் உறுதிப்படுத்தலுடன், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாகனத்தை விற்பனை செய்வதற்கு முன்னர் விரிவாக அதனை சோதித்துப் பார்ப்பதால், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான முகவர்கள், பயன்படுத்திய வாகனங்களுக்கு கூட உத்தரவாதத்தை தொடர்ந்து வழங்குகிறார்கள். இது மிகவும் ஆறுதலளிக்கும் விடயமாக காணாப்படுகின்றது. ஏனெனில் பெரும்பாலான கொள்வனவாளர்களுக்கு அவர்களின் வாகனத்தின் கொள்வனவு தொடர்பான வரலாறு பற்றி எதுவும் தெரியாத நிலை காணப்படுகின்றது.

இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் மேற்கொள்ளப்படும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்கிறார்கள். அவர்கள் எப்போதும் உற்பத்தியாளர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, பழுதுபார்ப்பதற்காக உரிய கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துகிறார்கள். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கும் பொதுவான ஒரு விடயம், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறையாகும். இதனை, முறையாக நிறுவப்பட்ட உள்ளூர் நிறுவனங்கள் பேணி வருகின்றன. இலங்கையில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும், நாட்டில் நம்பகமான மற்றும் சிறந்த சேவை தரங்களை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களுக்கு மேலுள்ள நிறுவனங்களால் முறையாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA), இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை வாகனத் கைத்தொழிலின் குரலாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது பிராந்தியத்தில் மிக சிரேஷ்ட வாகன வர்த்தக சங்கமாகும் என்பதுடன், அனைத்து முக்கிய சர்வதேச வாகன உற்பத்தியாளர்களையும் அவர்களது முகவர்கள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. CMTA  உறுப்பினர்கள் பெரும்பாலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் அதே வேளையில், பொறியியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான சர்வதேச சிறந்த நடைமுறைகள் மூலம், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற மற்றும் வேலை செய்யக்கூடிய திறமையான குழாமை உருவாக்குகிறார்கள். CMTA உறுப்பினர்கள் அனைவரும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தியாளர்களால் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு, அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனங்கள், நேரடியாக தொழிற்சாலைகளிலிருந்து அனுப்பப்படுகின்றன, அவை உள்ளூர் எரிபொருள் தரத்தை பூர்த்தி செய்யும் என்ஜின்கள், உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அதிர்ச்சி உறுஞ்சிகள், உள்ளூர் காலநிலைகளுக்கா வடிவமைக்கப்பட்ட வாயு சீராக்கி (A/C) அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் தனித்துவ அம்சங்களுடன் ஒத்துழைக்கும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதன் மூலம், இலங்கை மக்களுக்கு முழு உத்தரவாதத்துடன் வாகனத்தின் தரம் மற்றும் முகவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

Share

You may also like...