SLIM DIGIS 2.0 விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிக்கவுள்ள Sri Lanka Institute of Marketing

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கான தேசிய கற்கை நிறுவகமான Sri Lanka Institute of Marketing (SLIM), அதன் SLIM DIGIS 2.0 டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பினை புரட்சிகரமான ஒன்லைன் ஊடக நிகழ்வு மூலமாக அண்மையில் வெளியிட்டது. இந்நிகழ்வில் SLIM இன் தலைவர் திரு. ரொஷான் பெர்னாண்டோ, SLIM இன் உபதலைவர் மற்றும் SLIM DIGIS 2.0 விருதுகள் செயற்றிட்டத் தலைவர் திரு. நுவன் கமகே, SLIM இன் இணை உபதலைவர் திலங்கா அபேவர்தன, SLIM DIGIS 2.0 விருதுகள் திட்டக் குழுவின் தலைவர் திலான் விஜேசேகர, SLIM DIGIS 2.0 விருதுகள் விழாவின் நடுவர் குழுத் தலைவர் இமல் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். COVID-19 பரவலின் பின்னர் இடம்பெறவுள்ள SLIM கற்கை நிறுவகத்தின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வுகளில் முதலாவதாக DIGIS 2.0 டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருதுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இடம்பெறவுள்ள SLIM DIGIS 2.0 விருதுகள் நிகழ்வானது, இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் சிறந்த பங்களிப்பினை வழங்கும் நிறுவனங்களையும், புத்தாக்கமான பிரச்சாரங்களையும் இனங்கண்டு அவற்றுக்கான உரிய அங்கீகாரத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

SLIM DIGIS 2020 நிகழ்வில் பிரதான விருதுகள் மற்றும் சிறப்பு விருதுகள் ஆகிய இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன. பிரதான விருதுகள் பிரிவில், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், காப்புறுதி, தொலைத்தொடர்பு/ தகவல் தொழில்நுட்பம்/ இணையசேவை, பொழுதுபோக்கு/விருந்தோம்பல்/பிரயாணம் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற தொழிற்துறைகளிலான தலைசிறந்த சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கான விருதுகள் வழங்கப்படும். அத்தோடு, சர்வதேச பிரிவின் கீழ் சிறப்பு விருதுகளும் இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஏனைய உலக நாடுகளில் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை மேற்கொண்ட இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் சர்வதேச பிரிவின் சிறப்பு விருதுகளுக்கு தகுதிபெறுவதுடன், ஏனைய நிறுவனங்கள் சிறப்பு விருதுகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.

“டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்கின்ற நிலையில், டிஜிட்டல் சந்தைப்படுத்தலானது வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்  கருதப்படுகிறது. அந்தவகையில், புதுமையான கருவிகளைக் கொண்டு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் ஆதிக்கம் செலுத்துவதன் வாயிலாக நிறுவனங்களின் இலக்குகளை அடைவதில் இது முக்கிய வகிபாகத்தினைக் கொண்டுள்ளது.

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையில் முன்னணியில் திகழும் கற்கை நிறுவகம் என்ற வகையில், உள்நாட்டில் மட்டுமல்லாது உலக அரங்கிலும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் புத்தாக்கமான முயற்சிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை அடையாளப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொண்டுள்ளோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை நடாத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்று SLIM இன் தலைவர் திரு. ரொஷான் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும் புதிய சிறப்பு விருதுகளின் பட்டியலில்; சிறந்த SEO / SMS பிரச்சாரத்துக்கான விருது, சந்தைப்படுத்தல் துறையில் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாட்டுக்கான விருது, சிறந்த சந்தைப்படுத்தல் செயல்திறன் பிரச்சாரத்துக்கான விருது,  பொருளடக்கத் தளங்களின் சிறந்த பயன்பாட்டுக்கான விருது,  சிறந்த அனுபவ ரீதியான டிஜிட்டல் பிரச்சாரத்துக்கான விருது, சிறு வணிகங்களுக்கான சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்துக்கான விருது,  டிஜிட்டல் அல்லாத வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் துணிச்சல் விருது ஆகியவை உள்ளடங்குகின்றன. வெற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்படுவதுடன், பிரதான விருதுகள் மற்றும் சிறப்பு விருதுகள் ஆகிய இரண்டு பிரதான பிரிவுகளிலும் அதிக மதிப்பெண்களைப் பெறும் நிறுவனத்திற்கு Grand Prix விருது வழங்கப்படும்.

“டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் நிகழ்த்தும் அசாத்தியமான சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்முறை புதிய விருதுகளை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் சந்தைப்படுத்தல் துறையில் முன்னணியில் திகழும் கற்கை நிலையம் என்ற வகையில், அத்தகைய சாதனைகளுக்கான உரிய அங்கீகாரத்தினை வழங்குவது எமது கடமை என்று SLIM கருதுகிறது. இதன் மூலம், சந்தைப்படுத்தல் துறையிலுள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்கள் எதிர்காலத்திலும் புத்தாக்கமான மற்றும் புரட்சிகரமான பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கான ஒரு உந்துகோலாக இந்த விருதுகள் அமைகின்றன.”  என்று SLIM DIGIS 2.0 விருதுகள் செயற்றிட்டத் தலைவர் திரு. நுவன் கமகே குறிப்பிட்டார்.

SLIM DIGIS 2.0 விருதுகளுக்கான விண்ணப்பங்கள் அனுபவம் வாய்ந்த ஒரு சுயாதீனமான நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை காணொளி மூலமான விண்ணப்பங்களுக்கான உச்ச நேர வரம்பு 5 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாகக் காணப்படுவதுடன், அனைத்து போட்டியாளர்களும் ஒவ்வொரு தொடர்பாடல் பிரிவிலும் குறைந்தது ஒரு விரிவான உதாரணத்தினை நடுவர் குழுவின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

1970 ஆம் ஆண்டு Sri Lanka Institute of Marketing (SLIM) ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு, இலங்கையில் சந்தைப்படுத்தல் துறையின் அந்தஸ்தை மேம்படுத்துவதன் வாயிலாக, சந்தைப்படுத்தல் மேன்மையை ஊக்குவிக்கும் முயற்சிகளை அது முன்னெடுத்து வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டில் பாராளுமன்ற சட்ட மூலத்தின் ஊடாக SLIM ஆனது பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமாக ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், SLIM Nielsen Peoples Awards, Brands Excellence, NASCO மற்றும் Effie awards போன்ற, இலங்கையில் மிகவும் பிரபலமான மற்றும் நன்மதிப்பினை வென்ற விருது வழங்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்ற மற்றும் பிரதான அனுசரணையாளராகவும் SLIM திகழ்கிறது.

Share

You may also like...