அதிநவீன பயிற்சி நிலையங்களை ஸ்தாபிப்பதன் மூலம் இலங்கை இளைஞர்களை வலுவூட்டுவதற்கான கூட்டுமுயற்சி

Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் உள்ள அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC ஆனது, இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு உலகளாவிய தரத்திலான, திறமையான புனையுபவர்களாக சான்றளிக்கும் நிபுணத்துவத்தை வழங்கும் வகையில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்துடன் (DTET) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

Alumex PLC மற்றும் DTET ஆகியன, தொழில்துறையின் எப்போதும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு அதிநவீன மாதிரிப் பயிற்சி மையத்தை நிறுவி, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த முயற்சியை விரிவுபடுத்தும் வகையிலான உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதி மையங்களை நிறுவ எதிர்பார்த்துள்ளது.

இந்த அற்புதமான முயற்சியானது, தொழில்துறையின் புனைதல் தரத்தை உயர்த்த, முழுமையாக மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் மற்றும் அதிநவீன கட்டுருவாக்கல் நுட்பங்களுடன் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பாடத்திட்ட அறிவு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதன் மூலம், Alumex மற்றும் DTET ஆகியன நவீன பாதையில் வெற்றிபெற அடுத்த தலைமுறை புனையுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

Alumex நிறுவனத்துடனான கூட்டாண்மையானது, கட்டுருவாக்கத் துறையில் திறன்களை மேம்படுத்தவும், தொழில் தரத்தை உயர்த்தவும் உதவும் என்பதை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் ஒப்புக்கொள்கிறது. DTET ஆனது, நாடு முழுவதும் தங்கள் பயிற்சி மையங்களை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதோடு, இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் அறிவை வழங்குவதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்புமிக்க பங்களிப்பை மேற்கொள்ளும் பணியாளர் சக்தியாக அவர்களை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறார்கள் என நம்புகின்றது.

Alumex பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெதிவல இது தொடர்பில் தெரிவிக்கையில், “அலுமினியம் கட்டுருவாக்கத் துறையின் வளர்ச்சிக்கு Alumex ஆகிய நாம் ஆதரவளிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த விரிவான பயிற்சித் திட்டத்தின் மூலம், இளம் தலைமுறை உற்பத்தியாளர்களுக்கு சரியான தொழில்நுட்ப அறிவு, திறன்கள் மற்றும் விரைவாக முன்னேறுவதற்கான கருவிகளை நாம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குள் புத்தாக்கமான உணர்வை ஏற்படுத்துகிறோம்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இளைஞர்கள் உரிய அறிவைப் பெறுவது மாத்திரமின்றி, பொருளாதார ரீதியாகவும் முன்னேறக்கூடிய சூழலை வளர்க்கும் வகையில், கைவினைத்திறன் கல்வியில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை உருவாக்குவதற்கான எமது ஒருங்கிணைந்த முயற்சியாகும். இந்த முயற்சியின் மூலம், சமூக முன்னேற்றத்திற்கான சாத்தியங்களை நாம் வளர்த்து வருகிறோம். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பணிபுரியும் வாய்ப்புகள் மூலம், தனிநபர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதனையும் வலுவூட்டுகிறோம்.” என்றார்.

1998 ஆம் ஆண்டு சபுகஸ்கந்தவில் தனது அலுமினிய கைவினை உற்பத்தி பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, Alumex 25 வருடங்களுக்கும் மேலாக, உள்ளூர் உற்பத்தியாளர்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டலுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம், 20,000 இற்கும் மேற்பட்ட கட்டுருவாக்க உற்பத்தி தொழில்நுட்பவியலாளர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற்றுள்ளனர் என்பதுடன், தற்போது முழுமையாக பயிற்சி பெற்றவர்களாகவும், மும்முரமான கட்டுமானத் துறையின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறமையாளர்களாகவும் வளர்ந்துள்ளனர்.

Share

You may also like...